சிறு வயதிலிருந்து உழைப்பவர்களுக்கு கூட கிரிக்கெட் துறையில் உச்சம் தொடுவதற்கான வாய்ப்பு சில சமயம் அமைவதில்லை. என்னத்தான் திறமை பேசினாலும் சில சமயம் அதிர்ஷ்டம் என்பதும் வேலை செய்யவேண்டும். இன்னும் சிலருக்கு தன்னுடைய லட்சியத்தை மீறி காலம் ஒரு லட்சியத்தை அவர்களுக்காக வைத்திருக்கும். அப்படி தான் சிறுவயதில் கிரிக்கெட் துறையில் நுழைவோமா என்பதுக்கூட தெரியாமல் இப்போது அதில் உச்சம் தொட்ட அக்சர் படேலின் கிரிக்கெட் பயணத்தைப் பற்றி பார்ப்போம்.
அக்சர் படேல் 1994ம் ஆண்டு குஜராத்தில் உள்ள நாடியாத் என்ற இடத்தில் பிறந்தவர். பொதுவாக அக்சர் படேல் சிறு வயதிலிருந்தே அனைத்து விளையாட்டுகளையும் விரும்பி விளையாடுபவர். ஆனால் படிப்பில் சிறந்து விளங்கிய அவருடைய இலட்சியம் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆக வேண்டும் என்பதுதான். இந்த இலட்சியத்திற்கு நடுவில் ஒன்பதாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஒருமுறை பள்ளிகளுக்குள் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் அவருடைய பள்ளி அணியில் ஒரு ஆள் குறைவாக இருந்தது.
அப்போது அக்சரின் நண்பர் அக்சரை அணியில் உப்புக்கு சப்பானியாக இருக்குமாறு அழைத்துச் சென்றார். அப்போட்டியில் மட்டையைப் பிடித்த அந்த ஒரு நொடி அவர் வாழ்வையே மாற்றிவிட்டது. அந்த நொடித்தான் இன்ஜினியர் இலட்சியத்தை விட காரணமானது. அந்த நொடித்தான் கிரிக்கெட்டை என்ன ஆனாலும் விடவே கூடாது என்ற எண்ணம் தோன்ற காரணமானது. அவரின் இந்த இலட்சியத்திற்கு முழு துணையாக இருந்தவர் அவருடைய தந்தை. அதேபோல் அக்சரின் பாட்டிக்கு தனது வாழ்வில் ஏற்பட்ட முதல் இலட்சியம் என்றால் அது அக்சர் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பதுதான்.
அந்தவகையில் 2013ம் ஆண்டு அக்சர் அண்டர் 19 தொடரில் குஜராத் அணியில் அறிமுகமானார். டெல்லியை எதிர்த்து விளையாடிய அந்த தொடரின் இரண்டாவது போட்டியில் 6 விக்கெட்டுகள் எடுத்து அறிமுக தொடரிலேயே தான் யார் என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் பதிய வைத்தார் அக்சர்.
அப்போட்டியிலேயே காலில் காயம் ஏற்பட்டு அந்த தொடர் முழுவதிலும் இருந்து வெளியேறினார், அக்சர். அந்த காயத்தால் ஏற்பட்ட வலியால் கிரிக்கெட்டையே விட்டு விடலாம் என்ற அளவிற்கு அக்சர் நினைத்தார். அக்சர் சிறிது காலம் மிகவும் உடல் வலிமையிழந்தவராக இருந்தார். அவரது குடும்ப சூழ்நிலையால் ஜிம்மிற்கு போகவும் வசதியில்லை. ஆகையால் கிரிக்கெட் விளையாடும்போது ஏற்பட்ட உடல்வலிமையை எண்ணிப் பார்த்தப்பின் தனது வலிகளை மறந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார், அக்சர்.
பின்னர் 2013 – 2014 க்கான ரஞ்சி ட்ராபியில், அந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார் அக்சர். 2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் அறிமுகமான அக்சர் மொத்தம் 17 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இந்த தொடரில் பஞ்சாப் அணி ரன்னர் ஆனது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் அக்சர் 2014ம் ஆண்டு பங்களாதேஷை எதிர்த்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்கினார் . அப்போட்டியில் வெறும் 59 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். அக்சர் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்று ஆசைப்பட்ட அவரது பாட்டி அதைப் பார்க்காமலே இயற்கை எய்தினார். அவரின் இறுதிச் சடங்குக்கு கூட செல்ல முடியாத நிலைக்கு அக்சர் தள்ளப்பட்டார்.
அதன்பின்னர் 2015ம் ஆண்டு ஜிம்பாப்வே எதிர்த்து டி20 இந்திய அணியில் அறிமுகமான அக்சர் அந்த தொடரில் ஆட்ட வீரர் பட்டத்தைப் பெற்றார். அதேபோல் 2019ம் ஆண்டு உலக கோப்பைத் தொடரில் அறிமுகமானார். அந்த ஆண்டே இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதுவரை அக்சர் 12 டெஸ்ட் தொடர்களில் 50 விக்கெட்டுகளும் 53 ஒருநாள் தொடரில் 58 விக்கெட்டுகளும் 40 டி20 போட்டிகளில் 37 விக்கெட்டுகளும் எடுத்து விளையாடும் இடமெல்லாம் சிறந்த பந்து வீச்சாளர் என்ற பட்டங்களை குவித்து வருகிறார் .இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்சர் படேல் இந்திய அணியில் தவிர்க்க முடியாத ஒரு கிரிக்கெட்டராகவே வலம் வருகிறார்.