
கடைகளில் வாங்கும் ஊறுகாய்கள் அவ்வளவு எளிதில் கெட்டுப் போகாது. அந்தளவிற்கு பிரசர்வேடிவ்கள் அதில் கலக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், வீட்டில் செய்யும் ஊறுகாய்கள் பெரும்பாலும் அப்படி இருப்பது இல்லை, ஒரு வாரம் கழித்து பாட்டிலை திறக்கும்போது அதில் பூஞ்சைகள் வளர்ந்திருக்கும்.
இது அது கெட்டு போனதன் அறிகுறி, அதற்கு பின்னர் ஊறுகாயை பூமா தேவிக்குதான் தானம் செய்யவேண்டும். அல்லது குப்பை தொட்டிகளில் போடலாம். பூஞ்சை பாதிக்கப்பட்ட மேல் பகுதியை மட்டும் வழித்து தூக்கி எறிந்துவிட்டு, அடிப்பகுதியில் உள்ள ஊறுகாயை சாப்பிட சிலர் வைத்திருப்பார்கள் அது முற்றிலும் தவறானது. அந்த பூஞ்சையின் பாதிப்பு அந்த பாட்டிலில் உள்ள ஊறுகாயின் கடைசி பகுதி வரையில் பரவி இருக்கும்.
பொதுவாக ஊறுகாய் எலுமிச்சை, நார்த்தங்காய், மாங்காய், பூண்டு, மாங்கா இஞ்சி, தக்காளி, நெல்லிக்காய், மிளகாய் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுகிறது. முதலில் இந்த காய்கறிப் பொருட்களை நறுக்கி உப்பு தண்ணீரில் ஊறவைத்து பின்னர் சில நாட்கள் வெயிலில் காயவைத்து பதப்படுத்துவார்கள்.
மற்றொரு முறையில் பொருட்களில் மிளகாய் தூள், உப்பு சேர்ந்து எண்ணெயில் தாளித்து பதப்படுத்தப்படுகிறது. இந்த செய்முறையில் செய்த பின்னர், சில சமயம் சில நாட்கள் கழித்து ஊறுகாய் உள்ள பாட்டிலில் பூஞ்சைக் காளான் செழிப்பாக வளர்ந்து இருக்கும்.
ஊறுகாயின் மீது பூஞ்சை தோன்றத் தொடங்கும்போது அதற்காக மெனக்கெட்ட நேரங்கள் அனைத்தும் வீணாகிவிடும். பூஞ்சை தோன்றியவுடன், ஊறுகாய் சில நாட்களுக்குள் கெட்டுவிடும். அது சாப்பிடுவதற்கான தகுதியை இழந்துவிடுகிறது. சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துவங்குதன் மூலம் ஊறுகாயை அழிவில் இருந்து காப்பாற்ற முடியும்.
ஊறுகாய் கெட காரணங்கள்:
ஊறுகாய் செயல்முறையில் செய்யும் சிறிய தவறுகள், பூஞ்சைகள் வளர காரணமாக இருக்கின்றன. ஊறுகாய் வைத்திருக்கும் அறையின் வெப்பநிலை சில நேரம் அதிகமாகவும் சில சமயம் குளிராகவும் இருக்கும்போது, ஊறுகாயில் உள்ள தண்ணிர் ஆவியாகி மூடிக்குள் நீர் திவலையாக ஒட்டிக்கொண்டிருக்கும். இதனால் பாட்டிலுக்குள் சிறிய அளவில் ஈரப்பதம் உருவாகக்கூடும். இந்த ஈரப்பதமே பூஞ்சைகள் வளர முதன்மை காரணமாக இருக்கிறது.
இது மட்டுமில்லாமல் அமிலக் குறைபாடு ஏற்படும்போதும் ஊறுகாய் கெட்டுப்போக தயாராக்குகிறது. ஊறுகாயைப் பாதுகாக்க அதில் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கப்படுவதால், அவற்றின் pH அளவு குறைந்து பாக்டீரியாக்கள் உருவாவதை தடுக்கிறது. ஊறுகாயில் அமிலத்தின் அளவு குறைவாக இருந்தால், பூஞ்சை விரைவாக வளரும்.
ஊறுகாய் வைத்துள்ள பாட்டிலுக்குள் வெறும் கையால் எடுப்பது , விரல்கள் ஊறுகாயில் படுவதைப்போல கையை விடுவது, அழுக்கான கழுவாத கரண்டிகளைப் பயன்படுத்தி ஊறுகாய் எடுப்பது போன்ற காரணங்களால் கெட்டுப்போக வாய்ப்புள்ளது. இது போன்ற சூழல்களில் கைகளில் இருக்கும் பாக்டீரியாக்கள் ஊறுகாயில் பரவி கெட்டுப்போக வைக்கும்.
ஊறுகாய் கெடாமல் இருக்க:
ஊறுகாய் கெடாமல் இருக்க கண்ணாடி, அல்லது பீங்கான் ஜாடிகளில் வைக்கவேண்டும். நீண்ட கரண்டிகளை பயன்படுத்த வேண்டும். தயாரிக்கும்போது சரியான அளவில் உப்பு மற்றும் எண்ணெயை சேர்க்க வேண்டும். எப்போதும் அறையில் நிழலான இடங்களில் வைக்க வேண்டும். பூஞ்சை தாக்குதலில் ஆளான பொருட்களை அருகில் வைக்க கூடாது. அடுப்புக்கு அருகிலும் தண்ணீர் ஓடும் சிங்க் அருகிலும் வைக்கக்கூடாது.
தினசரி ஊறுகாய் உள்ள ஜாடிகளை திறந்து ஏதேனும் தொற்று உள்ளதா என்று பார்க்க வேண்டும். ஏதேனும் பாதிப்பு இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்தவும். சாதாரணமாக ஊறுகாய்கள் 6-12 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். ஆனாலும் 3 மாதங்கள் பயன்படுத்தும் அளவில் மட்டும் தயாரித்து பயன்படுத்தவும்.