பாலிவுட் பாட்ஷாவை பெருமைப்படுத்திய பாரீஸ் மியூசியம்!

Sharukh Khan
Sharukh Khan
Published on

இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் பிரபலமான நடிகராக ஷாருக்கான் இருக்கிறார். இவரது சினிமா சாதனைகளை பெருமைப்படுத்தும் விதமாக பாரீஸில் உள்ள ஒரு மியூசியம், ஷாருக்கான் உருவம் பொறித்த தங்க நாணயத்தை வெளியிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்போது காண்போம்‌.

இந்தியத் திரைப்படங்களில் பாலிவுட் எனப்படும் இந்திப் படங்களுக்குத் தான் முன்பு அதிக மவுசு இருந்தது. இருப்பினும் சில ஆண்டுகளாக பாலிவுட் படங்கள் எதுவும் சரியான அளவில் வரவேற்பை பெறவில்லை. அதற்கேற்ப இப்போது தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் பாலிவுட்டை மிஞ்சும் அளவிற்கு வளர்ந்து விட்டன. இதற்கு சான்றாக பாகுபலி, ஆர்ஆர்ஆர் மற்றும் கேஜிஎஃப் போன்ற படங்களைச் சொல்லலாம். பாலிவுட் சினிமா மீண்டும் பழைய நிலைமைக்கு மீண்டு வருமா என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் காத்துக் கிடந்தனர். இவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக கடந்த ஆண்டு பதான் படத்தின் ரூ.1,000 கோடி வசூல் மூலம் பதிலளித்தார் பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான்.

பதான் படத்திற்குப் பிறகு இவர் நடித்த டங்கி திரைப்படம் ரூ.500 கோடி வசூலும், ஜவான் திரைப்படம் ரூ.1,000 கோடி வசூலையும் பெற்று படுத்துக் கிடந்த பாலிவுட்டை தலைநிமிர வைத்த பெருமை ஷாருக்கானையே சேரும். பாலிவுட்டில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இவரது திரைப்படங்கள் ரூ.2,500 கோடிக்கும் மேலாக வசூலித்து பாக்ஸ் ஆபிஸை அதிரச் செய்தது. பாலிவுட்டை பார் போற்றும் வகையில் சிறப்பானதாக மாற்றிய ஷாருக்கானை உலக நாடுகள் கண்டு கொள்ளாமல் இருக்குமா!

ஷாருக்கான் சினிமாவில் செய்த சாதனைகளை பெருமைப்படுத்தியுள்ளது பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் உள்ள கிரவீன் மியூசியம். ஷாருக்கான் உருவம் பொறித்த தங்க நாணயத்தை வெளியிட்டு இந்த மியூசியம் சிறப்பித்துள்ளது. இந்திய நடிகர்களில் ஷாருக்கான் தான் முதன்முதலாக இந்தப் பெருமையைப் பெறுகிறார். இதனை அறிந்த பிரபலங்கள் பலரும் ஷாருக்கானிற்கு வாழ்த்து மழையைப் பொழிகின்றனர்.

ஷாருக்கானை வெளிநாடுகள் பெருமைப்படுத்துவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே இந்தியா உள்பட ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஷாருக்கானிற்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. கிரவீன் மியூசியம் கூட ஒரு மெழுகு சிலை மியூசியம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற இருக்கும் லோகார்னோ திரைப்பட விழாவில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
முன்னேற்றப் பாதையில் மலையாள சினிமா!
Sharukh Khan

பாலிவுட்டின் 'கிங்' என்றும் இவர் புகழப்படுகிறார். இவரது சினிமா பயணம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இனி வரும் காலங்களில் இவருடைய படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இன்னமும் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரைப்படம் தவிர்த்து விளம்பரங்களிலும் நடித்து வரும் ஷாருக்கான், ரெட் சில்லீஸ் என்டர்டைன்மென்ட் என்ற சினிமா நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மேலும் புகழ்பெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும் இவரே. இதுதவிர்த்து, உலகளவில் செல்வாக்கு மிகுந்த நபர்களின் பட்டியலிலும் ஷாருக்கான் இடம் பிடித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com