
நம் தென்னிந்திய சமையலில் சட்னி முதல் சாம்பார் வரையிலான அனைத்து முன்னணி உணவுகளும் 'தாளிப்பு' என்றொரு செயல்பாட்டை சந்திக்காமல் முழுமையடையாது. தாளிப்பில் கடுகு, உளுத்தம் பருப்பிற்கு அடுத்ததாக சேர்க்கப்படும் கறிவேப்பிலையிலிருந்து வரும் வாசனையே அந்த குறிப்பிட்ட உணவிற்கு கூடுதல் மணமும் சுவையும் சேர்த்துவிடும். கறிவேப்பிலையிலிருந்து கிடைக்கும் 10 வகை ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. கறிவேப்பிலை உணவிற்கு வாசனை சேர்ப்பது மட்டுமின்றி, பல வகையான உடல் நலக்கோளாறுகளை குணப்படுத்தவும் பயன்படும்.
2. கறிவேப்பிலை ஜூஸுடன் லெமன் ஜூஸ் மற்றும் சிறிது வெல்லம் சேர்த்துக் கலந்து குடித்தால் அது ஜீரணத்துக்கு உதவும் என்ஸைம்களின் உற்பத்தி அளவை அதிகரிக்கச் செய்யும். மேலும், வாந்தி, குமட்டல், மார்னிங் சிக்னஸ் போன்ற கோளாறுகளை குணமாக்கவும் உதவும்.
3.ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமுடைய கார்பசால் (Carbazol) என்னும் ஆல்கலாய்டு கறிவேப்பிலையில் உள்ளது. இது மந்தநிலையில் இருக்கும் வயிற்றை குணப்படுத்தி நல்ல முறையில் இயங்க உதவி புரியும்.
4. இதிலுள்ள ஆல்கலாய்டு சரும அரிப்பு, வெட்டுப்பட்ட சிறு காயம், நெருப்புப்பட்டதால் உண்டாகும் கொப்பளம் போன்றவற்றை சிறந்த முறையில் குணமாக்க உதவும்.
5. கறிவேப்பிலையில் ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளது. இது நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள இரும்புச்சத்தை உடல் உறிஞ்ச பெரிதும் உதவி புரியும். மேலும் இரும்புச்சத்துக் குறைப்பாட்டால் உண்டாகும் அனீமியா நோய் வருவதை தடுக்கவும் உதவும்.
6. தினமும் ஒரு இணுக்கு கறிவேப்பிலை இலைகளை மென்று தின்றால் உடல் எடை கூடாமல் பார்த்து கொள்ளலாம். உடலில் கொழுப்பின் அளவு குறையவும் வாய்ப்புண்டு. மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனை நீங்கும்.
7. கறிவேப்பிலை, இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கணையம் (Pancreas) ஃபிரீ ரேடிக்கல்களால் சேதம் அடையாமல் பாதுகாக்கவும் உதவி புரியும்.
8. பார்வைத் திறனை மேம்படுத்த உதவும் வைட்டமின்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் கறிவேப்பிலையில் அதிகம் உள்ளன.
9. கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் C மற்றும் பிற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
10. கறிவேப்பிலை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தோலின் பொலிவை அதிகரிக்கவும், முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும். கறிவேப்பிலையில் உள்ள சில பொருட்கள் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டதென சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இத்தனை நற்பயன்கள் கொண்ட கறிவேப்பிலையில் சட்னி செய்தும், பொடி செய்து சாதத்தில் நெய்யுடன் கலந்தும் உட்கொள்ளலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)