Review: தங்கலான் - நல்ல நடிப்பும், குழுவும் அமைந்தால் மட்டும் போதுமா? திரைக்கதையில் தெளிவு வேண்டாமா?

Thangalaan
Thangalaan
Published on

ஒரு குறிப்பிட்ட காட்சியில் தனது கணவன் தங்கலான் (விக்ரம்) கொண்டு வந்து கொடுத்த ரவிக்கையை வாங்கிப் பார்க்கிறார்  பார்வதி. "ஏண்டி இதுல இதுக்குள்ள கையை விடறதுன்னே தெரியலையே. போட்டவுடனே மாரே தூக்கினு இருக்கு பாரேன்" என்று வெள்ளந்தியாகப் பேசுகிறார். முதன் முதலில் ரவிக்கை என்ற ஒரு ஆடையை அணிந்த அந்தக் கூட்டம் படும் ஆனந்தம் கண் கொள்ளாக் காட்சி. அந்தப் பெண்ணின் கணவர்கள் பார்வையில் அப்படியொரு பெருமிதம்.

தனது உழைப்புக்கான பரிசும் தன்னை மதித்து ஒரு பேண்டும் சட்டையும் தந்த அந்த வெள்ளைக்கார துரை தந்த அனுமதியின் பேரில் குதிரையில் வருகிறார் தங்கலான்.  தங்களது நிலத்திலேயே தங்களை அடிமையாக்கி வேலை வாங்கும் முதலாளியிடம் கடனை அடைத்துவிட்டு கூட்டத்தை விடுவித்து விட்டு அவனைப் பார்க்கிறார் ஒரு பார்வை. 

விக்ரம் என்கிற ஒரு நடிகர் மற்ற அனைவரையும் தவிர, இப்படத்தில் மட்டுமல்ல, திரையுலகிலும் தனித்துத் தெரிவது ஏன் என்பது இதில் அவரது அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பைப் பார்த்தால் தெரியும். சடை முடியும், அழுக்கான தோற்றமும், கோவணமும், கறை படிந்த பற்களும், துருத்தித் தெரியும் தொந்தியும்... எந்த இடத்திலும் தான் விக்ரம் இல்லை என்று அவரே சொன்னாலும் பார்ப்பவர்கள் நம்புவார்கள். 

ஜி வி பிரகாஷ் நடிகராக ஜெயிக்க முடியும் என்று நம்பி வீணாய்ப் போனவர். எப்படி விக்ரம் இசையமைக்க முடியாதோ அதுபோல் தானே இவரது நடிப்பும். இந்தப் படத்தில் இவரது இசையமைப்பு அபாரமானது. படம் தொய்வு அடையும் போதெல்லாம் 'உள்ளேன் ஐயா' என்று ஆஜராகி, நிமிர்த்தி விட படாத பாடு படுகிறார். பல இடங்களில் வென்றும் இருக்கிறார். மினுக்கி பாடலும், உழவு பாடலும் அமைந்த இடமும் படமாக்கப் பட்ட விதமும் மிகப் பொருத்தம். 

"இது எங்க மண்ணு. எல்லா உரிமையும் எங்களுக்கு உண்டு. யாரும் எங்களை வெளியேற்ற முடியாது. இது எங்க உழைப்புல கிடைச்ச தங்கம். இதுல எப்படி பங்கில்லன்னு சொல்ல முடியும். பூணூல் போட்டா செத்தா வைகுண்டம் நேரா போலாம் அப்டின்னு சொல்றாங்களே. ராமானுஜர் இதைச் செஞ்சவர் தானே. இப்ப நாங்களா போட்டுக்கறோம். அதனால என்ன?" என்று கேட்கும் பசுபதி. 

இது போன்ற ஒடுக்கப்பட்டோர், அதிகாரம் படைத்தோர் தொடர்பான வசனங்கள் படம் எங்கும் விரவி இருக்கின்றன. சந்தர்ப்பம் எங்கெங்கு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தனது அரசியலைப் பயன்படுத்தத் தயங்கவில்லை இயக்குனர் ரஞ்சித். சில இடங்களில் அது காட்சிகளாக அமைந்தாலும் பல இடங்களில் வசனங்களாக மட்டுமே கடந்து போகிறது.

மேலே சொன்ன நல்ல விஷயங்கள் படத்தில் நல்லதாக ஏதும் உண்டா என்று எடுத்துச்சொல்ல உதவும். ஆனால் ஒரு படம் என்பது சில காட்சிகளால் மட்டும் ஆனதல்ல. அனைத்தும் இயைந்து வர வேண்டும். திரைக்கதையும், திரைமொழியும் அனைவருக்கும் சென்று சேர வேண்டும். அந்த இடத்தில் இந்தப் படக்குழு கோட்டை விட்டிருக்கிறது. 

கதை நடக்கும் காலம் 1800 களில் என்று காட்டப்படுகிறது. விவசாய அடிமைகளை மீட்டு, தங்கம் தேடி அவர்களை அழைத்துப் போகிறார் ஒரு ஆங்கிலேய அதிகாரி. அவரை நம்பி தங்கலானும் அவரது ஊர்காரர்களும் பயணப்படுகிறார்கள். அந்தத் தங்க மலையை ஒரு கூட்டம் காவல் காத்து வருகிறது. அந்தக் கூட்டத்தில் தனது முன்னோர்களும், ஏன், தானும் இருப்பதை உணர்கிறார் விக்ரம். தங்கம் கிடைத்ததும் என்ன நடக்கிறது? அந்தக் கும்பல் தப்பித்தார்களா? அந்தத் தங்க மலையைக் காக்கும் யட்சி யார்? என்பதற்கான விடை தான் படத்தின் இரண்டாம் பகுதி.

படத்தின் நெகட்டிவ் என்று சொல்வதற்கும் ஏகப்பட்ட விஷயங்கள் உண்டு. ஒன்று புரியாத திரைக்கதை ஓட்டம். அவர்கள் பயன்படுத்திய மேஜிக்கல் ரியலிசம் என்ற பாணி படத்தை ரசிகர்களிடமிருந்து அந்நிய படுத்துகிறது; கிளைமாக்சில் அது மிக அருமையாகப் படமாக்கப்பட்டிருந்தாலும் கூட!

ஆராதியாக வரும் மாளவிகா மோகனன் கதாபாத்திரம் நன்றாகக் காட்டப்பட்டு  இருந்தாலும் புரியவே இல்லை. விக்ரம் பேசும் வசனங்களும் அதுபோல் தான். பல இடங்களில் ஒரு தமிழ் சப் டைட்டில் (subtitle) இருந்தால் தேவலாம் என்று நினைக்க வைக்கும் அளவு பேசுகிறார். லைவ் சவுண்ட் பயன்படுத்தப் பட்டிருந்தால் அது எதிராகப் போய்விட்டது. அவர்கள் பேசும் தமிழ் அந்தக் காலத்தைய தமிழ் என்று எடுத்துக் கொண்டாலும் இந்தக் கதை அதன் ஜீவனுடன் போய்ச் சேர்வதைத் தடுத்த முதல் காரணியே அது தான். எதுவுமே தெரியாத விக்ரம் ஒரு காட்சியில் அந்த ஆங்கில அதிகாரி சொல்வதை அப்படியே மொழிபெயர்க்கிறார். அது எப்படி என்று ரஞ்சித்துக்கே வெளிச்சம். 

இடைவேளை வரை திரைக்கதை தடுமாறினாலும் சற்று வேகமாகச் செல்லும் படம் இரண்டாம் பாதியில் நொண்டியடிக்கிறது. சண்டைக்காட்சிகள் நன்றாகப் படமாக்கப்பட்டிருந்தாலும் நம்பகத் தன்மை கொஞ்சம் கூட இல்லை. அதுவும் சிறுத்தை, பாம்புகள், எருமை மாடு கிராபிக்ஸ் எல்லாம் மிகவும் மோசம். இவ்வளவு செலவு செய்த படக்குழு இதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். 

பீரியட் படம், நல்ல நடிகர்கள், இசை, ஒளிப்பதிவு, எல்லாம் இருந்தாலும் இயக்குனர் ரஞ்சித் சொல்ல வந்த விஷயத்தைச் சரியாகக் கடத்துவதில் கவனம் எடுத்துக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது. விக்ரம் காணும் கனவுகளோ, காட்சிகளோ அவரது முன்னோர்களும் தங்கத்தை காப்பதில் உயிரை விட்டவர்கள் எனக் காட்டினாலும் நமக்கு எந்த அழுத்தமும் வரவில்லை. மேலும் விக்ரம் பாத்திரத்தைத் தவிர எந்தக் கதாபாத்திரத்தின் பின்கதைகளும் பிடிப்பின்றி சொல்லப் பட்டிருப்பதால் அவர்களில் யாராவது சாகடிக்கப் பட்டால் கூட நமக்கென்ன என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

விக்ரம் என்ற பெரிய நடிகர், செலவைப் பற்றிக் கவலைப்படாத ஒரு தயாரிப்பு நிறுவனம், நல்ல டீம் என்று இருந்தும், தனது மனதில் இருந்த தங்கலானைப் பற்றிய ஒரு புரிதலை, பார்வையை, திரைவடிவமாக மாற்றியதில் ரஞ்சித் சறுக்கி விட்டார். இந்தப் படம் பார்க்கும்போது ஆயிரத்தில் ஒருவன், பரதேசி போன்ற படங்கள் கண் முன் வந்து போயின.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: ரகு தாத்தா - எதிர்ப்பா? திணிப்பா? குழப்பும் திரைக்கதை!
Thangalaan

என்னடா இப்படி படம் எடுக்கிறார் என்று சொன்னாலும் பாலா இது போன்ற விஷயங்களில் பாசாங்கைக் காட்டியதில்லை. இதை ஒரு சாகசப் படமாக எடுப்பதா, அடிமைப்படுத்தப்பட்டவரின் போராட்டமாக எடுப்பதா என்பதிலேயே அவருக்கு இருக்கும் சந்தேகம் படம் முடியும்போது ஒவ்வொரு ரசிகரின் மனதிலும் இருக்கும் என்பது தான் உண்மை. 

விக்ரம் என்ற நடிகரின் அசாத்தியமான அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பிற்காக இந்தப் படத்தை ஒரு முறை பார்க்கலாம். சிறந்த நடிகருக்கான விருது இவருக்குக் கிடைக்கும் சாத்தியம் நிச்சயம் இருக்கிறது. ரத்தம் தெறிக்க எடுக்கப்பட்டிருக்கும் சண்டைக் காட்சிகள் இது குழந்தைகளுக்கான படமல்ல என்று நமக்குச் சொல்லிக் கொண்டே இருக்கிறது. கமர்சியல் படமாகவும் அல்லாமல் விருதுகளுக்காகவே  எடுக்கப்பட்ட படமாகவும் இல்லாமல் இடையில் பயணம் செய்துவிட்டது தங்கலான்! 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com