தென்மேற்கு பருவக்காற்று ஒளிப்பதிவாளரும் டூலெட் (To let) திரைப்பட இயக்குனரான செழியன் காலமானார்..!!

நிழல் உலகத்தின் நுணுக்கங்களை நிஜமாக மாற்றிய வித்தகனின் திரைக்கதை மற்றும் ஒளிப்பதிவு சாதனைகள் குறித்த தொகுப்பு.
cinematographer Chezhiyan Passed
cinematographer Chezhiyan
Updated on

தமிழ் சினிமாவின் உலகத் தரமிக்க ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் செழியன். தனது கேமராவின் வழியாக கிராமங்களையும் மனிதர்களையும் இயல்பாக படம்பிடித்து இயற்கை அழகுடன் காட்டியவர். அவரது திடீர் மறைவு தென்னிந்திய சினிமாவை சோகமாக்கியுள்ளது. தனது தனிப்பட்ட திறமை காரணமாக வளரும் இயக்குனர்களின் திரைப்படங்களில் வண்ணங்களை பதிவேற்றியவர் செழியன் , இன்று அவரது புகைப்படம் கருப்பு வெள்ளையாக மாறியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் பிறந்த வளர்ந்த செழியன் , காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பை முடித்தவர். பொறியியல் பயின்றாலும் அவரது ஆர்வம் சிறுவயதில் இருந்த ஓவியம் மற்றும் ஒளிப்பதிவையே சுற்றி வந்துள்ளது. இதனால் , ஒளிப்பதிவின் நுட்பங்களை அறிந்துக் கொள்ள, தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரான் பிசி.ஶ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்தார்.

ஒளிப்பதிவினை நன்கு கற்று தேர்ச்சி பெற்ற அவர் , சினிமா வாய்ப்புகளை தேடினார். 2007 ஆம் ஆண்டில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் மூலமாக அவருக்கு 'கல்லூரி ' திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக முதல் வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து பலரது பாராட்டுகளையும் அவர் பெற்றார். அதன் பின்னர் விஜய் சேதுபதி கதாநாயகனாக அறிமுகமான 'தென்மேற்கு பருவக்காற்று' திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்தார்.

இந்த திரைப்படத்தில் கிராமங்களை இவர் காட்சிப்படுத்திய விதம் இவரது திறமையை வெளி உலகத்திற்கு காட்டியது. அதன் பின்னர் பாலாவின் 'பரதேசி ’ திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தார். இந்த திரைப்படத்தின் காட்சி அமைப்புகள் மற்றும் ஒளிப்பதிவு ஆகியவை சர்வதேச தரத்தில் இருந்தது. பிரிட்டிஷ் கொடுங்கோல ஆட்சி காலத்தில் தமிழர்கள் தேயிலைத் தோட்டங்களில் அனுபவித்த துயரங்களையும் சித்திரவதைகளையும், அவரது கேமராவின் மூலம் வலியினை பார்வையாளர்களுக்கு கடத்தினார்.

அந்த காட்சிகள் வறுமை, பசி, அவமானம் என அனைத்தையும் திரையினில் பேச வைத்தது அவரது தனித்திறமை. இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவிற்காக அவருக்கு சர்வதேச விருதான BFI விருது கிடைத்தது. இந்த திரைப்படத்திலிருந்து செழியன் இயக்குநர் பாலாவின் ஆஸ்தான கேமராமேன் ஆனார். அவரது 'தாரை தப்பட்டை' திரைப்படத்திற்கும் இவரே ஒளிப்பதிவு செய்தார்.

Chezhiyan directed film
Tolet film

ஒளிப்பதிவில் மட்டுமல்ல எழுத்துத் துறையிலும் அவர் தனது முத்திரையை பதிக்க தவறியது இல்லை. அவர் சர்வதேச சினிமாக்களை பற்றி 'உலக சினிமா ' என்ற ஒரு தொடரை ஆனந்த விகடன் இதழில் எழுதி வந்துள்ளார். 2004 ஆம் ஆண்டு அவர் எழுதிய ஹார்மோனியம் என்ற ஒரு சிறுகதை அவருக்கு 'கதா விருது' பெற்று தந்தது. கதைகளை எழுதுவது மட்டுமல்லாமல் , உணர்வுபூர்வமான கதைகளை காட்சிகளாக மாற்றி பாராட்டும் பெற்றவர்.

2017 ஆம் ஆண்டு அவர் திரைக்கதை எழுதி இயக்கிய 'டூ லெட்' (To Let) திரைப்படம் நிறைய தாக்கங்களை ஏற்படுத்தியது. வாடகைக்கு வீடு தேடி அலையும் நடுத்தர மக்களின் வாழ்வியலை, அவர் படம் எடுத்த விதம் பலரையும் பாராட்டையும் பெற்று தந்தது. அது மட்டுமல்லாமல் தேசிய விருதையும் அவருக்கு பெற்றுத் தந்தது.இந்த திரைப்படத்தை அவரது மனைவி தயாரித்திருந்தார். விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் ஏராளமானவர்களின் பாராட்டுகளை பெற்றது.

பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் டூ லெட் திரைப்படம் இந்தியாவின் சார்பாக பலமுறை திரையிடப்பட்டுள்ளது. தற்போது அவர் கொன்றால் பாவம் , மைலாஞ்சி உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றி வந்துள்ளார். அவரது திடீர் மறைவு தமிழ் சினிமா ரசிகர்களையும் சினிமா வட்டாரத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவிற்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படத்திற்கும் நிஜ சம்பவத்திற்கும் தொடர்பு உண்டா?
cinematographer Chezhiyan Passed
logo
Kalki Online
kalkionline.com