தென்னிந்தியாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூனும், பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனும் இணைந்து நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'ஜவான்' திரைப்படம் மூலம் பாலிவுட்டில் முத்திரை பதித்த இயக்குனர் அட்லீ இத்திரைப்படத்தை இயக்குகிறார்.
படக்குழுவினர் 'அரசியின் வருகை' என்ற தலைப்பில் ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டு, தீபிகா படுகோன் இத்திரைப்படத்தில் இணைந்துள்ளதை உறுதிப்படுத்தினர். இந்த வீடியோ, அல்லு அர்ஜூன் மற்றும் அட்லீயின் அடுத்த படத்திற்கான AA22xA6 என்ற ஹேஷ்டேகுடன் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சயின்ஸ் ஃபிக்ஷன் கதையை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. ஏற்கனவே படக்குழுவினர், “சர்வதேச தரத்துடன் இந்தியாவில் தயாராகும் 'பான் வேர்ல்ட்' படமாக இது இருக்கும்” என்று தெரிவித்திருந்தனர். சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அல்லு அர்ஜூன் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தில் தீபிகா படுகோன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் இணைந்துள்ளது, இரு மொழி ரசிகர்களிடையேயும் பேசுபொருளாகியுள்ளது. தீபிகா இப்படத்தில் வேற்று கிரக வாசி கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
'புஷ்பா 2: தி ரூல்' படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜூன் நடிக்கும் இந்தத் திரைப்படம், அட்லீ – அல்லு அர்ஜூன் இணையும் முதல் படமாக அமைவதால், இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.