

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே நிலவி வரும் கடுமையான போரால், உலகளவில் எரிபொருள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்தப் போரால், கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்மூஸ் நீரணையை ஈரான் அரசு மூடியது. இதன் காரணமாக பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து, விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது LPG கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மட்டுமே தேவையான அளவு கேஸ் சிலிண்டர் இருப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் LPG கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்ந்தால், மொபைல் சேவை மற்றும் இணைய சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்தியா ஆண்டுக்கு சுமார் 35% முதல் 41% வரை LPG-யை உற்பத்தி செய்கிறது. அதாவது 12.8 மில்லியன் மெட்ரிக் டன் LPG உள்நாட்டு உற்பத்தியில் இருந்து கிடைக்கிறது. இந்நிலையில் LPG உற்பத்தி அளவை மேலும் 10% அதிகப்படுத்த வேண்டும் என மத்திய அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
LPG கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு நகரங்களில் ஹோட்டல்கள் மூடப்பட்டு வரும் நிலையில், சில ஹோட்டல்கள் விறகு அடுப்பு சமையலுக்கு மாறி வருகின்றன. மேலும் CNG-யில் இயங்கும் ஆட்டோ மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு LPG கேஸ் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பொதுமக்களுக்கு மற்றுமொரு பேரதிர்ச்சியாக இணைய சேவை மற்றும் மொபைல் சேவையும் பாதிக்கப்படும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் மொபைல் போனில் இணைய வசதியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் இணைய சேவை பாதிக்கப்பட்டால் அது ஒட்டுமொத்த இந்தியாவையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான செல்போன் கோபுரங்கள் மற்றும் டேட்டா சென்டர்கள் எல்பிஜி கேஸ் மூலமாகவே இயங்கி வருகின்றன. இந்நிலையில் கேஸ் தட்டுப்பாடு நீடித்தால், இவை அனைத்தும் முடங்கும் அபாயம் ஏற்படும்.
சற்றுமுன் கிடைத்த அதிகாரப்பூர்வ தகவலின் படி, ஹார்மூஸ் நீரிணை வழியாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து குஜராத் நோக்கி வந்த இந்திய கப்பலை ஈரான் அரசு தாக்கியதில் மூன்று மாலுமிகள் உயிரிழந்தனர்.
இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது ஹார்மூஸ் நீரிணை வழியாக இந்திய கப்பல்கள் செல்வதற்கு அனுமதி அளித்துள்ளது ஈரான். இந்த அனுமதியைத் தொடர்ந்து, இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.