
இன்றைய தலைமுறைக்கு கேப்டனைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால், நிச்சயம் இவரைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் சினிமாவில் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய நடிகர் என்றால் அவர் கேப்டன் விஜயகாந்த் தான். கருப்பு எம்ஜிஆர் என புகழப்பட்ட கேப்டன், பல நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து ஆளாக்கியுள்ளார். படத்தில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களையும் சமமாக நடத்துபவர் கேப்டன். பொதுவாக நடிகர்கள் விளம்பரங்களில் நடித்து வருமானம் ஈட்டுவது வழக்கம். ஆனால், கேப்டன் விஜயகாந்த் எந்த விளம்பரத்திலும் நடித்தது இல்லை. இதற்கான காரணத்தைக் கேட்டால் நிச்சயமாக உங்களுக்கும் கேப்டன் மீது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
இன்று விஜய் மற்றும் சூர்யா போன்ற நடிகர்கள் கோலிவுட்டில் உச்சத்தில் இருப்பதற்கு முக்கிய காரணமே கேப்டன் தான். அன்று தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகனுக்கு இணையாக பல வெற்றிப் படங்களைக் கொடுத்து உச்சத்தில் இருந்தவர் கேப்டன். இருப்பினும் மற்ற நடிகர்களும் வளர வேண்டும் என்பதற்காக, பல பேருடன் இணைந்து நடித்து வாய்ப்பளித்துள்ளார். செந்தூரப்பாண்டி படத்தில் நடிகர் விஜய்க்கு அண்ணனாகவும், அதேபோல் பெரியண்ணா படத்தில் நடிகர் சூர்யாவுடனும் இணைந்தும் கேப்டன் நடித்தார். இந்தப் படங்களின் மூலமாகத் தான் இவர்கள் இருவரும் தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் பரிட்சையமானார்கள்.
இளைய தளபதி விஜய்யின் தந்தையான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜயகாந்திற்கு பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். ஒருமுறை இவர் கேப்டனிடம், “நீங்கள் விளம்பரங்களில் நடிக்கலாமே. அதில் நல்ல வருமானமும் கிடைக்குமல்லவா” என்று கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த கேப்டன், “நான் ஒரு குளிர்பான விளம்பரத்தில் நடிக்கிறேன் என வைத்துக் கொள்ளுங்கள். அதனைப் பார்க்கும் என்னுடைய ஏழை ரசிகர் ஒருவர், அந்த குளிர்பானத்தை வாங்க முடியாத சூழலில் இருக்கலாம். நான் குடிக்கிறேன் என்பதற்காக தானும் குடிக்க ஆசைப்பட்டு, அது நிறைவேறாமல் போகவும் வாய்ப்புண்டு. என்னால் ஒரு ரசிகரின் ஆசை நிராசையாக வேண்டாம். இது மட்டுமா குளிர்பானங்களைக் குடிப்பதால் என்னென்ன பக்க விளைவுகள் வருமோ? யாருக்குத் தெரியும்” என்று விளக்கமளித்தாராம் கேப்டன்.
தனது வருமானத்தைப் பற்றி எண்ணாமல் கடைக் கோடியில் இருக்கும் ஒரு ஏழை ரசிகனைப் பற்றியும் கேப்டன் நினைத்ததால் தான், அவர் விளம்பரங்களில் நடிக்கவில்லை என எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் கூறினார். தமிழ் தவிர்த்து வேற்றுமொழிப் படங்களில் நடிக்காத முன்னணி தமிழ் நடிகரும் கேப்டன் தான்.
எத்தனை நடிகர்களால் இப்படி சிந்திக்க முடியும் என்று தெரியவில்லை. இன்று விளம்பரங்களில் நடிக்கும் பல நடிகர்கள், தங்களின் வருமானத்தை மட்டுமே பார்க்கின்றனர். ஆனால், இதில் தனிச் சிறப்புடன் உயர்ந்து நிற்கிறார் கேப்டன் விஜயகாந்த்.
கிட்டத்தட்ட 40 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் நலிவுற்ற திரைக் கலைஞர்களும் பொருளாதார ரீதியாக வளர வேண்டும் என்று, நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார் கேப்டன். கலைமாமணி விருது, பிலிம்பேர் விருது மற்றும் தமிழக அரசு திரைப்பட விருது என பல விருதுகள் கேப்டனை அலங்கரித்துள்ளன.