

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான செழியன் நடத்தி வரும் 'தி ஃபிலிம் ஸ்கூல்' (The Film School) திரைப்படப் பள்ளியில் பயின்ற 34 மாணவர்கள், ஒரே நேரத்தில் 34 சுயாதீனத் திரைப்படங்களை (Independent Films) இயக்கி ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இதற்கான அறிமுக விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
செழியன் ‘கல்லூரி’, ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘பரதேசி’ உள்ளிட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக முத்திரை பதித்ததோடு மட்டுமில்லாமல் ‘டூ லெட்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் பாராட்டுகளைக் குவித்தவர்.
ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான செழியன் 'தி ஃபிலிம் ஸ்கூல்' என்னும் பயிற்சி பட்டறையை நடத்தி வருகிறார். இதில் பயின்ற 34 மாணவர்கள் ஒன்றிணைந்து 34 சுயாதீன திரைப்படங்களை உருவாக்குகிறார்கள். இதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இப்படி ஒரே நிறுவனத்தில் பயின்ற 34 பேர்களின் 34 திரைப்படங்கள் ஒரே நேரத்தில் தொடங்கப்படுவது இதுதான் முதல் முறை.
இந்நிகழ்ச்சியில் படத் தொகுப்பாளர்கள் ஸ்ரீகர் பிரசாத், பி லெனின், ஒளிப்பதிவாளர்கள் பி.சி. ஸ்ரீராம், ரவிவர்மன், வரைகலை இயக்குனர் ட்ராட்ஸ்கி மருது, தயாரிப்பாளர்- விமர்சகர் தனஞ்ஜெயன், இயக்குனர்கள் ஹரிஹரன், ஞானராஜசேகரன் போன்றோர் கலந்து கொண்டனர்.
விழாவில் எடிட்டர் பி.லெனின் பேசும் பொழுது, "இங்கு விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட 'தி ஃபிலிம் ஸ்கூல்' மாணவப் படைப்பாளிகளின் சுயவிவர பட்டியலில் படைப்பிற்கான பட்ஜெட் 50 லட்சம் ரூபாய் தான் அதிகபட்சமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதில் படப்பிடிப்பு நாட்களும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏழு ஸ்வரம் தெரிந்திருந்தால் உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று பேசி விடலாம். இதற்கு ஆங்கிலமோ, இந்தியோ தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழ் தெரிந்தால் மட்டும் கூட போதும்.
இப்பொழுது நாங்கள் அவற்றை தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். முழு நீள திரைப்படத்தையும் சொன்ன நாட்களுக்குள் படப்பிடிப்பை நிறைவு செய்து வழங்கி இருக்கிறார்கள். நான் திரைத்துறையில் பணியாற்ற தொடங்கி 61 ஆண்டுகள் ஆகின்றன. இன்றும் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஸ்கிரிப்ட் தான் முக்கியம். திரைக்கதையும் முக்கியமானது. எனவே இளம் இயக்குனர்கள் அதில் கவனம் செலுத்துங்கள்" என்று கூறியுள்ளார்.