தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக ரஜினிகாந்த் 50 ஆண்டுகளாக உச்சத்தில் இருந்து வருகிறார். 1975 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் ஆபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலமாக அறிமுகமாகிய இவர் , ஆரம்ப காலத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பைரவி திரைப்படம் மூலம் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த ரஜினிகாந்த் அடுத்தடுத்து தொடர் வெற்றிகள் மூலம் உச்சத்தை தொட்டார். தமிழ் மட்டுமின்றி மலையாளம் , கன்னடம், தெலுங்கு , ஹிந்தி , பெங்காலி, இங்கிலீஷ் என அதிக மொழிகளில் நடித்த தமிழ் நடிகர் என்ற பெருமையும் ரஜினி பெற்றுள்ளார்.
ஹிந்தியில் முன்னணி கதாநாயகன் அந்தஸ்து பெற்ற ரஜினிகாந்த் இதுவரை 25 ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுவும் அமிதாப் பச்சன் , அமீர்கான் , சத்ருகன் சின்ஹா , வினோத் கன்னா, அனில் கபூர், சஞ்சய் தத் , ஷாருக் கான், ஹிருத்திக் ரோஷன் , ஜாக்கி ஷெராப் என்று ரஜினிகாந்த் அனைத்து பாலிவுட் நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் இருந்து பான் இந்தியா அந்தஸ்து பெற்ற நடிகராக 1980 களிலேயே ரஜினி கோலோச்சி இருந்தார். கே.பாலசந்தர் , பாரதிராஜா , மணிரத்னம் , ஷங்கர் என உச்ச இயக்குனர்களின் திரைப்படங்களிலும் நடித்து இருந்தார்.
தமிழ் சினிமாவில் முதன் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கதவை சிவாஜி திரைப்படம் மூலம் ரஜினி திறந்து வைத்தார். அதே போல 200 கோடி , 500 கோடி மார்க்கெட்டையும் முதலில் தொட்ட தமிழ் நடிகரும் ரஜினிகாந்த் தான்.இந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் திரையில் இருந்து ஓய்வு பெறப் போகிறார் என்ற செய்தி வெளியாகி அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
75 வயதாகும் நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் தன் பொன்விழா ஆண்டை பூர்த்தி செய்துள்ளார். தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் ரஜினிகாந்த் பிசியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை தொடர உள்ளது. அதன் ரீலீஸ் 2026 ஜூனில் இருக்கலாம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜெயிலர் 2 திரைப்படத்தின் பணிகள் முடிந்த உடன் ரஜினிகாந்த் , நகைச்சுவை திரைப்படங்களுக்கு பெயர் போன சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதற்கு முன்னர் சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அந்த திரைப்படத்தின் நகைச்சுவை காட்சிகள் பெருமளவில் பேசப்பட்டது. சமீபமாக கலவையான கதை அம்சம் கொண்ட கதையில் நடித்த ரஜினி இந்த திரைப்படத்தில் அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகிறது.
இடையில் பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நாடியவாலாவின் தயாரிப்பில் ரஜினி நடிக்க உள்ளதாக சில தகவல்கள் உள்ளன.இதற்கிடையில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் பல தசாப்தங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக செய்திகள் பரவியது. தமிழ் சினிமாவின் இரண்டு உச்ச நடிகர்கள் சேர்ந்து நடிப்பதால் அதற்கான எதிர்பார்ப்புகள் எகிறி உள்ளது. ஆரம்ப காலக் கட்டத்தில் ரஜினி கமல் இணைந்து நடித்து இருந்தாலும் பின்னாளில் இருவரின் வளர்ச்சியை கருதி சேர்ந்து நடிக்கவில்லை.
இப்போது தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு நனவாகி உள்ளது. இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத திரைப்படமாகவும் , அனைவரும் கொண்டாடும் வகையில் இருக்க வேண்டும் என்று ரஜினி நினைக்கிறார். ரஜினி - சுந்தர் சி படம், கமல் - அன்பறிவ் படம், ரஜினி - கமல் - நெல்சன் படம் எல்லாவற்றையும் கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
இந்நிலையில் தற்போது ரஜினி சினிமாவில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்து இருப்பதாக வெளியாகும் தகவலுக்கு ரஜினி தரப்பு எந்த விளக்கம் இன்னும் கொடுக்கவில்லை என்றாலும் அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாகவே இருக்கும்.