"கோபம் அழிவை தரும், நிதானம் கற்றுக் கொடுக்கும் " என்ற யோசிக்க வைக்கும் வசனங்களை கொண்டதாக வந்துள்ளது ப்ளூ ஸ்டார் திரைப்படம். பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ஜெயக்குமார் இயக்கி உள்ளார்.தமிழ் பிரபா திரைக்கதை வசனம் அமைத்துள்ளார்.
அரக்கோணம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ப்ளூ ஸ்டார் என்ற கிரிக்கெட் குழுவின் கேப்டன் (அசோக் செல்வன் ) தான் ஒரு விளிம்பு நிலை சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் பல்வேறு அவமானங்களையும், பிரச்சனை களையும் சந்திக்கிறார். குறிப்பாக ஆல்பா என்ற ஆதிக்க ஜாதி கிரிக்கெட் குழு கேப்டனால் (சாந்தனு) அதிகம் அவமானப்படுத்தப்படுகிறார். இந்த இருவரையும், திருத்தணியில் உள்ள ஒரு பணக்கார கிரிக்கெட் கிளப் உள்ளே விட அனுமதி மறுக்கிறது. ப்ளூ ஸ்டார், ஆல்பா இந்த இருவரும் இணைந்து இந்த பணக்கார கிளப்புடன் மோதுவதுதான் ப்ளூ ஸ்டார் கதை.
இந்த விளையாட்டு துறையில் உள்ள அரசியல் மற்றும் வர்க பேதங்களை ஒரு சிறு நகராத்தின் வழியே புரிய வைத்து வெற்றி பெற்று இருக்கிறார் ஜெயக்குமார். அரக்கோணம் நகரத்தின் அடையாளமாக இருக்கும் ரயிலும், ரயில் ஓசை மற்றும் அம்பேத்கார் சிலையும் ஒரு கேரக்டர் போல் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் முடிவு நமக்கு முன் கூட்டியே அனுமானம் செய்ய முடிந்தால் கூட காட்சிகள் நகரும் விதத்தில் குறிப்பாக அணிகள் மோதும் கிரிக்கெட் மேட்ச் நம்மை வியக்க வைக்கிறது.
அசோக் செல்வன் சரியான தேர்வு என்பதை முதல் காட்சியிலேயே புரிய வைத்து விடுகிறார்.புறக்கணிப்பின் வலிகளை உள்வாங்கி நடித்துள்ளார். படத்தில் இன்னொரு ஹீரோ என்று சொல்லும் அளவிற்கு பகவதியின் நடிப்பு உள்ளது. சாந்தனுவுக்கு நீண்ட இடைவெளிக்கு பின்பு திறமையை வெளிப்படுத்த இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது இதை சரியாக பயன்படுத்தி கொண்டு விட்டார் என்றே சொல்ல தோன்றுகிறது.
ஒரு சராசரி பெண் காதல் கொள்ளும் போது சமூகம் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை உள்வாங்கி நடித்துள்ளார் கீர்த்தி பாண்டியன். தமிழ் அ. அழகனின் ஒளிப்பதிவு ஒரு லைவ் கிரிக்கெட் மேட்ச் பார்த்த உணர்வை தருகிறது. கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது.
இந்தியாவில் விளையாட்டு என்பது விளையாட்டு மட்டுமல்ல.ஜாதி, வர்க பின்னணியில் பின்னப்பட்ட ஒரு அரசியல் என்பதை மறைமுகமாக இல்லாமல் நேரடியாக சொல்லியிருக்கிறது ப்ளூ ஸ்டார்.