விமர்சனம்: தேவரா - லாஜிக் மீறல்கள் இருந்தாலும் படம் நகரும் விதம் 'சபாஷ்'!
ரேட்டிங்(3.5 / 5)
ஆந்திர திருப்பதி லட்டு கலப்பட பிரச்சனை ஒரு புறம் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், பரபரக்கும் ஒரு பான் இந்திய மாஸ் படம் ஆந்திராவிலிருந்து வந்திருக்கிறது. ஜூனியர் என்.டி.ஆர். நடித்துள்ள தேவரா. கொரட்டலா சிவா இப்படத்தை இயக்கி உள்ளார்.
அதிகாரி ஒரு கிரிமினலை பிடித்து ஒருவரை பற்றி விசாரிக்கிறார். செங்கடல் என்ற பகுதியில் அந்த நபர் இருப்பதாக அந்த கிரிமினல் சொல்கிறான். கடலும், மலையும் சூழ்ந்த அந்த செங்கடல் பகுதியில் ஒரு முதியவரை சந்திக்கிறார் அதிகாரி. அந்த அதிகாரி சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை பகிர்ந்து கொள்கிறார். செங்கடல் பகுதியில் வரும் கடத்தல் பொருட்களை இந்திய கடற்படையினருக்கு தெரியாமல் கப்பலுக்கே சென்று கைப் பற்றி கரைக்கு எடுத்து வருகின்றனர், இந்த செங்கடல் பகுதிக்கு அருகில் உள்ள நான்கு கிராம மக்கள். இதற்கு பின்னால் ஒரு அரசியல் பின் புலம் வாய்ந்த ஒரு நபர் இருக்கிறார்.
கப்பலுக்கு சென்று பொருட்களை கைப்பற்றி எடுத்து வரும் வேலையை தேவராவும் அவரது நண்பர்களும் செய்து வருகிறார்கள். ஒரு சமயம் நேவி அதிகாரி ஒருவர் நீங்கள் வெடி குண்டு போன்ற ஆயுதங்களை கடத்துகிறீர்கள். இது தவறு என்று புரிய வைக்கிறார். இதனால் மனம் மாறும் தேவரா இந்த கடத்தல் வேலையை செய்ய வேண்டாம் என்கிறார். ஆனால் நண்பர்கள் மறுக்க, மோதல் வெடிக்கிறது. இந்த மோதலில் சிலர் கொல்லப்படுகிறார்கள். தேவரா கடலுக்குள் சென்று மறைந்து விடுகிறார். கடலுக்குள் சென்று கடத்தலில் ஈடு பட முயற்சி செய்பவர்கள் பிணமாக கரை ஒதுங்குகிறார்கள். தேவராதான் இந்த கொலைகளை கடலில் இருந்து கொண்டு செய்கிறார் என கிராம மக்கள் நம்புகிறார்கள். இதனால் கடலுக்கு சென்று கடத்தல் தொழிலை செய்ய ஊர் அஞ்சுகிறது. 12 ஆண்டுகளுக்கு பின்பு வில்லனின் வற்புறுத்தலின் காரணமாக தேவராவின் மகன் தன் தந்தையை கொல்ல கடலுக்குள் செல்கிறார். கடலுக்குள் என்ன மர்மம் ஒளிந்திருக்கிறது என்பதுடன் தேவரா படத்தின் முதல் பாகம் முடிகிறது.
சுமார் 3 மணி நேர நீளம் கொண்ட இப்படத்தில் முதல் பதினைந்து நிமிடத்திற்குள் நாம் இன்வால்வ் ஆகி விடுகிறோம். அழகான மலை, கடல் என நாம் ரசிக்க ஆரம்பிக்கும் போதே கப்பலுக்குள் நடக்கும் கடத்தல் காட்சி 'வாவ்' என சொல்ல வைக்கிறது. கடலுக்குள் மிதக்கும் எலும்புக்கூடு, மைதானத்தில் நடக்கும் மல்யுத்தம், ஊர் ஆயுதங்கள், கப்பல், கடல் என காட்சிக்கு காட்சி விஸுவல் விருந்து வைத்திருக்கிறார் டைரக்டர். பிரம்மாண்டமாக செலவு செய்து விட்டோம் இது போதும் என்று நினைக்காமல் கதைக்காக உழைத்திருக்கிறார் டைரக்டர். லாஜிக் மீறல்கள் இருந்தாலும் படம் நகரும் விதம் சபாஷ் சொல்ல வைக்கிறது.
டைரக்டரான கொரட்டலா சிவாவின் இந்த கனவை தன் தோளில் சுமந்து கொண்டு சேர்த்திருப்பவர்கள் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு மற்றும் ஆர்ட் டைரக்டர் சாபு ஷெரில் என்ற இரண்டு தமிழர்கள்தான். ஆம்... இந்தியாவில் முதல் முறையாக நீருக்கடியில் ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட்ட தேவரா படம் ரத்ன வேலு இல்லாமல் சாத்தியப்பட்டிருக்காது. கோணங்களை அமைத்த விதத்திலும், லைட்டிங்கின் நுட்பத்திலும் உலக தரத்தை காட்டி விட்டார். ஷாபு ஷெரில் தான் உருவாக்கிய கப்பலுக்குள்ளும், கிராமத்திற்கும் நம்மை அழைத்து சென்று விட்டார். இந்தியாவில் எந்த மொழிகாரர்கள் படம் எடுத்தாலும், தொழில்நுட்ப ஏரியாவில் நம் தமிழர்களின் பங்களிப்பு இருப்பது தமிழர்களாகிய நமக்கு பெருமை சேர்க்கும் விஷயம். அனிருத் நம் தமிழ் சினிமாவில் இசை அமைப்பதை போலவே இந்த படத்திலும் இசை அமைத்திருக்கிறார். பெரிய வேறுபாடு இல்லை.
ஜூனியர் என். டி. ஆர் நடிப்பில் சீனியர் என்று சொல்லலாம். ரொமான்ஸ் செய்யும் போதும், 'டான்ஸ்' ஆடும் போதும் தாத்தா NT ராமாராவை நினைவு படுத்துகிறார். பான் இந்திய படங்களில் ஒவ்வொரு மொழியில் இருந்தும் ஒவ்வொரு நடிகரை நடிக்க வைப்பார்கள். இந்த படத்தில் சையப் அலி கான், கலையரசன், பிரகாஷ் ராஜ், டாம் சாக்கோ என ஒவ்வொரு மொழியிலிருந்தும் ஒவ்வொருவர் நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தனது பங்களிப்பை சரியாக தந்திருக்கிறார்கள். கதாநாயகி ஜான்வி கபூர் கவர்ச்சிக்கு தரும் முக்கியத்துவத்தை நடிப்புக்கு தரவில்லை.
மாறுபட்ட ஒரு ஆக்ஷன் படத்தை பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு தேவரா சரியான தேர்வு.