ஹபீபி திரைவிமர்சனம்: 30 ஆண்டு காலக் காதலும் கைத்தறி நெசவின் கண்ணீரும்!

வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் மனிதர்களின் வலியையும், நெசவுத் தொழிலின் பின்னணியையும் பேசும் கஸ்தூரிராஜாவின் ‘ஹபீபி’.
Habibi Review
Habibi Review
Updated on
ரேட்டிங்(3 / 5)

மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரிராஜா நடித்து வெளி வந்துள்ள படம் ஹபீபி.                                               

திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசிக்கு அருகில் இஸ்லாமியர்கள் அதிகம் நிறைந்த ஊர் ஒன்று இருக்கிறது. இந்த ஊரில் பலர் நெசவுத் தொழிலை செய்து வருகிறார்கள், முகமத் யூசுப்  குடும்பம் உட்பட. ஒரு கட்டத்தில் பல குடும்பங்கள் நெசவு தொழிலை விட்டுவிட்டு வளைகுடா நாடுகளுக்கு பணிக்கு செல்கிறார்கள். யூசுப்  தம்பியும் வளைகுடா செல்ல முடிவெடுக்கிறார் . ஆனால் யூசுப் இதை ஏற்கவில்லை. இருந்தாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக யூசுப் தம்பி வளைகுடா நாடு செல்கிறார்.

யூசுப் மகன் பள்ளியில் படிக்கிறான். பள்ளியில் படிக்கும் போது ஒரு பெண்ணை காதலிக்கிறான். ஒரு நாள் அப்பெண்ணை காண அவள்  வீட்டுக்கு செல்லும்போது எதிர்பாராத விதமாக பெண்ணின் பெற்றோர்களால் பிடிக்கப்படுகிறான். இவனை திருடன் என்று பழி சுமத்தி ஊர் அவனை அவமானப்படுத்துகிறது. இந்த சூழ்நிலையில்  அவமானம் தாங்காமல் இவனும் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு சென்று விடுகிறான்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வருகிறான். அதுவரை அவனுக்கு திருமணம் ஆகவில்லை. காதலித்த பெண்ணையே மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறான். பெற்றோரின் வற்புறுத்ததால் வேறு வழியின்றி திருமணத்திற்கு சம்மதிக்கிறான். இந்த நிலையில், தான் சேமித்த பணத்தை பாதுகாப்பிற்காக கொடுத்து வைத்த நபர், பணத்தை தராமல் ஏமாற்றுகிறார். இதனால் இவன் திருமணம் நடக்குமா? என்பது கேள்விக்குறியாகிறது. இந்த பிரச்னைக்கு ஒரே தீர்வு வீட்டில் தறி நெசவு செய்து கொண்டிருக்கும் தனது அப்பா இன்னும் நெசவுத் தொழிலை நம்பிக்கொண்டு இருப்பது தான் என்று நினைக்கிறான். இதனால் அப்பாவிடம் நெசவுத் தொழிலை விட்டுவிடும் படி சொல்கிறான் . அப்பாவும் ஒரு மனதாக விடுகிறார். அதன் பிறகு இவனுக்கு திருமணம் ஆனதா? இல்லையா? என்று சொல்கிறது மீதி கதை .     

நாம் சமீப கால தமிழ் சினிமாவில் அல்லது இந்திய சினிமாவில்  பெரும்பான்மையான படங்கள் இஸ்லாமியர்கள் என்றாலே ஏதோ தீவிரவாதிகள் என்று சித்தரிப்பதை தான் பார்த்திருக்கிறோம்.  நீங்கள் நினைத்தது தவறு. இஸ்லாமிய குடும்பங்களுக்குள் ஒரு அழகிய வாழ்வியல் இருக்கிறது. ஒரு அழகான கூட்டு குடும்ப அமைப்பு இருக்கிறது என்று முதல்முறையாக சொல்லி இருக்கிறார் மீரா கதிரவன்.

படம் 1970 களில் தொடங்கி 94ஆம் ஆண்டு முடிகிறது. படத்தின் முதல் 20 நிமிடங்களில் படத்தில் இதுதான் கதை என்று சொல்லிவிடுகிறார் டைரக்டர். அதன்பின்னும் கதை குடும்ப உறவுகள் உறவுகளுக்குள் இருக்கும் சில சிக்கல்கள் என்று நகருகிறது . குறிப்பாக அப்பா மகன் இடையே இருக்கும்  தலைமுறை இடைவெளி , புதிதாக திருமணமாகி வீட்டிற்குள் வரும் தம்பியின் மனைவி எதிர் கொள்ளும் பிரச்னைகள் என படம் செல்கிறது . படத்தில் இருக்கும் பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் இஸ்லாமிய கதாபாத்திரங்களே . ஓரிரு இந்து கதாபாத்திரங்களும் வந்து செல்கின்றன. குறிப்பாக யூசுப்பிற்கு நண்பனாக வரும் சைக்கிள் கடைக்காரர் ஒரு இந்துவாக இருக்கிறார்.

இந்த படம் வேகமாக நகரும் திரைக்கதை கொண்டது அல்ல ஒரு எளிமையான குடும்பத்தைப் பற்றி அழகாக சொல்லும் திரைக்கதை கொண்ட மெலிதான படம்.  இந்த படம் நடக்கும் காலகட்டங்கள் 30 வருடத்திற்கு முந்தியது என்பதால் படம் நகரும் விதமும் 30 வருடத்திற்கு முந்தியது போலவே இருக்கிறது.

படத்தில் மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம் தென்காசி பகுதியில் பேசும் தமிழ் . குறிப்பாக இஸ்லாமிய குடும்பங்களில் அரபி மொழி கலந்து பேசும் தென்காசி தமிழ் மிகவும் சிறப்பாக இருக்கிறது. யூசுபபாக  நடிக்கும் கஸ்தூரிராஜாவின் நடிப்பு, கண் முன்னே வாழும் இஸ்லாமியப் பெரியவரைக் கொண்டு வந்து விடுகிறது. கைத்தறி தொழிலை விட்டு பிரிய மனமில்லாமல் தவிப்பதும், தன் மகன் ஊர் முன் அவமானப்படும்போதும், தான் ஒரு இயக்குனர் மட்டுமல்ல சிறந்த நடிகரும் கூட என்பதை நிரூபித்து இருக்கிறார் கஸ்தூரிராஜா. கஸ்தூரிராஜா மகனாக நடிக்கும் ஈசா, மூன்று காலகட்ட வயதை தன் நடிப்பில் சரியாக தந்துள்ளார். ஹீரோயினாக நடிக்கும் மாளவிகா மனோஜ் ஒரு சராசரி இஸ்லாமிய குடும்பத்தில் இருக்கும் பெண்ணை கண் முன் கொண்டு வந்து விடுகிறார். தம்பியின் மனைவியாக நடிப்பவர் கஸ்தூரிராஜா மனைவியாக நடிப்பவர் இன்னும் படத்தில் உள்ள பல பெண் கதாபாத்திரங்கள் மிகவும் சிறப்பாகவே நடித்துள்ளார்கள்.

இதையும் படியுங்கள்:
ஆட்டி விமர்சனம்: மிரட்டும் கேமராவும் இசையும்... திரைக்கதை சொதப்பலா? முழு அலசல்!
Habibi Review

பணம் என்பதற்காகவும், குடும்பத்தின் வறுமையை போக்கவும் வளைகுடாவுக்கு செல்லும் ஆண்கள் தங்கள் குடும்பம் என்ற அழகான கூட்டை விட்டு வேதனை உடன் செல்கிறார்கள் என்பதை இந்த படம் தன் காட்சிகள் மூலமாக சொல்லி இருக்கிறது. "துபாய்ல ரெண்டு வருஷம் இருந்துட்டு இப்பதான் வரேன் இன்னும் ரெண்டு மாசம் இருப்பேன் திருப்பியும் துபாய் போகணும்" என்று படத்தின் ஹீரோ கேரக்டரும் சித்தப்பா கேரக்டரும் சொல்லும்போது அவர்கள் இழந்தது மனைவியின் அன்பு, குழந்தைகளின் சிரிப்பு, தாயின் அரவணைப்பு இப்படி பல என்று இயக்குனர் புரிய வைக்கிறார்.

சாம் CS  இசையில் ஒரு பாடல் மட்டும் கேட்கும்படி இருக்கிறது. மகேஷ் முத்துசாமியின்  ஒளிப்பதிவில் தென்காசி கேரளா எல்லைகள் மிகவும் அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளன. பெரிய நடிகர்கள் இல்லை, வேகமாக நகரும் திரைக்கதைகள் இல்லை குத்துப்பாட்டு இல்லை . ஆனாலும் நம்மில் பலருக்கு தெரியாத ஒரு அழகான இஸ்லாமிய குடும்ப கதை ஒன்று இப்படத்தில் இருக்கிறது.

ஹபீபி என்றால் வேலை தேடி செல்பவர்கள் என்று பொருள். வேலை தேடி கடல் கடந்து செல்பவர்கள் இழந்து விடும் அற்புதமான ஒரு வாழ்க்கையை இந்த ஹபீபி சொல்கிறது .

ஹபீபி பார்க்க வேண்டிய ஒரு அழகான படம்.

logo
Kalki Online
kalkionline.com