'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படத்திற்கும் நிஜ சம்பவத்திற்கும் தொடர்பு உண்டா?

வரலாற்றுப் பின்னணியும், தற்போதைய படத்தின் திரைக்கதையும் - ஒரு ஒப்பீடு.
கொலை வழக்கு|Lakshmi Kanthan murder case
கொலை வழக்கு|Lakshmi Kanthan murder case
Updated on
ரேட்டிங்(2.5 / 5)

1940-களில் தமிழ்நாட்டிலும், இந்திய அளவிலும் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட வழக்கு 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு'. இந்த கொலை வழக்கில், அப்போது தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்த ஒரு நடிகரின் பெயரும் அடிபட்டது. லட்சுமிகாந்தன் அவர்களை யார் கொலை செய்தது என்ற விஷயம் இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது. தற்போது, 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' என்ற பெயரில் திரைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்கியவர் தயாள் பத்மநாபன். தயாள் பத்மநாபனுடன் இணைந்து, இப்படத்திற்கு கவிதா பாரதி திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். படத்தில் வெற்றி, பிரகிடா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

ஒரு பெண் நீதிபதி முன்பு ஒரு வழக்கு வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு கொலை செய்துள்ளார். அவருக்குத் தண்டனை வழங்கும் முன் நீதிபதியின் நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன. அது என்ன?

அது 1970-ம் ஆண்டு காலம். 'அறிவுமதி' என்ற அறிவு, பல்வேறு சிறு சிறு திருட்டுகளைச் செய்து வருகிறார். ஆனால், எந்தத் திருட்டிலும் அவர் மாட்டவில்லை. இவர் மல்லிகா என்ற பெண்ணைக் காதலிக்கிறார். இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. மல்லிகா, "இனி சிறு சிறு திருட்டுகள் செய்ய வேண்டாம். அதற்குப் பதிலாக, நாம் கடன் வாங்கிய பணத்திற்கு ஈடாக நமது நிலப் பத்திரத்தை வைத்துள்ள ரெட்டியாரிடம் சென்று பத்திரத்தைத் திருடிக்கொண்டு வா. அதை வைத்து நாம் நம் நிலத்தில் பயிர் செய்து பிழைக்கலாம்" என்று அறிவுரை கூறுகிறார். அறிவும் மனைவியின் சொல்பேச்சைக் கேட்டு ரெட்டியார் வீட்டில் தன்னுடைய பத்திரத்தைத் திருடச் செல்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக ரெட்டியார் செய்யும் ஒரு மோசமான செயலால், ரெட்டியாரைக் கொலை செய்துவிடுகிறார்.

இந்தக் கொலைக்கு அறிவுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. அறிவு சிறைச்சாலையில் ஒரு புத்தகம் எழுதுகிறார். அந்தப் புத்தகத்தைச் சிறை அதிகாரியாக இருக்கும் சிவானந்தன் என்பவரிடம் தந்து, தன் மரணத்திற்குப் பிறகு பிரசுரிக்க வேண்டுகிறார். இவரது ஆசை நிறைவேறியதா? பெண் நீதிபதிக்கு அறிவின் பழைய நினைவுகள் வந்ததற்குக் காரணம் என்ன? என்று இந்தப் படம் சொல்கிறது.

கொலை வழக்கு|Lakshmi Kanthan murder case
கொலை வழக்கு|Lakshmi Kanthan murder case

இந்தப் படத்தின் பிளஸ் மற்றும் மைனஸ் இங்கே பார்க்கலாம்:

பிளஸ்:

  • இப்போது உலகம் முழுவதும் தூக்கு, மரண தண்டனைக்கு எதிராகப் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தப் படம் மரண தண்டனைக்கு எதிரான கருத்துகளைக் கொண்டுள்ளது. இயக்குனர் தயாள் பத்மநாபன் தான் எடுத்த கருத்திலிருந்து கடைசி வரை விலகவில்லை. இந்தக் கருத்துக்காக இந்தப் படத்தைப் பாராட்டலாம்.

  • கருத்திற்கு அடுத்தபடியாக நாம் பாராட்ட வேண்டிய விஷயம் பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவு. ஒரு சாதாரண நாடக பாணி திரைப்படத்தைச் தனது ஒளிப்பதிவால் ஒரு அழகான படமாகத் தர முயற்சி செய்துள்ளார் பன்னீர்செல்வம்.

  • தர்புகா சிவாவின் பின்னணி இசை நன்றாக உள்ளது. இவரது இசையில் வரும் பாரதியார் எழுதிய ஒரு காதல் பாடல் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது.

  • தூக்குத் தண்டனை கைதியின் இறுதி நாட்கள் எப்படி இருக்கும் என்பதை ஓரளவு இந்தப் படம் கண்முன் கொண்டு வருகிறது. பிரகிடா, மல்லிகா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக போலீஸ் அதிகாரியாக வரும் ரங்கராஜ் பாண்டேயும் சரியான நடிப்பைத் தந்துள்ளார். படத்தின் இறுதிக்காட்சியில் அரசியல் செயல்பாட்டாளர் சுபவீ தோன்றி, மரண தண்டனை பற்றி விளக்கும் இடம் நன்றாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
3 முறை விஜயை அணுகிய லிங்குசாமி - ஏன் ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்தது?
கொலை வழக்கு|Lakshmi Kanthan murder case

மைனஸ்:

  • படத்தின் தலைப்பு ஒரு திரில்லர் அனுபவத்தைத் தரும் என்று நாம் சென்று பார்த்தால், இது ஒரு நாடகம் போன்ற உணர்வைத் தருகிறது. இது ஏமாற்றமே.

  • படத்தில் பெரும்பான்மையான காட்சிகள் வசனம் மூலமாகவே நகர்ந்து கொண்டிருக்கிறது. இது திரைக்கதையில் ஒரு பின்னடைவைக் காட்டுகிறது.

  • மரண தண்டனைக்கு எதிரான கருத்தைக் கொண்டிருப்பதற்காக இந்தப் படத்தைப் பாராட்டினாலும், இன்னும் ஆழமாக இதை அலசி இருக்கலாம்.

  • ரங்கராஜ் பாண்டே, பிரகிடா இருவரின் நடிப்பும் நன்றாக இருந்தாலும், அறிவாக நடிக்கும் ஹீரோ வெற்றியின் நடிப்பு மிகச் சாதாரணமாக இருக்கிறது (வெற்றி இன்னும் நடிப்புப் பயிற்சி பெற வேண்டும்).

  • 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' என்ற புகழ்பெற்ற வழக்கை படத்தின் டைட்டிலாக வைத்தது பப்ளிசிட்டிக்காகத்தான் என்று சொல்லத் தோன்றுகிறது. படத்தில் வில்லனாக வரும் கவிதா பாரதி கதாபாத்திரம் பெயர் லட்சுமிகாந்தன் என்பதைத் தவிர, படத்திற்கும் உண்மைச் சம்பவமாக நடந்த லட்சுமிகாந்தன் கொலை வழக்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தத் தலைப்பு வைத்ததற்காகவாவது, சற்று ஒரு திரில்லர் அனுபவத்தைத் தர இயக்குனர் முயற்சித்திருக்கலாம்.

இதையும் படியுங்கள்:
யாஷ் என்ட்ரியால் எகிறிய வியாபாரம்... 2026 தீபாவளிக்கு தியேட்டர்கள் திணறப் போவது உறுதி!
கொலை வழக்கு|Lakshmi Kanthan murder case

மொத்தத்தில்… 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' திரைப்படம் பாசிட்டிவ், நெகட்டிவ் இரண்டும் கலந்ததாக உள்ளது. ஒரு கொலைக்கு மரண தண்டனை என்ற பெயரில் இன்னொரு கொலை செய்வது தீர்வாகாது என்பதைச் சொன்னதற்காக இந்தப் படத்தை நாம் பாராட்டலாம். நாடக பாணியில் இல்லாமல், சினிமா பாணியில் விறுவிறுப்பாக இருந்திருந்தால் இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக வந்திருக்கும்.

வரலாற்று நிகழ்வுகளையும் தற்போதைய ஊடகப் படைப்புகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் திறனைப் பெறுவீர்கள். இதன் மூலம் வெறும் விளம்பரத்தைப் பார்க்காமல், படத்தின் கருத்தியலை ஆழமாகப் புரிந்துகொள்ளும் முதிர்ச்சி உங்களுக்குக் கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com