பாலிவுட் நடிகை நடிகர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வருகிறது. இதனையடுத்து விசாரனை நடத்தப்பட்டதில், இவை பாகிஸ்தானில் இருந்து வந்ததாக தெரியவந்துள்ளது.
முன்னதாக வெடிகுண்டு மிரட்டல் அடிக்கடி வரும். பள்ளிகளிலும், விமானங்களிலும் அதிக மிரட்டல் வந்துக் கொண்டிருந்தன. இப்பவும் அவ்வப்போது வருகிறது. தொடர்ந்து இ-மெயில் மூலமாகவோ அல்லது சமூக வலைதளங்கள் மூலமாகவோ மிரட்டல் வருகிறது. இதனால், விமான போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பயணிகள் பெரும் பீதியில் ஆழ்ந்து வருகின்றனர்.
இதனையடுத்து மிரட்டல் வந்தவுடன் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படுகின்றன. ஆனால், எந்த மர்ம பொருள்களும் வெடிகுண்டுகளும் கிடைக்காமல் அந்த மிரட்டல்கள் வெறும் புரளி ஆகிவிடுகின்றன. இதனால், எந்த பாதிப்பும் இல்லையென்றாலும், இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் மக்கள் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளை மிகவும் அச்சத்தில் ஆழ்த்துகிறது.
அதேபோல் பள்ளி மாணவர்களின் பெற்றொரும் பீதியில் இருக்க வேண்டியதாக இருக்கிறது. இந்த மிரட்டல்களை யார் விடுகின்றனர் என்பதை சைபர் க்ரைம் போலீஸார் கண்டுபிடிக்க முடியாமல் இருந்து வருகிறது.
இப்படியான நிலையில், பாலிவுட் நடிகர்களுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வருகிறது. பாலிவுட் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நகைச்சுவை நடிகர் கபில் சர்மா, நடிகர் ராஜ்பால் யாதவ், நடன இயக்குனர் ரெமோ டிசோசா மற்றும் நடிகையும் பாடகியுமான சுகந்தா மிஸ்ரா ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது.
அந்த மின்னஞ்சலில், உங்களின் சமீபத்திய செயல்பாடுகளை கண்காணித்து வருகிறோம். இது ஒரு விளம்பர ஸ்டன்டோ அல்லது உங்களை துன்புறுத்தும் முயற்சியோ இல்லை, இந்த செய்தியை மிகுந்த தீவிரத்துடனும், ரகசியத்துடனும் நடத்துமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் .” என்று வந்திருக்கிறது.
இந்த மின்னஞ்சல் பிஷ்ணி என்ற பெயரில் வந்துள்ளது. இது பாலிவுட் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மும்பையில் உள்ள காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் முதற்கட்ட விசாரணையில், இந்த மிரட்டல் பாகிஸ்தானிலிருந்து வந்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. இதற்கிடையே மிரட்டல் விடப்பட்ட நடிகர்கள் வீட்டில் பாதுகாப்பும் போடப்பட்டிருக்கிறது.