ஆண்டுதோறும் மகாசிவராத்திரி அன்று ஈஷா மையத்தில் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும் இந்தக் கொண்டாட்டத்தில் திரைத்துறைப் பிரபலங்கள் மட்டுமில்லை, பல துறைகளின் பிரபலங்களும் பக்தர்களும் கலந்துக்கொள்வார்கள்.
வருடம் தோறும் ஈஷா மைய்யத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவ் மகாசிவராத்திரியைக் கோலாகலமாக நடத்துவார். அந்தவகையில் இந்த ஆண்டும் ஜக்கி ஒரு மாத காலமாக மகாசிவராத்திரிக்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தார். இந்தக் கொண்டாட்டத்தில் இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகளும் எப்போதும் நடைபெறும். இந்தமுறையும் பக்தர்களுடன் சில பிரபலங்களும் கலந்துக்கொண்டனர்.
பிரதமர் கூட ஒருமுறை இந்த விழாவில் கலந்துக்கொண்டார். அதேபோல் சென்ற ஆண்டு தமன்னா, காஜல், சமந்தா ஆகியோரும் கலந்துக்கொண்டு ஜக்கியுடன் நடனம் ஆடிய வீடியோ அப்போது வைரலானது. ஒவ்வொரு ஆண்டும் கலந்துக்கொள்ளும் காஜல் மற்றும் சமந்தா இந்த ஆண்டு ஈஷா மையத்தில் நடந்த மகாசிவராத்திரி விழாவில் கலந்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி விஐபிகள் கலந்துக்கொள்ளும் இந்தக் கொண்டாட்டத்தில் இம்முறை தமன்னா, பூஜா ஹெட்ஜ், சந்தானம் உள்ளிட்டப் பலரும் ஈஷா மையத்திற்கு வருகைத் தந்திருந்தனர். அதேபோல் சங்கர் மஹாதேவன், குர்தாஸ் மான், பவன்தீப் ராஜன், ரஞ்சித் பாட்டர்ஜி, மஹாலிங்கம், மூர்லால் மர்வடா ஆகியோர் இசை நிகழ்ச்சியில் பங்குப்பெற்றனர்.
அதிலும் சங்கர் மஹாதேவன் சிவன் பாடலை பாடும்போது பக்தர்கள் பரவச நிலையில் உற்சாகத்துடன் நடனம் ஆடினார்கள். ஜக்கியும் அருள் வந்தது போல் நடனம் ஆடினார். அதைப் பார்த்துவிட்டு சிவனே வந்தது போல் கைகளைக் கூப்பி வணங்கினார்கள்.
இதனையடுத்து தமன்னாவும் பூஜா ஹெட்ஜும் சேர்ந்து வைப் செய்தனர். பலரும் ஆச்சரியமானது சந்தானமும் ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதுப் பிரார்த்தனைச் செய்ததுதான்.
மேலும் தமிழ்நாடு ஆளுனர் திரு ஆர்.என்.ரவி, திருபுரா ஆளுனர் இந்திரசேனா ரெட்டி, பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மத்திய இணை அமைச்சர் திரு.எல்.முருகன், தகவல் துறை அமைச்சர் உட்பட பல அமைச்சர்கள் இந்த ஈஷா மையத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரியில் கலந்துக்கொண்டனர்.