
நடிகர் கவுண்டமனியின் மனைவி உடல்நலக்குறைவால் இன்று காலை காலமான செய்தி திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காமெடி என்றாலே ஒரு காலத்தில் கவுண்டமனி, செந்தில் தான். இவர்களின் வழி வந்தவர்கள் தான் வடிவேலு, விவேக் போன்றவர்கள். இன்றளவும் கவுண்டமனி, செந்தில் காமெடிக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. கரகாட்டக்காரன் படத்தின் வாழைபழ காமெடி இன்றைய காலத்து இளைஞர்கள் வரை பேமஸாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் கவுண்ட்டர்களின் மன்னன் என அழைக்கப்படுபவர் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. 1970 களில் இருந்து தனது திரை வாழ்க்கையை கவுண்டமணி துவங்கினார். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், நெற்றிக்கண் போன்ற படங்களில் நடித்து வந்தார்.
சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், விஜய், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வருகிறார்.
நடிகர் கவுண்டமணி 1963-ம் ஆண்டு ஷாந்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். திரைப்படங்களில் காதலர்களுக்கு உதவும் வேடங்களில் நடித்து பாராட்டு பெற்ற கவுண்டமணி, நிஜத்தில் காதல் திருமண்ம் செய்து கொண்டவர். மனைவி பெயர் சாந்தி. இவர்களுக்கு செல்வி, சுமித்ரா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்த கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) இன்று காலை 10 மணியளவில் காலமானார். அவரது உடல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை கேட்ட பொதுமக்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கவுண்டமனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.