விமர்சனம்: BP 180 - மாறுபட்ட திரைமொழி!
ரேட்டிங்(3 / 5)
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளில் முன்றாம் தலைமுறையினராக இருக்கும் பேரன், பேத்திகள் நடிக்கும் காலம் இது. சிவாஜி பேரன் விக்ரம் பிரபு, நாகேஷின் பேரன் பிஜேஷ், தேங்காய் சீனிவாசன் பேரன் யோகி போன்றவர்கள் மூன்றாம் தலைமுறை வாரிசு நடிகர்களாக வலம் வருகிறார்கள்.
இந்த வரிசையில் தற்போது மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா ரவிச்சந்திரனும் இடம் பெறுகிறார். கடந்த சில ஆண்டுகளாக பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் தான்யா. இந்த வாரம் இவரின் நடிப்பில் BP 180 என்ற படம் வெளிவந்துள்ளது. இப்படம் கதாநாயகியை மையப்படுத்தி வந்துள்ள படம். இப்படத்தில் மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி நடித்துள்ளார். இது டேனியல் பாலாஜியின் கடைசி படமாகும். இப்படத்தை JP இயக்கி உள்ளார்.
டேனியல் பாலாஜி அடிதடி கட்டப்பஞ்சாயத்து என ரவுடிசம் செய்து வருபவர். பாக்யராஜ் இவரது குடும்ப நண்பர். ஒரு நாள் எதிர் பாராதவிதமாக பாக்கியராஜ் மகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார். இறந்தவர்களை போஸ்ட் மார்ட்டம் செய்யும் மருத்துவராக அரசு மருத்துவமனையில் வேலை செய்கிறார் தான்யா. மகளின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்யாமல் தரும்படி பாக்யராஜ் தான்யாவிடம் கேட்கிறார். நேர்மையான மருத்துவ அதிகாரியான தான்யா மறுத்து விடுகிறார். டேனியல் பாலாஜி தன் நண்பரின் மகளுக்காக தான்யாவை மிரட்டுகிறார். அடியாட்களை வைத்து மருத்துவ மனையை அடித்து நொறுக்குகிறார். எதற்கும் வளைந்து கொடுக்காத தான்யா அந்த பெண்ணின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்து தருகிறார். இதனால் டேனியல் பாலாஜி கோபம் கொண்டு தான்யாவை பழி வாங்க நினைக்கிறார். டேனியல் பாலாஜி என்ன செய்தார் என்பதுதான் படத்தின் கதை.
படத்தின் பாசிட்டிவான விஷயம் கதை சொல்லும் விதம் தான். படத்தின் முதல் பாதி வெவ்வேறு இடங்களில் நடைபெறும் துண்டு துண்டு காட்சிகளாக செல்கிறது. இரண்டாம் பாதியில் இதை அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு பரபரப்பான கதையை தருகிறது. படத்தில் ஒளிப்பதிவை ஒரு கதை சொல்லியாக பயன்படுத்தி இருக்கிறார் டைரக்டர். சவக்கிடங்கை சுற்றி கதை நகர்வது நாம் இதுவரை பார்க்காத ஒன்று. லைவ் லைட்டிங் ஒரு மாறுபட்ட அனுபவத்தை தருகிறது. இப்படத்தின் டைரக்டர் மிஷ்கினிடம் உதவியாளராக இருந்ததால் சில இடங்களில் மிஸ்கின் டச் தெரிகிறது.
"நான் என் வேலையை தான் செய்தேன், நீங்க அந்த பேஷண்டை பாருங்க என்று தான்யா சொல்லும் போது நேர்மையின் அழகு கம்பீரம் என்று நடிப்பில் காட்டுகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் தான்யா நடிப்பு உருக்கமாக இருக்கிறது. இது ஹீரோயின் சுப்ஜெக்ட் படம் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார். டேனியல் பாலாஜி நடிப்பை பார்க்கும் போது இவர் மறைந்து விட்டார் என்பதை நம்ப மனது மறுக்கிறது.
ஒரு கொடூர தாதா வாக, இறுதியில் மனம் மாறும் போதும் மிஸ் யூ டேனியல் சார் என்று சொல்லத் தோன்றுகிறது. பாக்யராஜ், கமிஷனராக வரும் தமிழ் என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்க்ள். குறிப்பாக பாக்யராஜ் மருத்துவமனை வாசலில் நடந்து கொண்டே கதறும் காட்சி நம் கண்களிலும் கண்ணீரை வர வைத்து விடுகிறது.
படத்தின் ஒரே மைனஸ் பின்னணி இசைதான். சில இடங்களில் வசனங்களையே கேட்க முடியாத அளவிற்கு ஜிப்ரானின் இசை இருக்கிறது. சற்று ஓவராக வாசித்து விட்டார் என்று சொல்லத் தோன்றுகிறது. வித்தியாசமான கதையை ரசிப்பவர்களுக்கும், மாறுபட்ட திரை மொழியை விரும்புபவர்களுக்கும் இந்த BP 180 பிடிக்கும்.

