விமர்சனம்: சாருகேசி - ஒய்.ஜி.மகேந்திரனின் வாழ்நாள் காவியம்!

இசையும் உறவும் பின்னிப் பிணைந்த ஒரு உன்னதமான குடும்பத் திரைப்படம்.
சாருகேசி
சாருகேசி
Updated on
ரேட்டிங்(3.5 / 5)

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒய்.ஜி மகேந்திரன், சுஹாசினி, தலைவாசல் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள படம் சாருகேசி.

சாருகேசி ஒரு பிரபலமான ஒரு கர்நாடக இசை பாடகர். இவருக்கு ஒரே மகன் இந்த மகனுக்கு சில தீய பழக்கவழக்கங்கள் இருக்கிறது. மகனுக்கு தன் தந்தையை பிடிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் மகன் ஒரு நாள் ஒரு பெண்ணை மணந்து கொண்டு வருகிறார். அந்தப் பெண் சாருகேசியின் கடந்த கால வாழ்க்கையில் உள்ள ஒரு ரகசியத்தை கண்டுபிடித்து சாருகேசியை பிளாக்மெயில் செய்கிறார். என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கும் போது சாருகேசிக்கு ஒரு ஞானி போன்ற ஒரு மனிதர் அறிமுகம் ஆகிறார். அந்த மனிதர் வழிகாட்டுதலின்படி சாருகேசி சில பிரச்சனைகளை சமாளிக்கிறார். ஒருநாள் சாருகேசிக்கு ஞாபகங்களை மறக்கும் அல்சைமர் நோய் இருப்பது தெரிய வருகிறது. ஒரு கட்டத்தில் சாருகேசி தன்னையும் தன் உடன் இருப்பவர்களையும் மறந்து விடுகிறார். வாழ்க்கையின் இறுதி நாள் மட்டும் சாருகேசிக்கு மீண்டும் நினைவு வருகிறது. அந்த நாளில் அவர் என்ன செய்தார் என்று படம் சொல்கிறது.

சாருகேசி
சாருகேசி

ஒரு கர்நாடக இசைக் கலைஞனின் பின்னணியில் இருந்து குடும்ப உறவுகள், அவர்களுக்குள் இருக்கும் பரஸ்பர அன்பு, ஆன்மீகம், நட்பு போன்ற பல விஷயங்களை படம் சொல்கிறது. ஒரு ஃப்ளாஷ் பேக் வழியாக தொடங்கும் படம் படத்திற்குள் இருக்கும் சில சம்பவங்கள், கதாபாத்திரத்தின் வடிவமைப்பு, இவற்றின் மூலமாக நம்மை ஈர்க்கிறது. படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

படத்தின் மிகப்பெரிய பலம் தேவாவின் இசை. தேவாவின் இசையில் அனைத்து பாடல்களும் கேட்கும்படி உள்ளன. "வந்து போவது நம் வேலை வழி நடத்துவது அவன் வேலை“ என்று கிளைமாக்ஸில் வரும் பாடல் மிகவும் சிறப்பாக இருக்கிறது. கர்நாடக இசையில் நல்ல தமிழ் பாடல்களையும் தர முடியும் என்று இளையராஜாவிற்கு பின் நிரூபித்து இருக்கிறார் தேவா.

இப்படத்திற்கு பாடல்கள் எழுதிய பா.விஜய் வசனமும் எழுதி இருக்கிறார். வசனங்கள் அனைத்தும் மிகவும் கூர்மையாக இருக்கிறது. தேவதூதன் போல் வரும் சத்யராஜ் பேசும் வசனங்கள் அனைத்தும் ஒரு தத்துவம் போல் இருக்கிறது.

சாருகேசியாக ஒய்.ஜி மகேந்திரன் வாழ்ந்து இருக்கிறார். மகனுக்காக போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் காலில் விழ முயற்சி செய்யும் இடத்திலும், அல்சைமர் நோய் வந்த பிறகு நினைவுகள் தவறி தடுமாறும் இடத்திலும் ஒய்.ஜி மகேந்திரனின் பல்லாண்டு நாடக அனுபவமும் திரை அனுபவமும் நடிப்பில் தெரிகிறது. கிளைமாகஸ் காட்சியில் நடிப்பில் சபாஷ் போட வைக்கிறார். இத்தனை ஆண்டுகால ஒய்.ஜி மகேந்திரனின் நடிப்பை தமிழ் சினிமா இயக்குனர்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்று இவரின் நடிப்பை இந்த படத்தில் பார்க்கும்போது சொல்லத் தோன்றுகிறது. சுரேஷ்கிருஷ்ணா, ஒய்.ஜி மகேந்திரனை மிகவும் சிறப்பாக பயன்படுத்தியதற்காக பாராட்டலாம்.

மனைவியாக வரும் சுகாசினி தன் கணவருக்கு அல்சைமர் நோய் இருப்பது தெரியும் போது பதறும் இடத்தில் சபாஷ் போட வைக்கிறார். நண்பராக வரும் தலைவாசல் விஜய் தனது நடிப்பை சரியாக தந்துள்ளார். மருமகளாக வரும் ரம்யா பாண்டியன் சில இடங்களில் வில்லத்தனம் செய்வது ரசிக்க வைக்கிறது. சத்தியராஜிற்கு இது கெஸ்ட் ரோல் இருந்தாலும் ஒரு 'டிவைன் பர்சன்' எப்படி இருப்பாரோ அதேபோல இவரது வசனமும், நடிப்பும் இருக்கிறது. இவரது கெட்டப்பை பார்த்தால் நமக்கு இயேசுநாதர் நினைவு வருகிறது.

இதையும் படியுங்கள்:
ஹபீபி திரைவிமர்சனம்: 30 ஆண்டு காலக் காதலும் கைத்தறி நெசவின் கண்ணீரும்!
சாருகேசி

இசையை பின்னணியாக கொண்டு உணர்வுபூர்வமான இசை படங்கள் வந்து தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் ஆகிறது. இந்தக் குறையை சாருகேசி நிவர்த்தி செய்து உள்ளது. சத்யா, பாட்ஷா, அண்ணாமலை போன்ற மாஸ் மசாலா படங்களை தந்த சுரேஷ் கிருஷ்ணா இப்படி ஒரு எமோஷனல் கலந்த குடும்பப் பின்னணியில் ஒரு இசைப் படம் தந்திருப்பது நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

அடிதடி குத்துப் பாட்டு இரட்டை அர்த்த வசனங்கள் வந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவிற்கு இந்த சாருகேசி கண்டிப்பாக ஒரு சிறந்த மாற்று படமாகும். குடும்பத்துடன் காண வேண்டிய படம் என்று சிலவற்றை சொல்லுவார்கள் ஆனால் இந்தப் படங்களில் ஒரு சில குடும்பத்தோடு பார்ப்பதற்கு தகுதியானதாக இருக்காது. ஆனால் இந்த சாருகேசி திரைப்படத்தை குடும்பத்தோடு தான் நாம் பார்க்க வேண்டும்.

ஏனென்றால் ஒரு மிகப்பெரிய இசைக்கலைஞன் தன் மகனின் அன்புக்காகவும், ஆறுதலுக்காகவும் எப்படி ஏங்குகிறான் என்று தன் நடிப்பின் மூலமாக ஒய்.ஜி மகேந்திரன் காட்டியுள்ளார். நமது குடும்பத்தில் உள்ள மகன்களும் மகள்களும் தெரிந்து கொள்ள வேண்டும். சிறந்த கதாபாத்திர தேர்வு சரியான நடிப்பு மிகச் சிறந்த பின்னணி இசை, பாடல்கள் என இந்த சாருகேசி அனைவரும் பார்க்கும் படமாக வந்திருக்கிறது.

சாருகேசி - சபாஷ் ஒய்.ஜி

logo
Kalki Online
kalkionline.com