பிபாஷா பாசுவின் நம்பிக்கை!

பாலிவுட் பூமராங்!
பிபாஷா பாசுவின் நம்பிக்கை!

பாலிவுட் முன்னணி நடிகையான பிபாஷா பாசுவிற்கு சென்ற வருடம் நவம்பர் மாதம் பெண் குழந்தை பிறக்க, குழந்தைக்கு தேவி எனப் பெயரிட்டார். தேவி பிறக்கும்போதே இதயத்தில் இரு ஓட்டைகள் இருந்ததெனவும், அவை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டதெனவும் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறிய விபரங்கள்:

“தேவியின் இதயத்தில் இரண்டு ஓட்டைகள் இருப்பது அவர் பிறந்த மூன்றாம் நாளிலேயே தெரியவந்தது. பிஞ்சுக் குழந்தை எவ்வாறு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்வதெனக் கவலையாக இருந்தது. 3ஆவது மாதம் ஸ்கேன் எடுத்தபின், பிரச்சினை குறித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தேன். அறுவை சிகிச்சை அவசியமென டாக்டர்கள் கூறினார்கள். இதை ஏற்றுக்கொள்ள எனது காதல் கணவர் கரண்சிங் குரோவர் தயாராக இல்லை. எனக்கும் மிகவும் கஷ்டமாக இருந்ததால் குடும்பத்தாரிடம் கூறவில்லை. என் தேவிக்கு இருக்கும் பிரச்னை தீர்ந்தால் போதுமென்று அமைதி காத்தேன். கணவரை வேண்டினேன். அச்சமயம் தேவி மூன்று மாதக் குழந்தை. தேவிக்கு பத்து டாக்டர்கள் இணைந்து சுமார் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை நடத்தினார்கள். அச்சமயம் உலகமே நின்றுவிட்டது போல எனக்கு இருந்தது. கடவுள் அருளால், தேவிக்கு நல்லவிதமாக அறுவை சிகிச்சை நடந்து, அவள் இப்போது நன்றாக இருக்கிறாள். இதேபோல் என்றும் நன்றாக இருப்பாளென்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”

தாயார் வயது 40; மகன் வயது 39!

லையாளத்தில் வெளியான ‘ப்ரோ டாடி படத்தை பிருத்விராஜ் இயக்கி நடித்தும் இருந்தார். இதில் மோகன்லால், ஹீரோ பிருத்விராஜுக்கு அப்பா வேடத்திலும், மீனா அம்மா வேடத்திலும் நடித்திருந்தார்கள். கல்யாணி பிரியதர்ஷன், பிருத்விராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது.

மோகன்லால் கேரக்டரில் சிரஞ்சீவியும், மகனாக சர்வானந்த்தும் நடிக்கிறார்கள். சர்வானந்துக்கு ஜோடி ஸ்ரீலீலா.

இந்தப் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக, 39 வயதாகும் சர்வானத்துக்கு அம்மாவாக 40 வயதாகும் திரிஷா நடிக்கவிருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தெலுங்கில் நடிக்கவிருக்கும் திரிஷா, தன்னைவிட ஒரு வயதே குறைந்த சர்வானந்துக்கு அம்மாவாக நடிப்பது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்ய, நெடிசன்கள் சமூக வலைத்தளங்களில் இது குறித்து விமரிசித்து வருகின்றனர்.

சினிமா உலகமே தனி. 70 வயது ஹீரோக்களுக்கு ஜோடியாக 25 – 30 வயது உள்ள ஹீரோயின்கள்,  மேற்படி 40 வயது அம்மா – 39 வயது மகன் என எல்லாமே சகஜம்தான்!

தவறான தகவல் தர வேண்டாம் ப்ளீஸ்!

‘மயோசிடிஸ்’ நோய் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நடிகை சமந்தா தீவிர சிகிச்சை பெற்ற பின் சற்றே உடல்நிலை தேறினார். விஜய் தேவரகொண்டாவின் ஜோடியாக ‘குஷி’ படத்திலும், இந்தி ‘சிட்டாடல்’ வெப் தொடரிலும் நடித்து முடித்தவர், மீண்டும் சிகிச்சை பெற ஒரு வருட காலம் அமெரிக்கா செல்கிறார்.

இவரின் மருத்துவ செலவுகளுக்காக, பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரிடம் `  25 கோடி கடன் வாங்கியதாக தகவல் வெளிவர, இதையறிந்த சமந்தா கோபமடைந்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில்:

“ 25 கோடி எனது சிகிச்சை செலவிற்கா? பிறரிடம் பணம் கடனாக வாங்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது. நான் எனது பணி மூலம் நன்றாக சம்பாதித்து வைத்திருக்கிறேன். என்னால் என்னைக் கவனித்துக் கொள்ள முடியும். என் மருத்துவ சிகிச்சை தொடர்பான செய்திகளை வெளியிடுகையில் சற்று பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள். தவறான தகவலைப் பரப்ப வேண்டாம்.” நியாயமான கோபம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com