தீபாவளியில் கொண்டாடப்பட்ட சூப்பர்ஸ்டார், உலகநாயகன் மற்றும் கேப்டனின் அசத்தலான படங்கள்!

Rajinikanth, Kamalhasan and Vijayakanth
Rajinikanth, Kamalhasan and Vijayakanth

தீபாவளி என்றால் பட்டாசு,இனிப்பு புத்தாடை,மட்டும் இல்லாமல் தீபாவளி நாளில் தங்களுக்குப் பிடித்த கதாநாயகர்களின் படத்தை ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடும் பழக்கமும் நம்முடைய தமிழ் ரசிகர்கள் மத்தியிலிருந்து வருகிறது. அந்தவகையில் 80களின் காலகட்டத்தில் தீபாவளி நாளில் வெளியாகி மாஸ் காட்டிய சில படங்களை இங்கே பார்ப்போம்..

சூப்பர் ஸ்டாரின் மாஸானா தீபாவளி:

பாலசந்தர் இயக்கத்தில் 1976 ஆம் ஆண்டு தீபாவளி நாளில் வெளியான மூன்று முடிச்சு திரைப்படத்தில் கமல், ரஜினி இணைந்து நடித்திருப்பார்கள்.ரஜினி ஒரு வித்தியாசமான வில்லனாகக் கலக்கி இருப்பார். பாலசந்தர் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் தந்து திரைக்கதையைத் தந்திருப்பார். கதாநாயகி வரும் ஸ்ரீ வித்யா வித்தியாசமாக வில்லனைப் பழி வாங்கும் பாலசந்தர் டச் இதுவரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.1978 ரஜினியின் தீபாவளி என்றே சொல்லலாம்.

இதனைத்தொடர்ந்து ருத்ரய்யா இயக்கத்தில் கமலுடன் இணைந்து நடித்த ’அவள் அப்படித்தான்’,சாண்டோ சின்னப்ப தேவர் தயாரித்த ’தாய் மீது சத்தியம்’,பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்து பல அதிர்வுகளை ஏற்படுத்திய ’தப்புத் தாளங்கள்’ எனத் தீபாவளி நாளில் ரஜினி நடிப்பில் மூன்று படங்கள் வெளியாயின. ’தப்புத் தளங்கள்’ படத்தில் கமல் சிறு வேடத்தில் நடித்திருப்பார். இந்த மூன்று படங்களின் மாறுபட்ட ரஜினியின் நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த படங்களில் ரஜினியின் நடிப்பைப் பார்க்கும் போது ரஜினியின் சிறந்த நடிப்புத் திறமையை தற்போதுள்ள தமிழ் சினிமா வீணடித்து விட்டது என்றே சொல்லத் தோன்றுகிறது.

1983 தீபாவளி அன்று வெளியான ’தங்க மகன்’ சூப்பர்ஹிட் ஆனது. இந்த படத்தின் பாடல்களுக்காகவும், ரஜினியின் ஸ்டைலிஷ் நடிப்பிற்காகவும் இன்று வரை தமிழ் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் படமாக உள்ளது. ’மூன்று முகம்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் அலெகஸ் பாண்டியன் ரஜினியின் நடிப்பு இன்று வரை கொண்டாடப்படுகிறது. இதனைத்தொடர்ந்து 1984 ல் தீபாவளி நாளில் வெளியான ’நல்லவனுக்கு நல்லவன்’ 1985 ல் வெளியான ’படிக்காதவன்’ திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. வெற்றிப் படங்களாக அமைந்ததோடு மட்டும் இல்லாமல் இன்றளவும் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் படமாகவும் உள்ளது.

"மானின் கண்ணம் கொண்ட மானே, என்ன? தான் சுகமோ போன்ற பாடல்களுக்காகவும், பணக்கார திமிர் பிடித்த மாமியாராக நடித்த ஸ்ரீ வித்தியாவுக்காகவும் 1989 தீபாவளி அன்று வெளியான ’மாப்பிள்ளை’ படம் வெற்றி பெற்று இன்றளவும் பேசப்படுகிறது. இந்த படத்தில் ரஜினியை விட ஸ்ரீ வித்யா அதிக அளவில் நடிப்பில் ஸ்கோர் செய்திருப்பார். படத்தின் ஆரம்ப சண்டைக் காட்சியில் ரஜினி ஒரு சிகரெட்டை வாய்க்குள் வைத்து வெளியே எடுப்பது போல் நடித்திருப்பார். இதைப் பார்த்து இம்ப்ரெஸ் ஆன பல விடலைகள், ரஜினி போல் சிகரெட்டை வாய்க்குள் விட்டு எடுக்க முயற்சி செய்து, சிகரெக்ட்டை விழுங்கிய கதை எல்லாம் நடந்திருக்கிறது.

1991 தீபாவளி அன்று மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்மூட்டி இணைந்து நடித்து வெளியான தளபதி திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிப் படமாகவும், ரஜினி சினிமா வாழ்க்கையில் மிக முக்கிய படமாகவும் அமைந்தது. இந்த படத்தில் வரும் ’ராக்கம்மா கைய தட்டு’ பாடல் பட்டி தொட்டி எல்லாம் பட்டையைக் கிளப்பியது. நீண்ட இடைவெளிக்குப் பின் ரஜினியின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படமாக ’தளபதி’ அமைந்தது.

கே எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், ஏ. ஆர் ரஹ்மான் இசையில் 1995 தீபாவளி நாளில் வெளியான ’முத்து’ திரைப்படம் வெற்றிப் படமாக அமைந்தது. அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுடன் சில கருத்து மோதல்களை கொண்டிருந்தார் ரஜினி. இதனால் அரசியலுக்கு வரப்போகிறார் ரஜினி என்ற தகவல் கசிந்து கொண்டிருந்தது. இதுவும் கூட படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. "நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது ஆனா வர வேண்டிய நேரத்தில் கரெக்ட்டா வருவேன் "என்று ரஜினி சொல்லும் வசனத்தை ரசிகர்கள் ரஜினியின் அரசியலுக்கான என்ட்ரியாகவே பார்த்தார்கள்.

படத்தின் வசனம், நகைச்சுவை, நடிப்பு போன்ற பல காரணங்களால் ’முத்து’ பலரால் விரும்பி பார்க்கப்பட்டது. முத்து திரைப்படம் தமிழ்நாடு மட்டுமல்லாது ஜப்பான் நாட்டிலும் ரிலீசாகி மாபெரும் வெற்றிபெற்றது. முத்து படத்திற்கு பிறகு ரஜினிக்கு ஜப்பானிலும் ரசிகர்கள் உருவாகத் தொடங்கினார்கள். இந்த படத்திற்குப் பின்பு வெளிவந்த பல படங்களில் ரிலீஸ் ஆகும் சில நாட்கள் முன்பு தனது 'அரசியல் என்ட்ரி' என்ற 'வெடியை 'கொளுத்திப் போட்டு தன் படத்திற்குத் தனது ப்ரோமோஷனாக மாற்றிக்கொள்ளும் வழக்கத்தை ரஜினி ஏற்படுத்திக்கொண்டதாகக் கூறப்படுவதுண்டு. ஆனால், இறுதி வரை ரஜினி கொளுத்தி போட்ட அந்த வெடி வெடிக்காமல் புஸ்ஸாகி போனதுதான் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக மாறியது.

உலக நாயகனின் தீபாவளி:

’16 வயதினிலே’ படத்தில் கமலுக்கு கோவணம் கட்டி பார்த்த பாரதிராஜா ’சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் சூட் கோட் போட்டு ஸ்டைலிஷ் சைக்கோ வில்லனாகக் காட்டினார். சிகப்பு ரோஜாக்கள் 1978 தீபாவளி நாளில் வெளியாகி வெள்ளி விழா கண்டது. இளையராஜாவின் இசையில் "இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்ததே, நினைவோ ஒரு பறவை போன்ற இப்படத்தின் பாடல்கள் தினமும் அனைவரும் விரும்பும் ரெட்ரோ பாடலாக வானொலியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதன் பிறகு வெளிவந்த எந்த சைக்கோ திரில்லர் படமும் சிகப்பு ரோஜாக்கள் அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காதல், காதல், காதல்..., காதல் போயின் சாதல் என்று காதலுக்கு முக்கியத்துவம் தந்து இன்றுவரை தமிழ் சினிமாவின் சிறந்த காதல் படமாகக் கொண்டாடப்படும் ’புன்னகை மன்னன்’ 1986ம் ஆண்டு தீபாவளி நாளில் வெளியானது. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான இப்படம் நடிப்பு, நடனம், பாடல்கள், இசை எனப் பல காரணங்களால் இன்றும் பலரால் விரும்பப்படுகிறது.. சாப்ளின் செல்லப்பா என்ற கதாபாத்திரத்தில் கமல் சார்லி சாப்ளினைப் போல் நடித்தது இன்றும் வியந்து பார்க்கப்படுகிறது.

கமலின் சினிமா வாழ்க்கையை 1987 ஆம் ஆண்டு தீபாவளி நாளில் வெளியான நாயகன் படத்திற்கு முன் பின் என இருகோடுகளாகப் பிரிக்கலாம். மணிரத்னம் இயக்கத்தில் உருவான இப்படம் ’காட் பாதர்’ என்ற இத்தாலி படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம். ஆன்டி ஹீரோ சப்ஜெக்ட் படங்களுக்கு நாயகன் ஒரு முன்னாடி தமிழ்த் திரைப்படமாகும். இந்தியத் திரைப்படங்களில் மிக முக்கிய படமாக கருதப்படும் நாயகன் படத்தை இந்த ஆண்டு ரீ ரிலீஸ் செய்யப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வேலு நாயக்கராக கமல் வாழ்ந்திருப்பார். இப்படத்தில் இடம் பெரும் "நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை ", நீங்க நல்வாரா கெட்டவரா "போன்ற பாலகுமாரனின் வசனங்களைச் சொல்லாத தமிழர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த படத்தின் தாக்கம் தமிழ் நாட்டில் இருக்கிறது. இப்படத்தில் இடம் பெறும் நான் சிரித்தால் தீபாவளி பாடல் இன்றளவும் தீபாவளி நாளன்று ஒலிக்கும் படலாக உள்ளது.

1990ம் ஆண்டு தீபாவளி நாளில் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான மைக்கேல், மதன காமராஜன் திரைப்படம் அவரேஜ் வெற்றியை பெற்றது. ஆனால் காலம் தாண்டி இன்றும் பேசப்படும் படமாக உள்ளது. இப்படத்தில் இடம் பெறும் பேரு ’வெச்சாலும் வெக்கமா போனாலும்’ பாடல் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வந்த படத்தில்கூட ரீ மிக்ஸ் செய்யப்பட்டு, அனைவரையும் ஈர்த்தது.

"நடுவுல மானே தேனே பொன் மானே சேத்துக்க "என்று நாம் பல இடங்களில் சொல்லும் வசனம் இடம்பெறும் ’குணா’ திரைப்படம் வெளியான நாள் 1991 தீபாவளி அன்று. ஒரு மனநிலை பாதிக்கப் பட்ட இளைஞனின் வழியே விரியும் உலகத்தில் கமல் அற்புதமாக நடித்திருப்பார். படம் வெளியான சமயத்தில் பெரிய வெற்றி பெறவில்லை. இருப்பினும் காலம் தாண்டி இப்போதும் பலர் விரும்பி பார்க்கும் படமாகவும், நடிப்பு துறையில் இருப்பவர்களுக்கு பாடமாகவும் உள்ளது கமலின் ’குணா’.

"தேவர் மகன் படத்தில் வரும் இசக்கி தான் என் படத்தில் வரும் மாமன்னன். தேவர் மகனின் இசக்கி என்னை பாதித்தது" என்று கமல் முன்பே மேடையில் தன் உள்ள குமுறலை சொன்ன மாரி செல்வராஜ் குறிப்பிடும் தேவர் மகன் வெளியான ஆண்டு 1992 தீபாவளி நாளில்தான். பரதன் இயக்கத்தில் சிவாஜி, கமல் இணைந்து நடித்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம் பெறும் ”போற்றி பாடடி பெண்ணே” பாடல் தற்போது சாதிய பாடலாக வலம் வந்துக்கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து உலக புகழ் பெற்ற சிவாஜியை' பெரிய தேவராக' காட்டிய பெருமை கமலுக்கு மட்டுமே உண்டு. அதேபோல், தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என பெயர் எடுத்த சிவாஜி கணேசனுக்கு முதல் முறையாக தேசிய விருது பெற்றுத்தந்த படம் என்றால் அதுவும் தேவர் மகன்தான். இந்த படத்திற்கு பின் தென் மாவட்டத்தை மைய்யமாக கொண்டு பல ஜாதிய படங்கள் உருவாகின, உருவாகி வருகின்றன. ஆனால், தேவர் மகன் ஏற்படுத்தி தாக்கம் சினிமா எனும் கலைப்படைப்பை தாண்டி அது ஒரு சாதிய அடையாளத்தின் பிரதிபலிப்பாகவும் மாறிவிட்டது என்பதுதான் நிதர்சனமாக உள்ளது.

1995 ஆம் ஆண்டு தீபாவளி நாளில் ஒளிப்பதிவாளர் P. C. ஸ்ரீ ராம் இயக்கத்தில் கமல், அர்ஜுன் இணைந்து நடித்து வெளிவந்த படம் ’குருதிப் புனல்’ பாடல்களே இல்லாத இந்த படத்திற்க்கு மகேஷ் மகாதேவன் பின்னணி இசை அமைத்திருந்தார். பாடல்கள் தான் ஒரு படத்திற்க்கு ப்ரோமஷன் என்று இருந்த சூழ்நிலையில் பாடல்களே இல்லாத குருதிப் புனல் தந்தார்கள் கமலும், P.C ஸ்ரீ ராமும்.

இதை ஒரு சோதனை முயற்சி என்றே சொல்லலாம். ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இப்படம் நகர்ப்புரங்களில் பரவலான வரவேற்பை பெற்றது. தற்போது உலக சினிமாவை பற்றி பலர் பேசுகிறார்கள். மாற்று படங்களை பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள். இவர்கள் விரும்பும் படங்களில் குருதிப் புனலுக்கு முக்கிய இடம் உள்ளது.

கடந்த 2000 ஆம் ஆண்டு தீபாவளி நாளில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல், ஜோதிகா, ஜெயராம் நடித்து வெளிவந்த ’தெனாலி’ திரைப்படம் வெற்றிப் படமாக அமைந்தது. இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், தெனாலி படத்தில் இலங்கை தமிழ் பேசி நடித்தது பலராலும் விரும்பி பார்க்கப்பட்டது. படத்தின் நகைசுவைக்காகவும், கமலின் இலங்கை தமிழ் வசனங்களுக்காகவும் தெனாலி வெற்றிப்படமாக அமைந்தது.

2001 ஆம் ஆண்டு தீபாவளி நாளில் வெளியான ’ஆளவந்தான்’ திரைப்படம் வெற்றி படமாக அமையவில்லை இருப்பினும் மாறுபட்ட நடிப்பிற்க்காக இப்படத்தை ரசிக்கலாம். வசூல் ரீதியாக ஆளவந்தான் படம் ஓடவில்லை என்றாலும், தமிழ் திரையுலகில் எப்போதும்போல் தனக்கான இடத்தை பிடித்தார் ஆளவந்தான்.

கேப்டன் கொண்டாடிய தீபாவளி:

ரஜினி, கமலை போன்றே விஜயகாந்த் அவர்களும் தீபாவளி வெற்றி படங்களை தந்துள்ளார்.1984 ஆம் ஆண்டு தீபாவளி நாளில் R. சுந்தரராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ’வைதேகி காத்திருந்தாள்’ திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. ரஜினி, கமல் போன்று தனக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என கடுமையாக உழைத்திருப்பார் விஜயகாந்த். இவரது உழைப்பிற்க்கு அடுத்த அடுத்த ஆண்டுகளில் பலன் தெரிந்தது.

விஜயகாந்த் ரசிகர்களுக்கு மட்டுமில்லாது அனைவராலும் விரும்பப்படும் படமாக அமைந்தது வைதேகி காத்திருந்தாள். திரைப்பட கல்லூரி மாணவர்களுடன் இணைந்து ’ஊமை விழிகள்’ என்ற வெற்றிப் படத்தை தந்த விஜயகாந்த் அதே திரைப்பட கல்லூரி மாணவர்களுடன் இணைந்து ’உழவன் மகன்’ படத்தில் நடித்தார். ஆபாவாணன் எழுத்தில் அரவிந்த்ராஜ் இயக்கத்தில் 1987 தீபாவளி நாளில் உழவன் மகன் படம் வெளியானது. மனோஜ் கியான் இப்படத்திற்க் கு இசை அமைத் திருந்தார். நீண்ட இடை வெளிக்கு பின்பு T. M சௌந்த ராஜன் அவர்கள் "உன்னை தினம் தேடும் கலைஞன் "என்ற பாடலை பாடி இருந்தார். இப்பாடல் அந்த நாட்களில் மிகப் பிரபலாமானது. இப்படத்தில் இடம் பெரும் ரேக்ளா ரேஸ் காட்சியை போன்று இதுவரை வேறெந்த படத்திலும் இடம் பெறவில்லை. உழவன் மகன் வெற்றிக்கு இந்த காட்சியும் முக்கிய காரணம். உழவன் மகன் படத்தை டிவியில் பார்த்தால் இந்த ரேக் ளா காட்சியை ரசிக்க பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

இதையும் படியுங்கள்:
எம்ஜிஆர்– சிவாஜி - ஜெமினி தீபாவளி வெற்றிப் படங்கள்!
Rajinikanth, Kamalhasan and Vijayakanth

"நீ பழைய பன்னீர் செல்வமா வரணும் " புகழ் பெற்ற வசனம் இடம் பெற்ற ’சத்ரியன்’ திரைப்படம் வெளியான ஆண்டு 1990 தீபாவளி. ’சத்ரியன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி என்பதோடு மட்டுமில்லாமல் விஜய்காந்த் நடித்த படங்களில் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் படமாக சத்ரியன் உள்ளது. சத்ரியன் பட சாயலில் இன்று வரை பல படங்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்த படங்களில் எல்லாம் விஜயகாந்த் தந்த சத்ரியன் எபெக்ட் இல்லை என்பது தான் உண்மை. விஜயகாந்த்திற்க்கு இணையாக இப்படத்தில் நடித்த வில்லன் திலகன் நடிப்பும் பேசப்பட்டது.

”மன்னிப்பு எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை” என்ற விஜயகாந்த்தின் பேமஸ் வசனம் இடம் பெற்ற ரமணா திரைப்படம் வெளியான ஆண்டு 2002 தீபாவளி. முருகதாஸ் இயக்கத்தில் வந்த இப்படம் விஜயகாந்திற்க்கு ஒரு மாஸ் படமாக இருந்தது. இந்த படம் வெளியாகி ஒரிரு ஆண்டுகளில் விஜயகாந்த் அரசியல் என்ட்ரி தந்தார். மேலே சொன்ன படங்கள் மட்டுமில்லாமல் தீபாவளி நாளில் இன்னும் பல ஹீரோக்கள் நடித்த படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய சூழ்நிலையில் தீபாவளிக்கு ஒரு பெரிய ஹீரோ படம் வெளியாவதே கடினமாக உள்ளது. ஆனால், 80களின் காலகட்டத்தில் பல ஹீரோகள் நடித்த படங்கள் வந்த தீபாவளிகளின் காலம் தமிழ் சினிமவின் பொற்காலமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com