
கராத்தே ஹுசைனி என்று அழைக்கப்படும் இவர் கராத்தே பயிற்றுவிப்பாளராக தனது சாதனைகளால் புகழ் பெற்றார். 1986-ல் வெளிவந்த கே. பாலசந்தரின் ‘புன்னகை மன்னன்’ படத்தின் மூலம் ஹுசைனி நடிகராக அறிமுகமானார். இந்த படத்தில் இவர் ஒரு நடனக் கலைஞராக நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியால், திரைப்பட தயாரிப்பாளர்கள் இவரை ரஜினிகாந்தின் வேலைகரன் மற்றும் ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த் நடித்த மூங்கில் கோட்டை ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தனர்.
1980-ம் ஆண்டுகளின் பிற்பகுதியிலும் 1990-ம் ஆண்டுகளின் முற்பகுதியிலும் பிரபல நடிகராக வலம் வந்தார். 1988-ல் வெளிவந்த ஹாலிவுட் படமான பிளட்ஸ்டோன், 1990-ல் வெளியான கார்த்திக் நடித்த உன்னைச் சொல்லி குற்றமில்லை, 1993-ல் வெளியான சரத்குமார் நடித்த வேடன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
2001-ம் ஆண்டு வெளியான ‘பத்ரி’ திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் உடற்பயிற்சி பயிற்சியாளராக நடித்திருந்தார். ஹுசைனி பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் ஒரு நடிகராக அவருக்கு பிரபலத்தை தேடி தந்தது என்றால் அது விஜய் நடித்த பத்ரி படம்தான். அதனைத்தொடர்ந்து ஹுசைனி மெகா தொலைக்காட்சியில் ‘அதிரடி சமையல்’ என்ற ஒரு சமையல் நிகழ்ச்சியை நடத்தி வந்தார். இந்த நிகழ்ச்சி அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
1998-ம் ஆண்டில், மருதநாயகம் படத்தயாரிப்பின் போது நடிகர் கமல்ஹாசனுக்கும், 1998-ம் ஆண்டு வெளியான ஷங்கரின் ஜீன்ஸ் படத்தின் சிறப்புக்காட்சிகளின் போதும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு பணியில் இவர் உதவினார்.
இவரை ஷிசான் ஹுசைனி என்பதைவிட கராத்தே ஹுசைனி என்று சொன்னால் தான் இவரை பலருக்கும் தெரியும். அதுமட்டுமின்றி நடிகர்கள் விஜய், பவன் கல்யாண் உள்ளிட்டோருக்கு ஹுசைனி கராத்தே பயிற்சி அளித்துள்ளார். இவர் இளம் தற்காப்பு, கலை, சண்டை பயிற்சி பெற விரும்புபவர்களுக்காக ஒரு பள்ளியை ஆரம்பித்து நடிகர்கள் மட்டுமின்றி வெகுஜன மக்களுக்கும் அவர் தனது கராத்தே பயிற்சி அளித்துள்ளார். இவர் கராத்தே கலையில் மட்டுமல்ல வில் வித்தையிலும் சிறந்தவர். அதுமட்டுமின்றி இவர் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். தமிழ்நாடு ‘வில்’வித்தை சங்கத்தை ஆரம்பித்து அதன் பொது செயலராகவும் இருந்தவர்.
இந்நிலையில் தற்போது இவர் யூடியூப்புக்கு அளித்த பேட்டி ஒன்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கராத்தே மாஸ்டர் என்று அறியப்படும் ஷிகான் ஹுசைனியை ரத்தப்புற்றுநோய் பாதித்திருப்பதாகவும், அவரது வாழ்நாள்கள் எண்ணப்பட்டு வருவதாகவும் அந்த பேட்டியில் அவர் பகிர்ந்துள்ளார்.
கராத்தே மாஸ்டர், வில் வித்தையாளர், நடிகர், பல சாதனைகள் புரிந்தவர் என பல்வேறு சாதனைகளை புரிந்த ஷிகான் ஹுசைனி தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகி வரும் செய்தி பலரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது.
அந்த பேட்டியில், தனக்கு ரத்த புற்றுநோய் வந்திருக்கிறது. இது வருவதற்கு மூன்று காரணங்கள் சொல்கிறார்கள். அதாவது என்னுடைய ஜெனட்டிக் பிரச்சனை அல்லது ஏதேனும் வைரஸ் அல்லது ஏதேனும் ஒரு ஷாக்கினால் வந்திருக்கலாம் என மருத்துவர்கள் சொன்னதாக கூறினார். அதுமட்டுமின்றி தனக்கு வந்திருக்கும் இந்த கொடிய நோய்க்கு சிகிச்சையே கிடையாது என்றும், தனது நாட்கள் எண்ணப்பட்டு வருவதாகவும் கூறி உள்ளார். நான் இன்னும் கொஞ்ச நாள்தான் உயிரோடு இருப்பேன். எனக்கு மன தைரியம் அதிகம். சாவை பார்த்து பயப்படக்கூடாது. சாவுக்கு நேராக சண்டை போட வேண்டும் என்றும் தைரியமாக கூறிய அவர், புற்றுநோய்க்கு பயப்படவில்லை என்றும் உயிரின் கடைசி நொடியிலும் சிரிப்பேன் என்றும் தைரியமாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் வீட்டுக்கு ஒரு வில்வத்தை வீரர், வீராங்கனையை உருவாக்க வேண்டும் என்று நடிகர் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இவரின் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறியதுடன் அவரது தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.