சமையல் கற்றுக் கொண்ட பாலிவுட் பாட்ஷா - காரணம் என்ன தெரியுமா?

Sharukh Khan
Sharukh Khan
Published on

எந்த ஒரு வெற்றியாளருக்கும் கடுமையான சூழல் ஒன்று நிச்சயமாக வரும். அந்நிலையில் நாம் எடுக்கும் முடிவுகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இப்படியொரு நிலையில் தான் பாலிவுட்டின் கிங் ஷாருக்கான் சமையலைக் கற்றுக் கொண்டாராம். இந்திய பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்தவர், ஏன் சமையல் கற்றுக் கொண்டார் எனத் தெரியுமா? வாங்க தெரிந்து கொள்ளலாம்.

பாலிவுட் சினிமாவில் தனக்கென தனியிடத்தையும், ரசிகர் பட்டாளத்தையும் பிடிக்க கடுமையாக போராடியவர் நடிகர் ஷாருக்கான். ஆரம்ப காலத்தில் சினிமா வாய்ப்புக்காக ஏங்கியவர் தான், இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகராகவும், பாக்ஸ் ஆபிஸ் மன்னனாகவும் திகழ்கிறார்.

ஷாருக்கான் நடிப்பில் பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தாலும், சில திரைப்படங்கள் தோல்வியைத் தழுவின. அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது 2018 ஆம் ஆண்டில் வெளியான ஜீரோ திரைப்படம். ஏனெனில், சுமார் 200 கோடி ரூபாய் பொருள் செலவில் உருவாகி, பெருவெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படம் வெறும் ரூ.186 கோடியை மட்டுமே வசூலித்ததால் படம் தோல்வியின் பிடியில் சிக்கியது. இதனால் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளான ஷாருக்கான், இனிமேல் மக்கள் எனது திரைப்படங்களை ரசிக்க மாட்டார்கள் என கவலையில் ஆழ்ந்தார்.

இப்படத்தின் தோல்விக்குப் பிறகு, சில மாதங்களில் கொரோனா வைரஸின் தாக்கமும் அதிகரித்து இருந்தது. பட வாய்ப்பும் குறைந்து, ஊரடங்கில் வெளியில் செல்ல முடியாத சூழலில் தனது முழு நேரத்தையும் குடும்பத்துடன் செலவிட்டார் ஷாருக்கான். 'இந்த காலகட்டம் நல்லவை மற்றும் கெட்டவை ஆகிய இரண்டையும் கொடுத்திருக்கிறது. இருப்பினும், எனது அடுத்தடுத்த படங்களை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்களோ என்ற சந்தேகம் எனக்கு இருந்தது' என ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
பாலிவுட் பாட்ஷாவை பெருமைப்படுத்திய பாரீஸ் மியூசியம்!
Sharukh Khan

இனி சினிமாவில் தனக்கான இடம் பறிபோய் விட்டது என்ற விரக்தியில், அடுத்து என்ன செய்வது என சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் உணவகம் ஒன்றைத் தொடங்கலாம் என்று எண்ணம் ஷாருக்கானிற்குத் தோன்றியதாம். இதற்காகவே இத்தாலிய உணவுகளை சமைக்கக் கற்றுக் கொண்டுள்ளார். ஆனால், அதன்பிறகு நடந்த கதையே வேறு. ஷாருக்கான் நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று.

எந்த மக்கள் தன்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தாரோ, அதே மக்கள்தான் கடந்த ஆண்டில் பதான், டங்கி மற்றும் ஜவான் ஆகிய மூன்று படங்களையும் கொண்டாடித் தீர்த்தனர். இதில் பதான் மற்றும் ஜவான் ஆகிய படங்கள் ரூ.1,000 கோடி வசூலைப் பெற்று, மீண்டும் ஒருமுறை ஷாருக்கானை வசூல் சக்கரவர்த்தி என்று நிரூபித்தன. ஒருவேளை இப்படங்களும் தோல்வியைச் சந்தித்து இருந்தால், ஷாருக்கான் நிச்சயமாக உணவகத்தை திறந்து இருப்பார். ஆனால் இவரது திரைப்படங்கள் மெகா வெற்றியைப் பதிவு செய்தது மட்டுமின்றி, பாலிவுட்டையும் முன்னேற்றி விட்டது.

வெற்றி, தோல்வி என்றும் நிலையானது அல்ல; இருப்பினும் நமது விடாமுயற்சிக்கு வெற்றிக் கதவுகள் திறக்கும் என்பதை ஷாருக்கான் நமக்கு உணர்த்தி விட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com