

‘ஜனநாயகன்’ படத்தை போல ‘பராசக்தி’ படத்துக்கும் சென்சார் பிரச்சினை எழுந்துள்ளது. ‘பராசக்தி’ படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், 25 காட்சிகளில் ‛கத்தரி' போடும்படி அறிவுறுத்தியுள்ளனர்.இதில் மாற்றம் செய்தால் அந்த திரைப்படத்தின் சுவாரசியம் குறையும் என்று கூறப்படுகிறது. இதனால் அதை நீக்க இயக்குநர் சுதா கொங்கரா மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு பக்கமும் இழுபறியாகும் நிலையில் படத்துக்கு சென்சார் சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை.
'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு உடனடியாகத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று இன்று காலை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது தணிக்கை வாரியம் (Censor Board) இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. இதனால், படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்பதில் மீண்டும் இழுபறி நீடிக்கிறது.
மற்றொரு பக்கம், நாளை (ஜனவரி 10) வெளியாக வேண்டிய 'பராசக்தி' திரைப்படத்திற்கும் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அந்தத் திரைப்படக் குழுவும் திட்டமிட்டபடி நாளை படத்தை ரிலீஸ் செய்ய முடியுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
பொங்கல் ரேசில் 'ஜனநாயகன்' வருவது சந்தேகமாகியுள்ள நிலையில், தற்போது 'பராசக்தி' திரைப்படத்திற்கும் அதே நிலை ஏற்பட்டிருப்பது ரசிகர்களைத் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒருவேளை இரண்டு பெரிய படங்களுமே வெளியாகாமல் போனால், இந்த ஆண்டு பொங்கல் சினிமா பிரியர்களுக்குப் பெரும் ஏமாற்றமாகவே முடியும் என்று கருதப்படுகிறது.