

நடிகர் விஜய்யின் இறுதி திரைப்படமாக அறிவிக்கப்பட்டிருந்த 'ஜனநாயகன்' படத்திற்கு அதிக அளவில் எதிர்பார்ப்பு தமிழ்நாட்டில் இருந்தது. விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் தமிழ்நாட்டில் இருப்பதாலும் , அரசியலில் நுழைந்த அவர் இதற்கு மேல் படம் நடிக்க மாட்டேன் என்று பொதுவெளியில் கூறியதாலும் , ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டிருந்தது. மேலும் இந்தத் திரைப்படம் ஆந்திராவில் பாலகிருஷ்ணா நடிப்பில் பெரிய வெற்றியைப் பெற்ற 'பகவந்த் கேசரி'யின் ரீமேக் என்பதால் இன்னும் மதிப்பு கூடியது.
இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் , பாபி தியோல் , பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் , சதுரங்க வேட்டை புகழ் ஹெச்.வினோத் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். படத்தின் வியாபாரம் ஆரம்பத்தில் சூடுபிடித்திருந்த நிலையில் , அதன் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ₹120 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜீ டிவி நிறுவனம் ₹92 கோடிக்கு வாங்கியிருந்ததாக செய்திகள் கசிந்தன.
இந்நிலையில் விஜய்க்கு எப்போதும் செண்டிமண்டான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 9 ஆம் தேதிக்கு திரைப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) இந்த திரைப்படத்தில் ஏராளமான வன்முறை காட்சிகளும் , அரசியல் சார்ந்த கடுமையான வசனங்களும் இருப்பதாக கூறி படத்தினை மறு தணிக்கை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
ஜனநாயகன் படத்தில் வரும் பல காட்சிகள், தற்போது உள்ள நேரடி அரசியல் சூழலுடன் ஒத்துபோவதால், தணிக்கை வாரியம் கடுமையான நிபந்தனைகளை விதித்தது. இதுபோன்ற நிபந்தனைகளால் ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் கடும் சிக்கல்கள் ஏற்பட்டது. இதையடுத்து திரைப்படம் தணிக்கை வாரியத்திலேயே கிடப்பில் கிடந்ததால், முன்பு அறிவித்தபடி ஜனவரி 9 ஆம் தேதி பட வெளியீடு ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையில் தணிக்கை வாரியத்தின் நடைமுறைகளை எதிர்த்து , பட தயாரிப்பாளர் தரப்பு முதலில் உயர்நீதிமன்றத்தினை நாடியது .பின்னர் உச்சநீதிமன்றம் வரை இந்த வழக்கு சென்றுள்ளது. இதில் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்படாததால் , கடைசியாக தயாரிப்பு நிறுவனம் வழக்குகளை வாபஸ் பெற்றது. மேலும் தணிக்கை வாரியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு மறுதணிக்கை செய்ய கோரி விண்ணப்பித்துள்ளது.
ஓடிடி ஒப்பந்தத்தை ரத்து செய்த அமேசான் பிரைம்:
இந்நிலையில் , படத்தயாரிப்பு நிறுவனம் படத்தின் ரிலீஸை தேர்தலுக்கு பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தது. இப்படி படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே இருப்பதால் , படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் நிறுவனம் அந்த ஒப்பந்தத்தினை ரத்து செய்துள்ளது. பொதுவாக ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியான பிறகு, 3 அல்லது 4 வாரங்களுக்குள் ஓடிடியில் வெளியிடப்படும்.
இப்போதைக்கு ஜனநாயகன் திரைப்படம் வெளியாக வாய்ப்பில்லை, என்பதால் அமேசான் நிறுவனம் இந்த அதிரடியான முடிவினை எடுத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ததன் மூலம் அவர்கள் கொடுத்த ₹120 கோடி பணத்தினை தயாரிப்பாளர் தரப்பு திரும்ப வழங்க வேண்டி இருக்கும். இந்த ஒப்பந்தரத்து பட தயாரிப்பு நிறுவனத்தை மிகக் கடுமையான பொருளாதார சுமைக்கு ஆளாக்கும்.