

சினிமாவில் டூப் போடுவது என்பது இயல்பானதே. சில நடிகர்களால் சில செயல்கள் செய்ய முடியாத போதிலும், அவர்கள் இல்லாத போதிலும் இந்த டூப் கலாச்சாரம் உருவெடுத்தது. இதன் மூலம் நடிகர்களின் கால் ஷீட் கிடைக்காத பட்சத்தில் மிக உதவியாக இருக்கும். அப்படி அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை டாப் நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஒரு பிரபல காமெடி நடிகர் டூப் போட்ட தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
அதாவது 1995ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் முத்து. இந்த திரைப்படத்தை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார். இதில், ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அதுபோல அவருக்கு ஜோடியாக நடிகை மீனா நடித்திருப்பார். அது மட்டும் அல்லாமல் ராதாரவி, சரத் பாபு, ரகுவரன், செந்தில், வடிவேலு என்று பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இப்போதும் பலருடைய ஃபேவரிட் பாடல்கள் வரிசையில் இடம் பிடித்திருக்கும். அதிலும் ஒருவன் ஒருவன் முதலாளி, தில்லானா தில்லானா, குழுவாயிலே, கொக்கு சைவ கொக்கு, விடுகதையா வாழ்க்கை போன்ற அனைத்து பாடல்களுமே பெரிய அளவில் ஹிட் அடித்தது.
இந்த நிலையில், இந்த படத்தில் ரஜினிக்கு ஒரு சீனில் டூப் போட்டது பிரபல காமெடி நடிகர் ரமேஷ் கண்ணா தான். அவர் உதவி இயக்குனராக இருந்த காலத்தில் தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது. இதை பற்றி அவர் பேசிய வீடியோ காட்சிகள் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த திரைப்படத்தில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்க இவருக்கு உதவி இயக்குனராக ரமேஷ் கண்ணாவும் இருந்திருக்கிறார். அப்போது ஒரு சீனில் ரஜினிகாந்த்க்கு டூப் போட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
அதிலும் வயதான ரஜினிகாந்த் கோட்டில் வருவது போன்ற ஒரு காட்சியில் டூப் போட வேண்டும் என்று சொன்னதும் அதற்கு ஆள் இல்லாமல் இருந்திருக்கிறது. உடனே அந்த கோட்டை போட்டுக்கொண்டு ரமேஷ் கண்ணா ரஜினி போல ரெடியாகி நடித்து விட்டாராம். பிறகு வந்த கே எஸ் ரவிக்குமார் அடுத்து ஷார்ட் ரஜினிக்கு வைக்க வேண்டும் அவருக்கு கோட் வேணும் என்று சொல்ல, அங்கு வேறு கோட் இல்லை என்பதை தெரிந்ததும் ரமேஷ் கண்ணா அதிர்ச்சி ஆகி இருக்கிறார். உதவி இயக்குனர் என்பதன்ஓடி ஓடி வேலை செய்ததால் உடம்பெல்லாம் வேர்வையாக இருக்க அந்த கோட்டிலும் வேர்வையாக இருந்திருக்கிறது.
இதை எப்படி ரஜினியிடம் கழட்டி கொடுக்க என்று பயந்து போன ரமேஷ் கண்ணா அந்த கோட்டை உடை வடிவமைப்பவரிடம் கொடுத்து இதில் ஸ்பிரே போடு, இல்லன்னா காய வைத்து ஏதாவது செஞ்சு ரெடி பண்ணு ரஜினி சார் வேற ரெடியா இருக்காரு என்ன பண்ணனும்னு தெரியல என்று அவசரப்படுத்த பின்னாடியே ரஜினி நின்று கொண்டிருந்திருக்கிறார்.
ரஜினி என்ன ஆச்சு என்று கேட்க, இல்லை சார் நான் உங்களுக்கு டூப் போட்டேன். இந்த கோட் எல்லாம் வேர்வையாய் இருக்கு என்று சொல்ல அது இருக்கட்டும் கொடுங்க என்று அந்த கோட்டை அப்படியே வாங்கி அவர் போட்டுவிட்டு நடித்து விட்டார். அதை என்னால் மறக்க முடியாது என்று அந்த பேட்டியில் ரமேஷ் கண்ணா ரஜினி குறித்து பெருமையாக பேசி இருக்கிறார்.