பெங்காலி சினிமாவின் புகழ்பெற்ற நடிகையான சுசித்ரா சென், தனது வாழ்க்கையின் கடைசி 36 வருடங்களை கிட்டத்தட்ட வெளியுலக தொடர்பின்றி தனிமையில் கழித்தார். இது விசித்திரமாக இருந்தாலும், அவரது இந்த தனிமை முடிவுக்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. அவரது வாழ்க்கையில் அப்படி என்னத்தான் நடந்தது என்று பார்ப்போமா?
ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்த நீலாம்பரி கதாபாத்திரத்தை இன்றுவரை யாராலும் மறக்க முடியாது. படையப்பா வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், விரக்தியில் அனைத்தையும் துறந்து இருட்டறையில் பல ஆண்டுகள் வாழ்வார். யாரையும் பார்க்காமல் பேசாமல், படையப்பாவிற்கு மகள்கள் பிறந்து அவர்கள் பெரியவர்கள் ஆகும் வரையில், நீலாம்பரி இருட்டறையில்தான் இருப்பார். அதேபோலதான், தோல்வி மற்றும் பிற காரணங்களால் தன் வாழ்வில் 32 வருடக் காலம் தனிமையில் இருந்த நடிகை சுசித்ரா சென்னின் கதையும் விவரிக்க முடியாத ஒன்றாகும். வாருங்கள் அவரின் கதையை விரிவாகப் பார்ப்போம்.
சுசித்ரா சென், அவரது இயற்பெயர் ரோமா தாஸ்குப்தா. 1931-ஆம் ஆண்டு பங்களாதேஷில் உள்ள பப்னா என்ற இடத்தில் பிறந்தார். 1947-ஆம் ஆண்டு, இந்தியாவின் பிரிவினைக்குப் பிறகு அவரது குடும்பம் கொல்கத்தாவிற்கு குடியேறியது. அதே ஆண்டு, பிரபல தொழிலதிபர் ஆதிநாத் சென்னின் மகன் திபநாத் சென் என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு, 1952-ஆம் ஆண்டு 'சேஷ் கோத்தாய்' (Shesh Kothaay) என்ற பெங்காலி திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் வெளியிடப்படவில்லை. பிறகு, 1953-ஆம் ஆண்டு நடிகர் உத்தம் குமாருடன் இணைந்து நடித்த 'ஷாரே சுவத்தோர்' (Sharey Chuattor) என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றி, பெங்காலி சினிமாவில் உத்தம் குமார்-சுசித்ரா சென் ஜோடியை ஒரு ஐகானாக மாற்றியது. அவர்கள் இருவரும் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக 30-க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்து சாதனை படைத்தனர்.
'அக்னி பரிக்ஷா' (Agnipariksha), 'சாத் பாகே பந்தா' (Saat Paake Bandha), 'தீப் ஜ்வலே ஜாய்' (Deep Jwele Jaai) போன்ற பல திரைப்படங்கள் இவரை உச்ச நடிகையாக நிலைநிறுத்தின. 'ஆந்தி' (Aandhi) மற்றும் 'தேவதாஸ்' (Devdas) போன்ற ஹிந்தித் திரைப்படங்களிலும் நடித்தார். 'சாத் பாகே பந்தா' திரைப்படத்திற்காக 1963-ஆம் ஆண்டு மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை வென்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையைப் பெற்றார்.
அவரது கடைசி திரைப்படம் 1978-ஆம் ஆண்டு வெளியான 'ப்ரோனாய் பாஷா' (Pronoy Pasha). இந்தப் படம் தோல்வியடைந்த பிறகு, அவர் பொது வாழ்க்கையிலிருந்து முழுமையாக விலகினார். இந்த விலகலுக்கு காரணம் தனிபட்ட வாழ்க்கையும் என்று சொல்லப்படுகிறது.
சுசித்ரா சென் தனது இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். அவரது கணவரும் மாமியாரும் அவரது சினிமா வாழ்க்கைக்கு மிகுந்த ஆதரவு அளித்தனர். ஆனால், சினிமா வாழ்க்கை உச்சத்தை எட்டியபோது, அவரால் குடும்பத்திற்கு போதுமான நேரத்தை ஒதுக்க முடியவில்லை. இதனால் கணவருடனான உறவில் விரிசல் ஏற்பட்டது. மனமுடைந்த அவரது கணவர் மதுவுக்கு அடிமையாகி, அமெரிக்கா சென்று அங்கேயே 1970-ஆம் ஆண்டு காலமானார்.
கணவரின் மறைவுக்குப் பிறகு, சுசித்ரா சென் படிப்படியாக நடிப்பதை நிறுத்தினார். அதேநேரத்தில் கடைசி படமும் நன்றாக ஓடாத நிலையில் அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். சுமார் 36 வருடங்கள், அவர் தனது வீட்டின் ஒரு குறிப்பிட்ட அறைக்குள் தனிமையில் வாழ்ந்தார். நெருங்கிய குடும்பத்தினரைத் தவிர வேறு யாரையும் அவர் சந்திக்கவில்லை. தனது 83-வது வயதில், அதே தனிமை அறையில் மாரடைப்பு காரணமாக அவர் காலமானார்.
படத்தில் வரும்போது 'இதெல்லாம நிஜத்தில் நடக்குற காரியமா?' என்று போறபோக்கில் கேட்டுவிடுவோம். ஆனால், உண்மையில் நடந்ததாக வரும் செய்திகள் உண்மையில் நம்மை வாய் அடைக்க வைத்துவிடுகிறது.