நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் வசூல் ரீதியாக மகத்தான சாதனை படைத்து வருகிறது.
இந்த படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க ஐதராபாத்தில் உள்ள தியேட்டருக்கு சென்ற ரேவதி என்ற பெண் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படுகாயம் அடைந்த அவரது மகன் இன்னும் மருத்துவமனையில் உள்ளார். அவருக்கு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் படத்தயாரிப்பாளர்கள் ரூ.2 கோடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த தியேட்டருக்கு முன்னறிவிப்பு இன்றி நடிகர் அல்லு அர்ஜுன் படம் பார்க்க சென்றதால் தான் அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததில் உயிர்ப்பலி ஏற்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். அல்லு அர்ஜுன் திரையரங்கம் சென்றதால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என தெலங்கானா மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் முதல்முறையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண்.
இதுபோன்று ரசிகர்கள் கூடுவதை தவிர்க்க தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தியேட்டர்களில் முக்காடு போட்டு படம் பார்க்கும் பழக்கத்தை கடைபிடித்து வருவதாக தெலுங்கு நடிகரும், ஆந்திர துணை முதல்-மந்திரியுமான பவன் கல்யாண் தெரிவித்து உள்ளார்.
மேலும் இதுகுறித்து பவன்கல்யாண் கூறும்போது, “ரேவதி மரணம் என்னை கலங்க வைத்தது. சட்டம் அனைவருக்கும் சமம். பாதுகாப்பு சார்ந்த போலீஸாரின் கருத்தை திரையரங்க நிர்வாகம் நடிகர் அல்லு அர்ஜுன் வசம் முன்னதாக தெரிவித்திருக்க வேண்டும்.
ரேவதி குடும்பத்துக்கு மனிதாபிமானம் காட்டுவதில் குறை இருக்கிறது. இந்த துயரில் அல்லு அர்ஜுனை தொடர்புப்படுத்தி, அவர் மீது மட்டும் குற்றச்சாட்டு வைப்பது நியாயமானது அல்ல. இதனால் அவர் மிகுந்த குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார். முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது பொறுப்பை உணர்ந்து தான் இந்த விவகாரத்தை கையாள்கிறார். சில நேரங்களில் சூழலை பொறுத்து முடிவு எடுக்க வேண்டி இருக்கும்" என்றும் அவர் கூறினார்.
மேலும் அவர், "நடிகர் சிரஞ்சீவி கூட ரசிகர்களுடன் தியேட்டரில் படம் பார்க்க செல்வார். ஆனால் அவர் வந்து இருப்பது யாருக்கும் தெரியாது. தனது அடையாளத்தை மறைத்து, முக்காடு போட்டுக்கொண்டு தனியாகவே தியேட்டரில் போய் படம் பார்ப்பார்'' என்றார்.
அல்லு அர்ஜுனும் ஆந்திர துணை முதல்வரான பவன் கல்யாணும் உறவினர்கள் ஆவர். அதாவது அல்லு அர்ஜுனின் அத்தை சுரேகாவைதான் பவன் கல்யாணின் மூத்த சகோதரரான நடிகர் சிரஞ்சீவி திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் மெகாஸ்டார் என போற்றப்படுபவர் சிரஞ்சீவி. தெலுங்கு மெகாஸ்டார் ரசிகர்களின் இதயங்களில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். அவரது குறைபாடற்ற சண்டை மற்றும் நடனக் காட்சிகள் நடிகருக்கு அதிக பாராட்டுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளன. சிறந்த பொழுதுபோக்காளராக இருப்பதோடு மட்டுமல்லாமல், சிரஞ்சீவி தனது திரைப்படங்கள் மூலம் சமூக செய்திகளை தனது பார்வையாளர்களுக்கு தெரிவிக்கும் திறனுக்காக அறியப்படுகிறார்.