விமர்சனம்: திரௌபதி 2 - சுமாரான மேடை நாடகம் பார்த்த உணர்வு!
ரேட்டிங்(2 / 5)
எப்போதும் சமூகம் சார்ந்த சென்சிடிவ் கதைகளை இயக்கி பரபரப்பை ஏற்படுத்துபவர் டைரக்டர் மோகன் G. இவர் இயக்கத்தில் தற்போது திரௌபதி 2 என்ற திரைப்படம் வெளிவந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருபவர் பிரபாகர் (ரிச்சர்ட் ரிஷி). அந்த ஊருக்கு வரும் ஒரு சிலரை ஒரு கோவிலுக்கு அழைத்து செல்கிறார் ரிஷி. அங்கே உடன் வரும் ஒரு பெண் மீது திரௌபதியின் ஆத்மா இறங்குகிறது. அப்பெண் 14 ஆம் நூற்றாண்டில் நடந்த ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.
திருவண்ணாமலை பகுதியை ஆட்சி செய்து வருகிறார் வீர வல்லாள மகாராஜா (நட்டி நடராஜ்). மகாராஜாவின் மேற்பார்வையில் வளர்ந்து வருகிறார் காடவராயன் (ரிச்சர்ட் ரிஷி). இந்த கால கட்டத்தில் டெல்லி துக்ளக் சுல்தானும், மதுரையை ஆளும் கில்ஜியும் நாட்டு மக்களை மதம், வழிபாடு, கோவில் என பல விஷயங்களில் துன்புறுத்தி வருகிறார்கள்.
மகாராஜாவும், காடவராயனும் இதை எதிர்த்து போராடுகிறார்கள். எதிர்பாராத விதமாக மகாராஜா, சுல்தானின் சூழ்ச்சியால் கொல்லப்படுகிறார். இதற்கு பழி வாங்க காடவராயன், சுல்தானின் கோட்டைக்கு செல்கிறார். மற்றொருபுறம் காடவராயன் மனைவி திரௌபதி, கில்ஜியின் கதையை முடிக்க மதுரை செல்கிறார். இவர்களின் திட்டம் நிறைவேறியதா? என்று சொல்கிறது திரௌபதி 2.
இங்கே சொன்ன கதைக்கு எந்த வித மத சாயமும் இல்லாமல், சரியான திரைக்கதை அமைத்திருந்தால் இப்படம் சிறந்த படமாக வந்திருக்கும். மாறாக ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மீது வெறுப்புணர்வை காட்டும் படமாக வந்துள்ளது திரௌபதி 2.
இந்தியாவின் மீது படையெடுத்த பல அந்நிய தேசத்தவர்கள் நம் மக்களிடம் பல கொடுமைகளை நிகழ்த்தினார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இதை உள்ளபடி காட்டாமல் மத சாயம் பூசி உள்ளார் மோகன் G.
படத்தில் நட்டியை தவிர மற்ற அனைவருமே மிக சுமாராக நடித்துள்ளார்கள். ரிச்சர்ட் பேசும் வசனத்திலும், நடிப்பிலும் கம்பீரம் இல்லை. படத்தின் ஒளிப்பதிவு கூட சொல்லும் படி இல்லை. படம் பார்த்து முடித்த பின் சுமாரான மேடை நாடகம் பார்த்த உணர்வு தான் வருகிறது.
படத்தில் ஜிப்ரானின் இசை சிறப்பாக உள்ளது. குறிப்பாக ராமர் தொடர்பான பாடல் நன்றாக உள்ளது. தமிழ் நாட்டில் விவசாய நிலங்கள் உரிமையாளர்களுக்கே தெரியாமல் வக்பு வாரியத்திற்கு கீழ் இருப்பதாக காட்டுகிறார்கள். இதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா? காஷ்மிர் பைல்ஸ், கேரளா ஸ்டோரி, ரஸாகர் போன்ற குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான படங்கள் வரிசையில் திரௌபதியும் வந்துள்ளது.
இது போன்று பல படங்கள் வந்தாலும் தமிழ் நாட்டில் என்றும் மத நல்லிணக்கம் மாறாது. இங்கே சிக்கந்தரும், முருகனும் அண்ணன் தம்பிதான். இது மோகன் G போன்றவர்களுக்கு புரிந்தால் சரி.

