சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘கூலி’ திரைப்படம் குறித்த செய்திகளே, இப்பொழுது பத்திரிகைத் துறையின் பரபரப்பில் முக்கிய இடம் வகித்து வருகிறது.
படம் ரிலீசாகும் முன்னரே பல கோடிகளைச் சம்பாதித்து விட்டதாகவும், ரிலீசான பின்னர் இன்னும் பல கோடிகளைக் கொண்டு வரும் என்றும் பல கணிப்புகள் அன்றாடம் வெளியாகிக் கொண்டே உள்ளன. இது ஒரு புறமிருக்க, வெற்றிக் கணிப்புகளைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டாரும், தயாரிப்பாளர் கலாநிதி மாறனிடம் ஏற்கெனவே பேசப்பட்ட 150 சி(C)யுடன் மேலும் 50 சி சேர்த்து 200சி யாகக் கேட்டதாகவும் செய்திகள் கசிகின்றன. ரசிகர்கள் படம் ரிலீசாகக் காத்திருக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அமீர்கான், நாகார்ஜுனா அக்கினேனி, சௌபின் ஷகிர் மற்றும் உபேந்திர ராவ் ஆகிய நடிகர்களுடன் ரஜினி கை கோர்த்திருக்கிறார். சமீப காலமாக, ரஜினியின் படங்களில் மாற்று மொழி நடிகர்களும் நடிப்பது பாராட்டுக்குரியது. இந்திய சினிமா உலகின் ஒற்றுமையைப் பறைசாற்றும் இந்நிகழ்வு தொடர வேண்டும்.
நாம் அறிந்த வரை, தேவா என்ற பெயருள்ள கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதாகவும், தங்கக் கடத்தல் மன்னனான அவர் தனது மதிப்பை மேலும் கூட்டும் விதமாக நண்பர்களுடன் சேர்ந்து அதிரடியில் இறங்குவதாகவும் தெரிகிறது.
அதன் காரணமாகத்தான் போலும் அதிரடி, ஆக்ஷன், த்ரில்லர் திரைப்படம் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியின் இந்தப் படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட் கிடைத்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.
1995ம் ஆண்டிலேயே இதே தலைப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சரத்குமார்-மீனா நடிப்பில் ஒரு படம் வெளி வந்துள்ளது.
‘கூலி’ என்ற சொல்லுக்குப் பொருளாக, சாதாரணமாக அன்றாடம் வழங்கும் சம்பளத்தைக் கூறுவார்கள். ’தினக் கூலி’ என்ற சொல்லும் வழக்கத்தில் உண்டு. வேலையின் பெயருடன் சேர்த்துக் கூறுவதும் உண்டு. உதாரணம்- ‘விவசாயக் கூலி’. சின்னச் சின்ன வேலைகள் செய்தவுடன் கொடுக்கப்படும் சிறு சம்பளமே கூலி என்று பொருள் கொள்வதும் உண்டு.
மூட்டை தூக்குபவர்கள், பயணியரின் பெட்டி, படுக்கை போன்றவற்றைச் சுமப்பவர்கள் ஆகியோருக்கான சம்பளமே கூலி என்று அழைக்கப்படுவதுண்டு. இப்படிக் கூலி வேலை செய்பவர்களையே ‘கூலி’ என்று கூப்பிடுவதும் நம்மிடையே இருந்துள்ள வழக்கம்.
திரைப்படத் தலைப்பில் கூலி என்ற தலைப்புக்குக் கீழே அன்லீஷ்டு (unleashed) என்று ஆங்கிலத்தில் போட்டுள்ளார்கள். கூலிக்கும் அன்லீஷ்டுக்கும் என்ன சம்பந்தம் என்று எத்தனை பேர் யோசித்தீர்கள் என்று தெரியவில்லை.
இந்த லீஷ்டு (Leashed) மற்றும் அன்லீஷ்டு (unleashed) என்ற வார்த்தைப் பிரயோகம் அதிகமாகக் கையாளப்படுவது ஐரோப்பிய நாடுகளில்தான்.
நடைப் பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள பல சாலைகளில் ஆங்காங்கே போர்டுகளில் இவ்வார்த்தைகளைக் காணலாம். நாய்களைக் கட்டியே பிடித்துச் செல்ல வேண்டும் என்பதைக் குறிக்க (Leashed) என்றும், அவிழ்த்து விட்டு உடன் அழைத்துச் செல்லலாம் என்பதைக் குறிக்க (UnLeashed) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதைப் பல இடங்களில் யாம் கண்டிருக்கிறோம். அன்லீஷ்டு என்பதற்குப் பொருள் ‘கட்டவிழ்த்து விடப்பட்டது’ என்பதாகும்.
சூப்பர் ஸ்டார் தளைகளை நீக்கிப் புதுப் பொலிவுடனும், புதுத் தெம்புடனும் படத்தில் வலம் வருவதைக் குறிக்கவே இந்த அன்லீஷ்டு என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருப்பார்கள் போலும்!
என்னதான் கட்டவிழ்த்து விடப்பட்டாலும் - திரைக் கதைக்காகக் கூட - அதீத ஆசை காரணமாக, சட்டத்திற்குப் புறம்பானவற்றைக் கதாநாயகன் செய்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது இயக்குனரின் பொறுப்பு. அது சூப்பர் ஸ்டாரின் இமேஜைக் கெடுப்பதாக அமைந்து விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உங்களனைவரையும் போலவே யாமும் படம் பார்க்கும் ஆசையில் உள்ளோம். பார்ப்போம்!