
தெலுங்கு சினிமா உலகில் அசைக்க முடியாத நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி. இதுவரை 150 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் 537 பாடல்களில் 24 ஆயிரம் ஸ்டெப்புகளுடன் நடனம் ஆடியதற்காக கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். தெலுங்கு ரசிகர்களால் ‘மெகா ஸ்டார் ’ என்று அழைக்கப்படும் இவர், இந்திய சினிமா வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான மற்றும் செல்வாக்கு மிக்க நடிகர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
1992-ம் ஆண்டு வெளியான ‘ஆபத்பந்தவுடு’ படத்தில் நடித்ததற்காக , சிரஞ்சீவி ரூ.1.25 கோடி சம்பளமாக பெற்றார். அந்த நேரத்தில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும், ஒரு படத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையும் பெற்றார்.
நடிகர் சிரஞ்சீவி தற்போது விஸ்வம்பரா படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் நடிக்காததற்கான காரணத்தை சிரஞ்சீவி பகிர்ந்துள்ளார்.
இந்திய அளவில் பிரமாண்ட இயக்குனராக வலம் வருபவர் ராஜமவுலி. தொடர்ச்சியான வெற்றிப் படங்களை வழங்கி, வெற்றிகளை நிரூபித்து வருவதில் எஸ்.எஸ். ராஜமௌலிக்கு நற்பெயர் உண்டு. இவரது இயக்கத்தில் வெளியான பாகுபலி, பாகுபலி-2, ஆர்.ஆர்.ஆர். படங்கள் இந்தியா தாண்டி, உலக அரங்கில் கவனம் ஈர்த்தது. ‘ஆர்.ஆர்.ஆர்.' படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு... நாட்டு...' பாடல் ஆஸ்கார் விருதையும் வென்றது.
இதற்கிடையில், மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் நடிக்கும் எஸ்.எஸ்.எம்.பி29 என்ற அடுத்த உலகப் பயணப் படத்தின் படப்பிடிப்பில் எஸ்.எஸ். ராஜமௌலி மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 2½ ஆண்டு கால்ஷீட்டை மகேஷ்பாபு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னணி நடிகர்கள் அனைவருமே ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க விரும்பும்போது, அவருடன் பணியாற்ற முடியாது என்று நடிகர் சிரஞ்சீவி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதுகுறித்து அவர் கூறும்போது, "ராஜமவுலி ஒரு படத்திற்கு 3 முதல் 4 வருடங்கள் எடுத்துக்கொள்கிறார். அவ்வளவு காலம் என்னால் ஒரே படத்தில் நடிக்க முடியுமா? என்று தெரியவில்லை. தற்போது நான் ஒரே நேரத்தில் 4 படங்களில் நடித்து வருகிறேன். இந்த நேரத்தில் இத்தனை ஆண்டுகள் ஒரு படத்தில் பணிபுரிவது சாத்தியமில்லை. மற்ற படங்களில் பணிகளையும் பாதிக்கும் என்பதால் தான் நான் அவருடன் இணைந்து பணியாற்ற முடியாது என்று சொன்னேன்", என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி ராஜமௌலியுடன் பணியாற்றுவதன் மூலம் மட்டும் தன்னை ஒரு அகில இந்திய நட்சத்திரமாக நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். "எஸ்.எஸ். ராஜமௌலியுடன் பணியாற்றுவதும், அகில இந்திய அளவில் என்னை நிரூபிப்பதும் எனது விருப்பமல்ல. அதனால்தான் நான் அவருடன் பணியாற்ற முடியாது என்று சொன்னேன்" என்று சிரஞ்சீவி கூறினார்.
சிரஞ்சீவி இன்னும் எஸ்.எஸ். ராஜமௌலியுடன் இணைந்து பணியாற்றவில்லை என்றாலும், அவரது மகன் ராம் சரண் ஏற்கனவே தொலைநோக்கு இயக்குனருடன் இணைந்து ஆர்.ஆர்.ஆரில் பணியாற்றி, உலக அளவில் ஒரு இணையற்ற வெற்றியைப் பெற்றுள்ளார்.