

இன்றைய தலைப்புச் செய்திகளில் அதிகம் இடம்பெறுவது 'ஜனநாயகன்' படம் தொடர்பான சென்சார் பிரச்சனை (Censor problem). இது ஏதோ இன்று தான் நடக்கிறது என்று நினைக்க வேண்டாம். காலம் காலமாக நடந்து கொண்டு இருக்கிறது. இன்றைய சூழலில் செய்திகள் உடனுக்குடன் மக்களை சென்றடைந்து விடுகிறது. அதனால் பேசும் பொருளாகிறது.
இந்தியாவில் அவசர நிலை என்று ஒன்று அறிவிக்கப்பட்டதே தெரியுமா? அன்றைய பிரதமருக்கு ஏற்பட்ட நெருக்கடி நிலையை சமாளிக்க கொண்டு வரப்பட்டது அது. அப்போது சென்சார் போர்டு மிக கடுமையாக நடந்து கொண்டது. சண்டை காட்சிகளுக்கு கூட வரையறை வகுக்கப்பட்டது. அதில் அதிகம் பாதிக்கப்பட்டவர் மரியாதைக்குரிய எம்.ஜி.ஆர் அவர்கள்.
அவர் நடித்து வெளிவந்த 'ஊருக்கு உழைப்பவன்' திரைப்படத்தில் இடம் பெற்ற சண்டை காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. படம் வெளியாவதில் சிக்கல் வரும் போல தெரிந்ததால் அந்த சண்டை காட்சியை காமெடியாக வில்லனின் தொப்புளில் கதாநாயகன் குச்சியால் குத்தி வீழ்த்துவது போல் மாற்றி எடுத்தார்கள்.
சென்சார் போர்டுக்கு எதிராக, பாஜகவுக்கு எதிராக, குரல் கொடுக்கும் காங்கிரஸ் கட்சியினர் எழுபதுகளில் அவர்கள் கட்சி ஆட்சியில் இருந்தபோது நடந்த இந்த சம்பவத்தை மறந்து விட்டார்கள். அதே காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோது தான் 'அன்பே வா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'புதிய வானம், புதிய பூமி' பாடலில் 'உதயசூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே' என்ற வரிகள் வரும். அது பின்னர் 'புதிய சூரியனின் பார்வையிலே' என்று மாற்றப்பட்டது.
இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் எடுத்த 'குறத்தி மகன்' படத்தில் அரசியல் வசனங்கள் நிறைய உள்ளது என்று காரணம் காட்டி அதற்கு தடை விதிக்க அன்றைய திமுக அரசு முடிவு செய்தது. ஆனால் செயல்படுத்தவில்லை. 'தடையாம் தடை' என்று போஸ்டர் அடித்து விளம்பரப்படுத்தி அந்த படத்தை மக்களிடம் பெரிய அளவில் கொண்டு சேர்த்தார் இயக்குநர்.
மக்கள் திலகத்தின் 'உலகம் சுற்றும் வாலிபன், நேற்று இன்று நாளை' திரைப்படங்கள் சந்தித்த பிரச்சனைகள் அனைவருக்கும் தெரியும். இன்று புதிதாக நடப்பது போல கூச்சல் போடுகிறார்கள் அவர்களுக்காக ஒன்று:
"இந்த திரை உலகம் விசித்திரமான பல கதைகளை திரைக்கு கொண்டு வந்திருக்கிறது. புதுமையான பல இயக்குனர்களை தந்திருக்கிறது. பல தடைகளை பார்த்திருக்கிறது. எந்த புது வழக்கும் விசித்திரமானது அல்ல. படைப்பாளிகளும் புதுமையானவர்கள் இல்லை".