
ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சீசனில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்றது. ஐபிஎல் தொடர் வரலாற்றில் 2வது முறையாக 10 தோல்விகளைப் பெற்ற சென்னை, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைத் தான் பிடித்தது. அணியின் கட்டமைப்பு சரியில்லை என்று வாதம் எழுந்தாலும், தோனியின் பேட்டிங் பற்றிய விவாதங்களும் சர்ச்சையைக் கிளப்பின. ஒரு கட்டத்திற்கு மேல் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்த சென்னை அணி, அடுத்த ஆண்டு வலிமையாக மீண்டு வரும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
இந்த நம்பிக்கையை உண்மையாக்கும் விதமாக மிஸ்டர் ஐபிஎல் என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா சென்னை அணியில் இணையப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. சென்னை அணி ஐபிஎல் கோப்பையை வென்ற போதெல்லாம், சுரேஷ் ரெய்னாவின் பங்களிப்பு அபரிமிதமாகவே இருந்துள்ளது. ஐபிஎல் தொடரில் முதன்முதலாக 5,000 ரன்களைக் குவித்தவரும் இவர் தான். தோனியுடன் இணைந்து சென்னை அணிக்கு பல வெற்றிகளைப் பெற்றுத் தந்திருக்கிறார் ரெய்னா.
பல அசாத்திய சாதனைகளை நிகழ்த்திய ரெய்னா, ஒரு கட்டத்தில் ஃபார்ம் இன்றி தவித்து வந்ததால் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போதைய சூழலில் சென்னை அணியின் பேட்டிங்கை பலப்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக சென்னை அணியில் ரெய்னா இணையவிருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஐபிஎல் கிரிக்கெட் வர்ணனையில் ஒரு தகவலை மறைமுகமாக தெரிவித்தார் ரெய்னா.
குஜராத் - சென்னை போட்டியின் போது, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளரை அணி நிர்வாகம் நியமிக்க உள்ளது என ரெய்னா கூறினார். இதனைக் கேட்ட ஆகாஷ் சோப்ரா, அந்த பயிற்சியாளர் யாராக இருக்கும். அவரது முதல் எழுத்து எஸ்(S) என்ற எழுத்தில் தொடங்குமா எனக் கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ரெய்னா, அவர் அதிவேகமாக அரைசதம் அடித்தவர் எனக் கூறி புன்னகைத்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில், 4வது இடத்தில் இருக்கிறார் சுரேஷ் ரெய்னா. கடந்த 2014 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான பிளே ஆஃப் சுற்றில் ரெய்னா 16 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு அதிவேகமாக அரைசதம் அடித்து சென்னை வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் ரெய்னா.
இந்நிலையில் ரெய்னா தான் சென்னை அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ரெய்னா சென்னை அணியில் மீண்டும் இணைந்தால், அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கில் தனது பலத்தை நிரூபிக்கும் என்பதில் ஐயமில்லை.
நடப்புத் தொடரில் சென்னை அணியின் மோசமான செயல்பாடு பலரையும் கவலையில் ஆழ்த்தியது. முன்னாள் வீரர்களும் சென்னை அணியின் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்தனர். இதற்கெல்லாம் சென்னை அணி அடுத்த ஆண்டு பதிலடி தரும் என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். மூத்த வீரர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கும் சென்னை அணி, தற்சமயம் இளம் வீரர்களுக்கும் வாய்ப்பளித்திருப்பது சென்னையின் கடைசி சில ஆட்டங்களில் நல்ல பலனைக் கொடுத்துள்ளது.