Dhesiya thalaivar
Dhesiya thalaivarsource:dailythanthi

விமர்சனம்: தேசிய தலைவர் - முத்துராமலிங்க தேவரின் உண்மையான வரலாற்றை பேசி உள்ளதா?

Published on
ரேட்டிங் (3.5 / 5)

தேசியமும், தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் " என்று நம் நாட்டையும், பக்தியையும் போற்றி வாழ்ந்தவர் மறைந்த சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். இவரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படமாக வந்துள்ளது தேசியத் தலைவர். தேவர் அவர்களின் பிறந்தநாளான நேற்று (அக்டோபர் 30) இப்படம் வெளியானது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். விஜயகாந்த்தை வைத்து ஊமை விழிகள் படத்தை இயக்கிய அரவிந்த்ராஜ் இப்படத்தை இயக்கி உள்ளார்.

சுதந்திரத்திற்கு முந்தைய கால கட்டத்தில் கதை தொடங்குகிறது. தன் சொந்த மாவட்டமான ராமநாதபுரம் மற்றும் தென் மாவட்டங்களில் சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார் தேவர். ராமநாதபுரம் சேதுபதி மன்னரை எதிரித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். ஆங்கிலேயே அரசின் கை ரேகை சட்டத்தை எதிர்த்து போராடுகிறார். மதுரை வைத்தியநாத அய்யருடன் இணைந்து ஹரிஜன மக்களுக்கு ஆலய பிரவேசம் நடத்துகிறார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கொள்கையால் ஈர்க்கப்பட்டு பார்வேர்ட் பிளாக் கட்சியில் சேர்க்கிறார். சுதந்திரம் கிடைத்த பின்பு பலவேறு சமூகம் சார்ந்த பணிகளை மேற்கொள்கிறார்

ஒரு சிறிய பிரச்சனையால் இமானுவேல் சேகரன் என்பவர் கொலை செய்யப்படுகிறார்...அரசியல் சூழ்சியால் இந்த கொலையில் முத்துராமலிங்க தேவர் சிக்க வைக்கப்படுகிறார். இந்த அரசியல் பழியை எதிர்த்து தேவர் சட்ட போராட்டம் நடத்துகிறார். இப்படி முத்து ராமலிங்க தேவரின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களின் தொகுப்பாக இந்த படம் வந்துள்ளது

இந்த படத்தின் பாசிட்டிவான விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

முத்துராமலிங்க தேவர் படத்தை இயக்க பலர் முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. அரவிந்தராஜ், தேவர் வாழ்க்கையை பல போராட்டங்களுக்கு பிறகு எடுத்ததற்கே அவரை முதலில் பாராட்டலாம். படத்தின் முதல் பாதி டாக்குமெண்ட்ரி போல் இருந்தாலும் இரண்டாம் பாதி நல்ல எமோஷனலாக இருக்கிறது. நேதாஜி, நேரு, காந்தி, தேவர் சந்திக்கும் காட்சி சிறப்பாக இருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியும், நீதிமன்ற காட்சியும் சிறப்பாக உருவாக்கபட்டுள்ளன.

படத்தின் பலம் இளையராஜா என்று சொல்வதை விட படத்தின் உயிர் ராஜா என்று சொல்லலாம். தேவர் இறக்கும் தருவாயில் வரும் பின்னணி இசையிலும், பாடல்களிலும் 'அற்புதம் ராஜா' என்று சொல்லவைக்கிறார் இளையராஜா.முத்து ராமலிங்க தேவராக பஷீர் சரியாக பொருந்தி போகிறார். நீண்ட முடியும் திருநீறு நெற்றியுடன் முத்துராமலிங்க தேவராக வாழ்ந்து காட்டி உள்ளார்.

நேதாஜி சுபாஷ் உயிருடன் வந்துவிட்டார் என்று சொல்லும் அளவிற்கு உருவ அமைப்பில் ஒத்து போகிறார் நேதாஜி யாக நடித்தவர்.

படத்தில் இருக்கும் சில மைனஸ்...தேவர் அரசியலை நேசித்த அளவிற்கு ஆன்மீகத்தையும் நேசித்தார். தேவரின் ஆன்மீகம் அழுத்தமாக படத்தில் பதிவு செய்யபடவில்லை. தேவர் ஆட்டை வாங்கி அதற்கு வரி கட்டி காமராஜரை தேர்தலில் நிற்க வைத்தார் என்ற கருத்து உண்டு.இதை சிலர் ஏற்க மறுக்கிறார்கள். இதை சரியாக ஆராயாமல் காமராஜர் அரசியல் வருகைக்கு தேவர்தான் காரணம் என்பது போல் காட்டியுள்ளார்கள். இதை தவிர்த்திருக்கலாம்.

அரவிந்தராஜ் பல ஆண்டுகளுக்கு முன்பு இயக்கிய ஊமை விழிகள் தொழில்நுட்பத்திற்காக இன்றளவும் பேசப்படுகிறது. ஆனால் தேசியத் தலைவர் படத்தில் பல தொழில்நுட்ப தவறுகள் உள்ளன. சில தவறுகளும்,குறைகளும் இருந்தாலும் தமிழ் நாட்டில் சுதந்திர போராட்டத்தில் மிக முக்கிய பங்காற்றிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பற்றி படம் தந்ததற்கு தேசியத் தலைவர் படக்குழுவிற்கு சபாஷ் சொல்லலாம்.

தேசிய தலைவர்- இளைய தலைமுறை பார்க்க வேண்டிய படம்.

இதையும் படியுங்கள்:
ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சூப்பர்ஸ்டார்..! இந்த படத்துடன் சினிமாவில் இருந்து ஓய்வு..!
Dhesiya thalaivar
logo
Kalki Online
kalkionline.com