கமல்ஹாசன் நடித்து, கே. விஸ்வநாத் இயக்கத்தில் 1983-ல் வெளியான "சலங்கை ஒலி" திரைப்படம் இன்றும் பலரால் ரசிக்கப்படும் ஒரு காவியமாக திகழ்கிறது. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் ஒரு பரதநாட்டிய கலைஞராக நடித்து இருப்பார்.
இந்த படத்தில் பரதநாட்டியம் பயிலும் ஒரு சிறுவன், கமல்ஹாசனிடம் வந்து புகைப்படம் எடுக்கும் ஒரு காட்சி இருக்கும். அந்தச் சிறுவன் வேறு யாரும் இல்லை, பின்னாளில் பல படங்களை இயக்கி வெற்றி பெற்ற சக்ரி டோலெட்டி தான்.
சக்ரி டோலெட்டி, குழந்தை நட்சத்திரமாக "சலங்கை ஒலி" படத்தில் நடித்ததுடன், மேலும் மூன்று நான்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் அதன் பிறகு நடிப்புத் துறையை விடுத்து, படிப்பை தொடர்ந்தார்.
சக்ரி டோலெட்டி, ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் பிறந்த ஒரு இந்திய-அமெரிக்கர். இவர் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஒருங்கிணைப்பாளர் எனப் பல திறமைகளைக் கொண்டவர். அமெரிக்காவின் மத்திய புளோரிடா பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரிவில் பட்டம் பெற்ற இவர், திரைப்படத் துறைக்கு வருவதற்கு முன் care.ai என்ற சுகாதார தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாகப் பணியாற்றினார்.
இவரது திரைப்பட வாழ்க்கை குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கியது. தனது தந்தையான டாக்டர் தம்புவின் மூலம் சினிமாவுக்கு வந்த இவர், கமல்ஹாசன் நடித்த 'சலங்கை ஒலி' படத்தில் ஒரு சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும், 'சின்ன வீடு' (1985), தெலுங்கில் 'மூடு முல்லு' (1983) மற்றும் 'மயூரி' (1984) போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
வளர்ந்த பிறகு, இவர் இயக்குநராகவும் நடிகராகவும் ஜொலித்தார். கமல்ஹாசன், மோகன்லால் நடித்த 'உன்னைப் போல் ஒருவன்' (2009) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்னர், அஜித்குமாரின் 'பில்லா 2' (2012) மற்றும் 'கொலையுதிர் காலம்' (2019) போன்ற படங்களை இயக்கினார். நடிப்பைப் பொறுத்தவரை, கமல்ஹாசனின் 'தசாவதாரம்' (2008) படத்தில் ஸ்ரீராம் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததுடன், 'பில்லா 2' படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.