என்ன தான் பிறந்த ஊரை விட்டு வெளியேறி மற்றொரு இடத்தில் தஞ்சம் புகுந்தாலும் ஓடி விளையாடி வளர்ந்த ஊரின் வாசம், மக்கள், சொந்தம் போன்றவை நம் உள்ளத்தின் அடியாழத்திலிருந்து கொண்டே இருக்கும். ஒரு நல்ல மனிதனிடம் ஒரு நாள் பேசினால் போதும். அவை கிளர்ந்து வெளியே வந்து விடும். அதுவும் அவன் வாயால் மட்டுமல்ல மனதாலும் பேசினால் கேட்பவரும் புதுமனிதராக மாறும் சூழ்நிலை தான் நிதர்சனம். இதற்கு அவன் பெயர் கூடத் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று சொல்ல வந்திருக்கும் படம் தான் மெய்யழகன்.
96 என்ற அற்புதமான படம் கொடுத்து ஆறு ஆண்டுகள் காத்திருந்து இப்படியொரு படத்தை அளித்திருக்கும் இயக்குனர் பிரேம்குமாரின் பொறுமை பாராட்டத்தக்கது. வணிக படங்களுக்கான எந்தவிதமான சமரசங்களையும் செய்து கொள்ளாமல் ஒரு படம் கொடுக்க முடியும் என்று நம்பிய அவருக்கும் இந்தக் கதைமீது நம்பிக்கை வைத்து நடித்த கார்த்தி மற்றும் அரவிந்த்சாமிக்கும், இதைத் தயாரித்த நடிகர் சூர்யா ஜோதிகா தம்பதிக்கும் ஒரு பாராட்டு.
வாலிப வயதில் தங்கள் சொந்த வீட்டை இழந்து பின்னர் அந்த ஊரில் வாழப் பிடிக்காமல் ஊரை விட்டுச் சென்னை வந்து சேர்க்கிறது அர்விந்த்சாமியின் குடும்பம். பின்னர் ஒரு கட்டத்தில் தனது தங்கை (சித்தப்பா மகள்) திருமணத்திற்காகப் பிறந்த ஊரான நீடாமங்கலத்திற்கு வருகிறார் அரவிந்த்சாமி (அருள்மொழி) அங்கு அவருக்குக் கார்த்தியின் அறிமுகம் கிடைக்கிறது. அத்தான் அத்தான் என்று உருகி உருகி சுற்றி வருகிறார் கார்த்தி. இவருக்கோ அவர் பெயர் கூட நினைவில் இல்லை. யாரையாவது கேட்கலாம் என்று நினைக்கும் போதெல்லாம் ஒரு தடங்கல் வந்து சேர்க்கிறது. வேண்டா வெறுப்பாக ஊருக்கு வந்து திருமண வரவேற்பு முடிந்து திரும்ப ஓடி விட வேண்டும் என்ற நினைப்பில் இருந்த அரவிந்த்சாமி பேருந்தைத் தவறவிட அந்த ஒரு இரவு கார்த்தியுடன் அவர் வீட்டில் தங்க நேரிடுகிறது. அந்த இரவு தான் அவர் வாழ்க்கையை மாற்றுகிறது. மனிதர்கள்மீதான அவர் பார்வையும் மாறுகிறது. இது தான் இந்தப் படத்தின் கதை.
ஸ்பாய்லர்கள் என்ற ஒன்று இது போன்ற படங்களுக்குக் கிடையாது. ஏனெனில் இது எந்தவிதமான திருப்பங்களோ, சஸ்பென்ஸோ இல்லாத ஒரு படம். பார்க்கும் ஊர் நிஜம். மக்கள் நிஜம். சம்பவங்கள் நடந்திருக்கக்கூடும். பேசப்படும் விஷயங்களும், அரசியலும் நாம் கடந்து வந்தவை. ஆனாலும் ஏதேனும் ஒரு விஷயம் நம் மனத்தைத் தைக்கும் என்பது உண்மை. அது கல்யாண வீடாக இருக்கட்டும், அதில் கடந்து செல்லும் பால்ய காதலாக இருக்கட்டும், பாசத்தில் திக்கு முக்காட வைக்கும் ராஜ்கிரண் போன்ற சொந்தங்களாகட்டும். நம் முகத்தில் ஒரு புன்னகையும், மனதில் சில ஏக்கங்களும் ஒட்டியிருக்கும். அதுவும் அந்தக் கல்யாண மேடையில் அண்ணன் தங்கை உரையாடல்களும், நடவடிக்கைகளும், பார்ப்பவர்கள் மட்டுமல்ல படத்தில் பங்குப் பெற்றவர்கள் கண்களிலும் கண்ணீர் கோடுகள். கோவிந்த் வசந்தாவின் இசையில் இந்தக் காட்சி மட்டுமே ஒரு கவிதை. பார்த்துச் சலித்த ஒரு சம்பவம் தான் என்றாலும் சாகாவரம் பெற்ற தங்கை செண்டிமெண்ட் காட்சி.
ஒரு படத்தில் சிறிய வேடங்களில் கூடத் தெரிந்த முகம் என அமைந்து அவர்களும் இயல்பாக அதைச் செய்துவிட்டால் மனதில் ஒரு நிறைவு ஏற்படும். இதில் அப்படித் தான். ஜெயப்ரகாஷ், தேவதர்ஷினி, கருணாகரன், ஸ்ரீ திவ்யா, இளவரசு, பூக்காரப் பெண், கோவில் யானை, வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு மாடு என அனைவர்க்கும் தலா ஒரு நல்ல காட்சியைப் பிரித்துக் கொடுத்து விட்டார் இயக்குனர். ராஜ்கிரணும் ஜெயப்ரகாஷும் போனில் பேசும் காட்சி, ஸ்ரீதிவ்யாவும் அர்விந்த்சாமியும் போனில் பேசும் காட்சி, கடைசியில் கார்த்தியும் அர்விந்த்சாமியும் போனில் பேசும் காட்சியென ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு நெகிழ்ச்சி.
இந்தப் படத்தில் பிரச்சினைகளே இல்லையா. உண்டு. படத்தின் நீளம். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடும் அளவுக்கு இந்தப் படத்தில் வலுவான கதை இல்லை. முதல் பாதி போனதே தெரியவில்லை என்று புன்முறுவலுடன் வந்து உட்கார இரண்டாம் பாதி முழுதும் இவர்கள் இருவரும் பேசுகிறார்கள் பேசுகிறார்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் என்ன ஆரம்பித்த கதையை விட்டு இயக்குனர் பேச நினைத்த அரசியலுக்குள் எல்லாம் நுழைகிறது படம். ஸ்டெர்லைட் விவகாரம், விடுதலைப் புலிகள், சோழ சாம்ராஜ்யப் போர்கள், பாடத்திட்டத்தில் உள்ள வித்தியாசங்கள் எனத் திக்குத் தெரியாமல் போகிறது.
என்ன தான் இளையராஜாவிற்கு நன்றி என்று போட்டு விட்டாலும் அவர் பாட்டை அப்படியே உபயோகித்தால் கேஸ் போட்டுவிடுவார் என்று பாட்டாகப் பாடுவது போலக் காட்சி அமைத்த இயக்குனரின் சாமர்த்தியம் சபாஷ். ஒரு கட்டத்திற்கு மேல் இந்த உரையாடல்கள் அயர்ச்சியை உருவாக்குவதால் இவர்களுக்குள் இருக்கும் உறவுச் சங்கிலி அறுந்து தொங்குகிறது. ஒரு பெயர் தெரியவில்லை என்று இவர் போராடும் அளவுக்கு என்ன நடந்து விட்டது. சொந்தங்கள் யாரிடம் கேட்டாலும் சொல்லப் போகிறார்கள். வழியா இல்லை. அதை அவரிடமே கேட்க மீண்டும் ஒரு முறை பேச ஆரம்பிக்கப் பதினைந்து நிமிடம் கடக்கிறது. திரையரங்கில், பின்னால் இருந்து ஒருவர் சொல்லித் தொலைடா பேரை. வீட்டுக்குப் போக வேணாம் என்று சத்தமாகவே குரல் கொடுத்தார்.
மெட்ரோ ரயில்போல அமைதியாக அதே சமயம் விர்ரென்று சென்ற முதல் பாதி இரண்டாம் பாதியில் கூட்ஸ் வண்டிபோல உருளுகிறது. அதுவரை இருந்த அழுத்தங்கள் படம் முடியும்போது சுத்தமாக இல்லை. இது போன்ற படத்திற்கு இன்னும் கொஞ்சம் அழுத்தமான நிறைவான கிளைமாக்ஸ் சற்று பொருத்தம் என்றே தோன்றியது. நல்ல அழகான நாவல் படித்துக் கொண்டிருக்கும்போது அதன் முடிவு இப்படி இருந்தால் எப்படி என்று ஊகித்துக் கொண்டு இருப்போம். அப்படி எதுவும் இல்லாமல் வெறுமையாகச் சப்பென்று முடிந்தால் எப்படி இருக்கும். இந்த முடிவு அப்படித் தான் இருந்தது. இந்தப் படத்திற்கு சோகமான முடிவு என்று ஒன்று இருக்க முடியாது. ஆனால் நிறைவான முடிவு ஒன்றை யோசித்திருக்கலாம்.
எப்படி இருந்தாலும் தான் சொல்ல வந்த கதையைக் கமர்ஷியல் முலாம் பூசாமல், தனக்கு பிடித்த விதத்தில் தான் சொல்வேன்; ஒரு தமிழ்ப்படத்திற்குத் தேவையான எதுவும் இல்லாமல் படம் எடுக்க முடியும்; மக்களை ரசிக்க வைக்க முடியும் என மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் பிரேம்குமார். இந்தப் படத்தின் எந்த ஒரு ப்ரேமையும் போட்டோ கார்டாக வைக்கலாம் என்ற அளவில் தரமான ஒளிப்பதிவைத் தந்துள்ள மகேந்திரன் ஜெயராஜிற்கு ஒரு பூங்கொத்து. குறிப்பாக்க கிளிகளுடன் அரவிந்த்சாமி இருக்கும் காட்சியும், டாப் ஆங்கிளில் ரயில் செல்வதைப் படமாக்கியிருந்த காட்சியும் ஒரு சோறு பதம். படத்தின் ஓட்டத்தில் மயங்காமல் கொஞ்சம் கத்தரி போட்டிருந்தால் எடிட்டர் கோவிந்தராஜையும் பாராட்டி இருக்கலாம். டெல்டா கல்யாணம், மற்றும் கமல்ஹாசன் பாடும் யாரோ இவன் யாரோ பாட்டில் மட்டும் கவனம் செலுத்திய கோவிந்த் வசந்தா பின்னணி இசையில் வழக்கம்போலக் கிதார், வயலின் எனக் கலந்து கட்டி தாக்கி இருக்கிறார். ஆயினும் 96 வயலின் பிட்போல இதில் ஒன்று அமையாதது ஏமாற்றம்.
சொந்த ஊரை விட்டு வெளியூரில் வசித்து வருபவர்களா? குடும்பக் கதைகள் எப்படி இருந்தாலும் பார்ப்போம் எனச் சொல்லும் ஆட்களா? தஞ்சாவூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களா? கூட்டுக் குடும்பத்தின் பெருமையை உணர்ந்தவர்களா? இந்தப் படம் நிச்சயம் உங்களைக் கவரும். வெகுஜன சினிமாவின் அடையாளங்களான குத்துப் பாட்டு, நடனம், சண்டை, பிரம்மாண்டம் போன்றவை எதிர்பார்த்து செல்பவர்கள் வண்டியைத் 'தேவரா' திரைப்படம் பக்கம் திருப்பவும்.