

இருபதைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அர்ஜுன்- அபிராமி இணைந்து வானவில் என்ற படத்தில் நடித்தார்கள். கால் நூற்றாண்டுகள் கழித்து தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து பிளாஸ்ட் (Blast) என்ற படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தை சுபாஷ் கே. ராஜ் இயக்கி உள்ளார்.
அர்ஜுன் கராத்தே மாஸ்டர் ஆக இருக்கிறார். இவரது மகள் பிரீத்தியும், மனைவி அபிராமி இருவரும் கராத்தே தெரிந்தவர்கள். ஜான் கொக்கன் மிகப்பெரிய தொழிலதிபர். ஒரு பெரிய ப்ராஜெக்ட் தனக்கு கிடைக்க 1000 கோடி ரூபாயை ஒரு அரசியல் வாதிக்கு தர முயற்சி செய்கிறார். இந்த காரியத்தை செய்து முடிக்க பவன் மற்றும் அர்ஜுன் சிதம்பரத்தின் உதவியை நாடுகிறார். இவர்கள் இருவரும் இந்த முயற்சியை செய்யும் போது எதிர்பாரத விதமாக நிகழும் ஒரு மோதலில் இவர்களின் ஆட்களை அர்ஜுன் குடும்பதில் உள்ளவர்கள் கொன்று வீட்டின் பின் புறம் புதைத்து விடுகிறார்கள். இந்த கொலையை கண்டுபிடிக்க முடிந்ததா? ஆயிரம் கோடி பணம் என்ன ஆனது என்று சொல்கிறது அடுத்தடுத்த காட்சிகள்.
படம் தொடங்கி பரபர என காட்சிகள் நகர்கிறது. கதையும், காட்சிகள் நகரும் விதமும் ஹீரோவை சுற்றி இல்லாமல் மாறாக மூன்று வில்லன்களை சுற்றி நகர்வது வித்தியாசமாக 'ரசிக்கும்படி' இருக்கிறது.
சண்டைக் காட்சிகள் நீளமாகவும் அதே சமயத்தில் ரசிக்கும்படி சிறப்பாக படமாக்க பட்டுள்ளது. படத்தின் சண்டை பயிற்சியாளர் மிகவும் அதிகமாக உழைத்து இருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அர்ஜுன் தான் இன்னமும் ஆக்ஷன் கிங் என்பதை உணர்த்தி இருக்கிறார். பைட் சீன்களில் அர்ஜுன் ஜென்டில்மேன், முதல்வன் படத்தை நினைவுபடுத்துகிறார். ஒரு கராத்தே மாஸ்டராக தன் பெண்ணிற்கு தைரியம் தரும் அப்பாவாக சிறப்பாக நடத்தி இருக்கிறார்.
ஹீரோயின்கள் வழக்கமாக செய்யும் காதல் டூயட் என்று இல்லாமல் ஆக்ஷனில் அதகளம் செய்து உள்ளார் ஹீரோயின் ப்ரீத்தா முகுந்த். ஒரு அம்மாவாக ஒரு வித பதைபதைப்பும் அதே சமயத்தில் ஆக்சன் காட்சிகளில் தூள் பறக்கவும் செய்திருக்கிறார் இன்னொரு ஹீரோயின் அபிராமி.
படத்தை பரபரப்பாக நகர்த்தி செல்வதில் எடிட்டிங் மிக முக்கிய பங்காற்றி இருக்கிறது. சில இடங்களில் வரும் லாஜிக் மீறல்களை மறக்கடிக்க செய்வது இந்த படத்தொகுப்பு தான்.
உட்கார்ந்த இடத்திலிருந்து யோசிக்கும் கார்ப்பரேட் வில்லனாக ஜான் கொக்கன், சீனியர் ரவுடியாக அமைதியாக வரும் பவன், பரபரப்பாக நடிக்கும் அருண் சிதம்பரம் என மூன்று வில்லன்களும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.
ரவி பஷ்ரூர் இசை படத்தின் பரபரப்பிற்கு தீனி போடுகிறது.
சர்வைவல் ஆக்ஷன் திரில்லர் வகையில் இந்த படம் அமைந்துள்ளது. சிறந்த நடிகர்கள் தேர்வு, அதற்கேற்றார் போல் நடிப்பு, காட்சிகள் நகரும் விதம், படத்தொகுப்பு, ஆக்சன் இவை அனைத்தும் சிறப்பாக இருந்தும் ஆங்காங்கே சில லாஜிக் மீறல்கள் இருப்பது ஒரு குறையே.
இருப்பினும் இந்த படத்தை குடும்பத்துடன் கண்டு ரசிக்கலாம். இது 'சம்மர் பிளாஸ்ட்'.