
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படம், வருகிற 14-ந்தேதி திரைக்கு வருகிறது. 'கூலி' திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் உலகெங்கிலும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி தெலுங்கு ரசிகர்களும் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான டிரெய்லர் ரஜினிகாந்தின் சில அற்புதமான ஸ்டைல் மற்றும் மாஸ் ஆக்ஷன் காட்சிகளைக் காட்டியுள்ளது. இந்த முறை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெறும் நட்சத்திர சக்தியை விட கதையில் அதிக கவனம் செலுத்தியதாகத் தெரிகிறது.
இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் நாகார்ஜூனா, அமீர்கான், உபேந்திரா, சோபின் சாஹிர், சுருதிஹாசன், சத்யராஜ் என பெரும் நட்சத்திர பட்டாளங்கள் இணைந்திருப்பதால், படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் ‘கூலி' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தின் இந்தி டிரெய்லரின் தியேட்டர் வீடியோ வைரலாகி, யூக அலையை கிளப்பியுள்ளது. திரையரங்குகளில் காட்டப்படும் இந்த டிரெய்லரில், யூடியூப் பதிப்பில் காணப்படாத கூடுதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன, அந்த காட்சிகளை பார்த்த பல ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் சிறப்பு வேடத்தில் நடித்திருப்பதாக நம்பினர்.
தீக்கு எண்ணெய் ஊற்றும் வகையில், இசையமைப்பாளர் அனிருத்தின் வீட்டில் சிவகார்த்திகேயன் இருக்கும் புகைப்படம், அங்கு லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகியோர் ரஜினிகாந்தின் ஓவியத்தை பின்னணியில் வைத்து போஸ் கொடுத்தது, போன்றவை இணையத்தில் வைரலாக தொடங்கியது.
அதுமட்டுமின்றி சில தினங்களுக்கு முன்பு, நடிகர் அமீர்கான், 'சீதாரே ஜமீன் பர்' படத்தைப் பார்க்கும் கூலி நடிகர்கள்' என்று இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். மேலும் அதில் கூலியின் முக்கிய குழுவுடன் சிவகார்த்திகேயனையும் டேக் செய்திருந்ததால், சிவகார்த்திகேயன் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்று இணையத்தில் தகவல் காட்டுத்தீ போல் பரவியது. எனவே கூலி குழுவுடன் சுற்றித் திரியும் சிவகார்த்திகேயன், ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறாரா என்பது சந்தேகமாகவே உள்ளது. ஆனால், சிவகார்த்திகேயன் தரப்பினர் இதை மறுத்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் இன்னொரு புதிய படத்தில் நடிக்கத்தான் அவரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘தி கோட்' படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.