சமீபத்தில் டிடிஎஃப் வாசன் செல்போன் பேசிய படி கார் ஓட்டியதாக கைது செய்யப்பட்ட நிலையில், யூடியூப்பர் விஜே சித்து மீதும் தற்போது ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சினிமா நடிகர்களை தாண்டி, யூடியூப்பர்களும் தற்போது பேமஸாகி வருகின்றனர். லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்கள் கொண்ட இவர்கள் தினமும் வ்லாக் செய்து சம்பாதித்து வருகின்றனர். இவர்களை ஃபாலோ செய்யும் ரசிகர்கள் தினசரி இவர்களுடன் வீடியோ மூலம் தொடர்பில் இருக்கின்றனர்.
அப்படி பிரபலமானவர்கள் தான் இர்பான், டிடிஎஃப் வாசன், விஜேசித்து உள்ளிட்டோர். கடந்த வாரம் குழந்தையின் பாலினத்தை அறிவித்து சர்ச்சையில் சிக்கிய இர்பான், சுகாதாரத்துறை பரிந்துரை பெயரில் மன்னிப்பு கோரி வீடியோவை டெலிட் செய்தார். தொடர்ந்து தற்போது டிடிஎஃப் வாசன், காரில் சென்று கொண்டிருக்கும் போது சாலை விதிகளை மீறும் விதத்தில் செல்போனில் பேசியபடி சென்றதால் கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட TTF வாசனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.
இதன் தொடர்ச்சியாக தற்போது விஜே சித்து மீதும் புகார் வந்துள்ளது. விஜே சித்து வெளியிடும் வீடியோக்களில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிடுவதாகவும், போக்குவரத்து விதிகளை மதிக்காமல், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவதாகவும் கூறி இதனை பார்த்து மாணவர்கள், இளைஞர்கள் தவறான வழியில் செல்ல வாய்ப்புள்ளதாக சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஷெரின் என்கிற பயிற்சி வழக்கறிஞர் சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுவும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்துமா என்று தான் பார்க்க வேண்டும்.