
வளரும் நாடான இந்தியாவில் ஆரோக்கிய சீர்கேடுகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவின் மருத்துவத்துறை பொருளாதாரம் உலகிலேயே மிகப்பெரிய ஒன்று. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதேனும் ஒருவர் தினசரி மாத்திரைகளை உட்கொள்ளும் நபராக இருக்கிறார். இந்தியா உள்நாட்டிலேயே மருந்துகளை தயாரிப்பதால் சமாளிக்க முடிகிறது. சமீபத்திய ஒரு ஆய்வில் மிகவும் அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதில் நாடு முழுவதும் அதிகரித்து வரும் புற்றுநோயை பற்றிக் குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கை, இந்தியாவை 'உலகின் புற்றுநோய் தலைநகரம்' என்று விவரிக்கிறது. அதற்கான காரணத்தை பார்ப்போம்.
இந்தியாவில் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது உலக சராசரியை விட அதிகமாக உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையம் (NCDIR) ஆகியவற்றின் கூற்றுப்படி, கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.
வாழ்க்கை முறை:
இந்தியாவின் பல்வேறு வகையான வாழ்க்கை முறைகள்தான் புற்றுநோய் அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக உள்ளன. சுற்றுச்சூழல் மற்றும் சமூக பொருளாதார சவால்கள் ஆகியவை இதற்கு முக்கிய பங்களிக்கின்றன. புகைபிடித்தல் மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்துதல் நுரையீரல், வாய் மற்றும் தொண்டை பகுதியில் புற்றுநோய் ஏற்பட காரணமாக உள்ளது. தொழிற்சாலை மற்றும் வாகனங்களிலிருந்து வரும் காற்று மாசுபாடும் , இராசயன தொழிற் சாலைகளில் இருந்து வரும் புகைகளும் நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளாக உள்ளன. வேதியியல் தொழிற்சாலை கழிவுகள், புகைகள் அந்த வட்டாரத்தையே புற்று நோயின் கூடாரமாக மாற்றியுள்ளது.
நல்ல சுற்று சுழலும், இராசயனமற்ற உணவும் கிடைக்காததால் நாட்டில் புற்று நோய் பெருகியுள்ளது. உணவுப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் ஆகியவற்றில் கலந்துள்ள ரசாயனங்கள் உடலில் கலந்து தீமையை ஏற்படுத்துகின்றன. அரிசி , கோதுமை உள்ளிட்ட தானியங்கள் விளையும் வயல்களில் அடிக்கப்படும் பூச்சிக் கொல்லிகள், இராசயன உரங்கள் ஆகியவை வளரும் பயிரில் கலந்து கேட்டினை உருவாக்குகின்றன. இந்த தானியங்களை உண்ணும் பலருக்கும் உணவுக் குழாய் , குடல் , தொண்டை பகுதிகளில் புற்றுநோய் வருகிறது. அழகு சாதனப் பொருட்கள் சரும புற்றுநோயை ஏற்படுத்துகின்றன.
விழிப்புணர்வு இல்லாமை:
புற்றுநோய் அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமை மற்றும் பரவலான பரிசோதனை திட்டங்கள் இல்லாதது நோயை முற்றுவதற்கு வழிவகுக்கிறது. பெரும்பாலும் புற்றுநோய் தாமதமான நிலையில் கண்டறியப்படுகிறது. இதனால் வெற்றிகரமான சிகிச்சையின் வாய்ப்புகளை நோயாளி இழக்கிறார். முன்கூட்டியே ஒருவர் நோயை கண்டறிந்தால் அது குணப்படுத்தும் வாய்ப்பை அதிகமாக்கும்.
மீட்சி:
இந்தியாவில் புற்றுநோய்க்கு எதிரான போராட்டம் மிகவும் சவாலானது.
கிராமப்புறங்களில் சுகாதார சேவைகளை வழங்க உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான வசதிகள், சிகிச்சை மையங்கள் மற்றும் மலிவு விலையில் மருந்துகள், புற்றுநோய் நிபுணர்கள் உள்ள மருத்துவமனைகள் பரவலாக ஏற்படுத்த வேண்டும். சுகாதாரப் பராமரிப்பை வழங்க உள்கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சியில் முதலீடு செய்து, விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், இந்தியாவில் அதிகரித்து வரும் புற்று நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.
உணவுப் பொருட்களில் இராசயனம் குறைந்த தன்மையை விவசாயத்தில் வலியுறுத்த வேண்டும். புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் கொண்ட தொழிற்சாலைகளை மக்கள் தொகை இல்லாத பகுதிகளுக்கு மாற்ற வேண்டும். இதன் மூலம் புற்றுநோயின் தாக்கத்திலிருந்து நாடு மீண்டு வர முடியும்.