
பூரண் போளி செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு- ஒரு கப்
வெல்லத் துருவல் -ஒரு கப்
கடலைப்பருப்பு- ஒரு கப்
ஏலப்பொடி- கால் டீஸ்பூன்
நெய் -மூணு டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்- 3 டேபிள் ஸ்பூன்
உப்பு, மஞ்சள் தூள் -ஒரு சிட்டிகை
செய்முறை:
கோதுமை மாவில் உப்பு, மஞ்சள் பொடி, சிறிதளவு தேங்காய் எண்ணெய், நெய் சேர்த்து பிசிறி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திமாவு பதத்திற்கு மிகவும் சாப்ட்டாக வரும் வரை பிசைந்து மூடிவிடவும். பிறகு சிறிது நேரம் கழித்து அந்த மாவை இன்னும் நன்றாக பிசைந்து அரை மணிநேரம் ஊறும்படி மூடி வைத்து விடவும்.
ஒரு கடாயில் கடலைப் பருப்பை வறுத்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து தண்ணீரை வடிகட்டி பருப்பை நன்றாக மசித்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டு வெல்லத் துருவலை சேர்த்து கம்பி பாகு பதம் வைத்து அதில் நெய், ஏலப்பொடி மற்றும் பருப்பை சேர்த்து கெட்டியாக கிளறி இறக்கி ஆறவிட்டு சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
போளி செய்வதற்கான மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தி கட்டையில் தேய்த்து அதன் நடுவில் பூரணத்தை வைத்து சப்பாத்தி தேய்ப்பது போல் பூரணம் வெளியில் வராதபடிக்கு மாவை சமன் செய்து இழுத்து மூடி தேய்த்து தவாவில் எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் நன்றாக திருப்பி போட்டு சிவந்த புள்ளிகள் வரும்பொழுது எடுத்துவிடவும். மேலாக சிறிது நெய் தடவினால் மினுமி னுப்பாகவும், ருசியாகவும் காயாமலும் இருக்கும். எடுத்து சாப்பிட ருசி அள்ளும்.
நேந்திரங்காய் இனிப்பு
செய்யத் தேவையான பொருட்கள்:
நேந்திரங்காய்- 2
வெல்லத் துருவல் -4 டேபிள் ஸ்பூன்
சுக்குப் பொடி -3 சிட்டிகை
உப்பு- ஒரு சிட்டிகை
செய்முறை:
நேந்திரங்காயை திக்காக விரல் நீள அளவுக்கு வெட்டிக் கொள்ளவும். அடிகனமான ஒரு பாத்திரத்தில் நேந்திரங் காயை போட்டு அதனுடன் வெல்லத் துருவல், உப்பு, சுக்குப் பொடி அனைத்தையும் சேர்த்து மூடிபோட்டு மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.
அவ்வப்பொழுது கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். கிளறும் பொழுது உடைந்து விடாமல் நிதானமாக கிளறி இறக்கி வைத்து விடவும். ஆறவிட்டு ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும். எடுத்து சாப்பிட சுக்கு மணத்துடன் சுவை அள்ளும்.