விமர்சனம்: டிமான்டி காலனி 2 அமானுஷ்யம், திரில்லர் கலந்த கலவை!
ரேட்டிங்(3.5 / 5)
பேய், அமானுஷ்யம் போன்ற ஹாரர் வகைப்படங்கள் ஒரு வகை. கொலை, துப்பறிதல் போன்ற சஸ்பென்ஸ் படங்கள் மற்றொரு வகை. சஸ்பென்ஸ்-ஹாரர் இந்த இரண்டு உணர்வுகளையும் ஒருசேரத் தரும் படங்கள் மிகவும் குறைவு. அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளிவந்துள்ள, ‘டிமான்டி காலனி 2’ படத்தை பார்க்கும்போது சஸ்பென்ஸ், ஹாரர் இரண்டும் ஒருசேர உணரும் காட்சி அனுபவம் (visual experience ) கிடைக்கிறது. ரெட் ஜெயிண்ட் நிறுவனம் இந்தப் படத்தை வழங்குகிறது.
கடந்த 2015ம் ஆண்டு வெளியான, ‘டிமான்டி காலனி’ படத்தின் முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சியுடன் படம் தொடங்குகிறது. டெபி (பிரியா பவானி ஷங்கர் ) என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட கணவனின் ஆத்மாவோடு பேச முயற்சி செய்யும் நிகழ்வின்போது ஸ்ரீனிவாசன் (அருள்நிதி) என்பவர் உயிருக்குப் போராடுவதைப் பார்த்து தனது தந்தையின் உதவியுடன் காப்பாற்றுகிறார். ஸ்ரீனிவாசனின் உயிருக்கு ஆமானுஷ்ய சக்திகளால் ஆபத்து என்று இவரின் சகோதரர் ரகுவுக்கு (இந்தக் கேரக்டரில் நடிப்பதும் அருள்நிதிதான்) புரிய வைக்கிறார். இதற்கிடையில் சில மாணவிகள் டிமாண்டி பங்களாவுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள். இவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்யும் ரகுவுக்கும், டெபிக்கும் வித்தியாசமான அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. இந்த அமானுஷ்யங்களுக்கு விடை தேடும் முயற்சிதான் இந்த டிமான்டி 2 படத்தின் கதை.
‘மை டியர் லிசா’ படம் முதல் நேற்று வந்த அரண்மனை படம் வரை சொல்லப்பட்ட அதே பேய் விரட்டும் கதைதான் இந்த டிமான்டி காலனியிலும் இருக்கிறது. சாமியார்கள், பாதிரியார்கள், பாய்கள் விரட்டிக் கொண்டிருந்த பேயை இந்த ஒரு புத்த பிக்கு விரட்டுகிறார். இருப்பினும் படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதி வரை பயமும் திரிலிங்கும் கலந்த அனுபவம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. பிரியா பவானி சங்கர் செல்லும் ஒரு அமானுஷ்ய ஆவி உலகக் காட்சியை பார்க்கும்போது நாமும் ஒரு ஆவி உலகத்தில் இருப்பது போன்ற உணர்வு வருகிறது. தற்கொலை செய்து கொண்டு தூக்கில் தொங்கும் ஒருவர் திடீரென திரும்பிப் பார்க்கும் காட்சி நம்மை அலற வைக்கிறது. நம்மை பயமுறுத்த, அலற வைக்க டைரக்டர் அஜய் ஞானமுத்துவும், ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணனும் உட்கார்ந்து யோசித்திருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. சாம் சி.எஸ்.இசை மற்ற படங்களில் இருப்பது போல் ஒரே மாதிரி இல்லாமல் கொஞ்சம் பயமுறுத்தவும் செய்கிறது.
"நான் நடித்த படங்கள் வெற்றி பெறாததால் என்னை ராசி இல்லாத நடிகை என சிலர் முத்திரை குத்துகிறார்கள்" என்று பிரியா பவானி சங்கர் சில நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் சொல்லி வருத்தப்பட்டிருந்தார். ஆனால், ‘டிமான்டி காலனி’ படம் வெற்றி பெறும் பட்சத்தில் பிரியா பவானி ஷங்கரின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும். கணவர் இறந்த பின் சோகம், பின்பு பயம் என இப்படி பல இடங்களில் சிறப்பான நடிப்பை தந்துள்ளார். படத்தை தன் நடிப்பால் தூக்கி நிறுத்துகிறார். இனி உங்கள் மீதுள்ள இமேஜ் கண்டிப்பாக மாறும் வாழ்த்துக்கள் மேடம். அருள்நிதி படம் என்றால் வித்தியாசமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நம்பிக்கையை இந்த படமும், அருள்நிதியின் நடிப்பும் உறுதி செய்கிறது. இரட்டை வேடங்களில் சின்னச் சின்ன வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் சில இடங்களில் லாஜிக் மீறல்கள் இருக்கின்றன. இருந்தாலும் படம் நகரும் வேகத்தில் அதையெல்லாம் மறந்து விடுகிறோம். ஒரு பயம் கலந்த காட்சி அனுபவத்தைப் பெற வேண்டும் என விரும்புபவர்கள் இந்த டிமான்டி காலனி 2 படத்துக்குச் செல்லுங்கள்.