
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னாவுக்கு ரசிகர்கள் ஏராளம். கிரிக்கெட் ரசிகர்களால் இவர் ‘சின்ன தல’ என அன்புடன் அழைக்கப்படுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கி விளையாடினார். 2022-ம் ஆண்டுடன் எல்லா வகையிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெற்றார்.
இதற்கிடையில் சின்ன சின்ன விளம்பரப் படங்களில் நடித்திருந்த சுரேஷ் ரெய்னா தற்போது கதாநாயகன் அவதாரம் எடுக்கிறார். புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் டிரீம் நைட் ஸ்டோரிஸ் நிறுவனம் (டி.கே.எஸ்.) சார்பில் டி.சரவணகுமார் தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக சுரேஷ் ரெய்னா நடிக்கிறார். சந்தீப் கே.விஜய் ஒளிப்பதிவில், சந்தோஷ் நாராயணன் இசையில் தயாராகும் இந்த படத்தை லோகன் எழுதி, இயக்குகிறார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்துக்கான அறிமுக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
சுரேஷ் ரெய்னா பேசும்போது, ‘எனக்காக பறக்கும் விசில்கள் மகிழ்ச்சி அளிக்கிறது. சினிமா எனக்கு பிடிக்கும். கதாநாயகனாக களமிறங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகம் எனக்கு பிடித்த இடம். இங்கு நிறைய ஆசிர்வாதங்களையும், அற்புதங்களையும் கண்டுள்ளேன். தமிழ் படத்தில் நடிப்பது எனக்கு பெருமையும் கூட. கதை எனக்கு பிடித்திருந்ததால் உடனடியாக ஒப்புக்கொண்டேன். இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்', என்றார்.
பாலிவுட்டை தாண்டி தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாவதே சுரேஷ் ரெய்னாவின் விருப்பமாக இருக்கிறது. அவரது விருப்பம் தற்போது நிறைவேறி இருக்கிறது.
புதிய படத்துக்கான அறிமுக வீடியோவை கிரிக்கெட் வீரர் ஷிவம் துபே வெளியிட்டு பேசும்போது, ‘‘நானும் எதிர்காலத்தில் சினிமா பற்றி நிச்சயம் சிந்திப்பேன். ஒருவேளை நடிக்கும் சூழல் வந்தால், ரொமான்டிக் ஹீரோவாக நடிப்பேன். ரஜினிகாந்த், அஜித்குமார் இருவரும் எனக்கு பிடித்தமான நடிகர்கள்'', என்றார். இதில் நடிகர் சதீஷ், இயக்குனர்கள் மோகன்ராஜா, விஜய் மில்டன், ராமகிருஷ்ணன், விஷால் வெங்கட், தயாரிப்பாளர் தேனப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கதாநாயகனாக களமிறங்கும் சுரேஷ் ரெய்னாவுக்கு ரசிகர்களும், கிரிக்கெட் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கெனவே முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தமிழில் ஹீரோவாக அறிமுகம் ஆன நிலையில் தற்போது சுரேஷ் ரெய்னாவும் தமிழில் ஹீரோவாக களமிறங்க உள்ளார். இவர்கள் இருவருமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.