
பிரபல நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக பெருங்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு சுமார் 9.05 மணியளவில் உயிரிழந்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ரோபோ சங்கர், பின்னாளில் ‘தீபாவளி' திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ‘மாரி', ‘விஸ்வாசம்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களிலும், பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கத் தொடங்கினார்.
சமீபத்தில் அவர் கதாநாயகனாக நடித்த ‘அம்பி' என்ற திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு வர காத்திருந்தது. கட்டுமஸ்தான உடல் கொண்ட ரோபோ சங்கர், சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி பின்னர் தீவிர சிகிச்சைகள் மூலம் மீண்டு வந்த அவர் பின்னர் பழையபடி படங்களில் நடிக்க தொடங்கினார்.
அதன் பின்னர் உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு மூலம் உடல் நலம் தேறி முன்பு போல் ஆரோக்கியத்துடன் வலம் வரத்தொடங்கினார்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கர் மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக அவர் பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்து ‘வெண்டிலேட்டர்’ கருவியுடன் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. ரோபோ சங்கரின் மறைவு திரை உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ரோபோ சங்கர் மஞ்சள் காமாலையில் இருந்து மீண்டு வந்த நிலையில் அவரது திடீர் மறைவு மஞ்சள் காமாலை வந்தால் மரணம் நிச்சயமா? என்று கேள்வி பலருக்கும் எழுந்துள்ளதுடன் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மருத்துவர்கள் சிலர் விளக்கம் அளித்து இருக்கின்றனர்.
மஞ்சள் காமாலை என்பது நோய் கிடையாது அது ஒரு நோயின் அறிகுறி. மஞ்சள் காமாலை பாதித்தவர்களுக்கு தோல், கண்கள் மற்றும் உடலின் சில பகுதிகள் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதற்கு 'பிலிருபின்' கழிவு பொருள் தான் காரணம்.
உடலில் இந்த கழிவு பொருள் வெளியேற்றப்படாமல் அதிக அளவில் தேங்கி நிற்பதற்கு மூன்று காரணங்கள் உள்ளது. ஒன்று கல்லீரல் நோய், இரண்டாவது பித்த நீர் அடைப்பு, மூன்றாவது ரத்த சிவப்பணுக்கள் அதிகளவில் சிதைவது. இதில் ரோபோ சங்கரை பாதித்தது கல்லீரல் நோய்தான்.
ஒருநபர் அதிகளவுக்கு அதிகமாக மது அருந்தும் போது 'ஆல்கஹால் ஹெபடைட்டீஸ்' என்ற நிலை ஏற்பட்டு கல்லீரல் முற்றிலுமாக பாதிப்படைந்து கடைசியில் மரணத்தை ஏற்படுத்தும். அதாவது நாம் உட்கொள்ளும் எந்த உணவாக இருந்தாலும் அது நம்முடைய கல்லீரலில் தாண்டி போக முடியாது. அப்படித்தான்மதுவும். அளவுக்கு அதிகமாக மது அருந்தும் போது ஆல்கஹால் வளர்சிதை மாற்றத்தால் உருவாக்கும் நச்சுப் பொருட்கள் நேரடியாக சென்று கல்லீரல் செல்களை பாதிக்கின்றன. இந்த நச்சுகள் கல்லீரலில் கொழுப்பு படிவதற்கு வழிவகுக்கும். இதைத்தான் ஆல்கஹாலிக் ஹெபடைடிஸ் என்று சொல்கிறார்கள்.
மஞ்சள் காமாலை, வயிற்று வலி, வீக்கம் களைப்பு, பலவீனம், பசியின்மை, எடையை குறைதல், லேசான காய்ச்சல் போன்றவை தான் இந்த நோயின் அறிகுறிகள் தான்.
தொடக்க நிலையில் ஒருவருக்கு இந்த அறிகுறிகள் தெரிய தொடங்கிய உடனே அவர் மது அருந்துவதை நிறுத்தி விட்டால் கல்லீரலில் ஏற்பட்ட பாதிப்பானது கொஞ்சம் கொஞ்சமாக சரியாக தொடங்கி விடும்.
இரண்டாவது நிலையில், பாதிப்புகளின் அறிகுறிகள் அதிகளவில் இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டவுடன் மது அருந்துவதை உடனடியாக நிறுத்துவதுடன், மருத்துவர்களின் அறிவுரைக்கு ஏற்ப மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வது மற்றும் உணவு முறையில் கவனம் செலுத்தும் போது நிச்சயமாக உங்கள் உயிரை காப்பாற்ற முடியும்.
ஆனால் அதுவே இறுதி கட்டத்தில் வரும் பொழுது கல்லீரல் முற்றிலுமாக செயல் இழந்து போயிருக்கும் என்பதால் இந்த காலகட்டத்தில் நீங்கள் மது அருந்துவதை உடனடியாக நிறுத்தினாலும் எந்த பலனும் அளிக்காது என்பதுடன் உணவுகள் மருந்துகள் மூலமாக கூட எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை மரணம் நிச்சயம்.
ரோபோ சங்கருக்கு கடைசி கட்டம் என்று சொல்லப்படும், கல்லீரல் முழுவதுமாக செயலிழந்ததுதான் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதாவது கல்லீரல் முழுமையாக செயலிழந்துவிட்டால் நோய்தொற்று அதிகமாவதுடன், உடல் உறுப்புக்களில் நீர் அதிகம் சேர்வது போன்றவை மூலம் கூட மரணம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. எனவேதான் வெளியில் தெரியாமல் மெதுமெதுவாக கொல்லும் மஞ்சள் காமாலை பிரச்சனை மிகுந்த ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது.