'கே.ஜி.எஃப்' மற்றும் 'சலார்' போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்து பான்-இந்தியா அளவில் வெற்றிக்கொடி நாட்டிய ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம், தற்போது இந்திய புராணக் கதைகளை மையமாகக் கொண்டு 'மகாஅவதார் சினிமாட்டிக் யுனிவர்ஸ்' (Mahavatar Cinematic Universe) எனும் ஒரு புதிய அனிமேஷன் பிரபஞ்சத்தை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது இந்திய அனிமேஷன் துறையில் ஒரு புரட்சிகரமான முன்னெடுப்பாகப் பார்க்கப்படுகிறது.
கிளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹோம்பலே ஃபிலிம்ஸ் இந்த மகாஅவதார் பிரபஞ்சத்தை உயிர்ப்பிக்க உள்ளது. சுமார் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீடிக்கும் இந்த பிரம்மாண்ட திட்டத்தில், மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களை மையமாகக் கொண்ட ஏழு அனிமேஷன் திரைப்படங்கள் வரிசையாக வெளியாகவுள்ளன.
இந்த சினிமாட்டிக் யுனிவர்ஸின் முதல் படமாக, 'மகாஅவதார் நரசிம்மர்' திரைப்படம் வருகிற ஜூலை 25, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தத் திரைப்படம் 3D தொழில்நுட்பத்தில், ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. அஸ்வின் குமார் இயக்கும் இந்த நரசிம்மர் படத்தை, ஷில்பா தவான், குஷால் தேசாய் மற்றும் சைதன்யா தேசாய் ஆகியோர் கிளீம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கின்றனர்.
மகாஅவதார் சினிமாட்டிக் யுனிவர்ஸின் வெளியீட்டு தேதிகள்:
மகாஅவதார் நரசிம்மர் (2025)
மகாஅவதார் பரசுராமர் (2027)
மகாஅவதார் ரகுநந்தன் (2029)
மகாஅவதார் துவாரகாதீஷ் (2031)
மகாஅவதார் கோகுலானந்தா (2033)
மகாஅவதார் கல்கி பாகம் 1 (2035)
மகாஅவதார் கல்கி பாகம் 2 (2037)
இந்தத் திரைப்படத் தொடர் வெறும் அனிமேஷன் படங்களுடன் நின்றுவிடாமல், காமிக் புத்தகங்கள், வீடியோ கேம்கள், டிஜிட்டல் கதை விரிவாக்கங்கள் மற்றும் பலவிதமான சேகரிப்புகள் என ஒரு முழுமையான கலாச்சார சூழலியலை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்தை உலக அளவில் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாக இந்த மகாஅவதார் பிரபஞ்சம் பார்க்கப்படுகிறது. புராணக் கதைகளை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து, பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்க இந்தத் திட்டம் முனைப்புடன் உள்ளது.