
காலம் காலமாக உலகம் முழுவதும் இந்த காதலை போற்றுகிறார்கள். காதல் இல்லாத மதமும் இல்லை, ஊரும் இல்லை, நாடும் இல்லை. அதைப்போல சினிமாவிலும் சரி, வரலாற்றிலும் சரி, காதல்தான் மையமாக இருந்தது இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது.
காதல் இல்லாத உலகமும் இல்லை, உயிரும் இல்லை.
அந்தக் காலத்தில் இந்த காதல் என்ற வார்த்தையை கேட்டாலே பெற்றோர்களும் சரி, உறவினர்களும் சரி, எதோ கொலை செய்ததுபோல தம்முடைய பிள்ளைகளை பார்ப்பார்கள். இன்னும் சில வீட்டில் காதலை பற்றி பொதுவாக பேசினாலே குற்றமாக கருதப்பட்டது. காதல் திருமண வெற்றி என்பது மிகக் குறைவாகவே காணப்பட்டது
ஆனால் தற்போதைய சூழ்நிலை அப்படி இல்லை. முக்கால்வாசி பெற்றோர்கள் காதலை ஏற்றுக்கொண்டு திருமணத்தை நடத்திதான் வைக்கிறார்கள்.
அதையும் மீறி சில பேருடைய வாழ்க்கையில் காதல் தோல்வி ஏற்படத் தான் செய்கிறது. பெற்றவர்களின் வற்புறுத்தலாலோ அல்லது வேறு ஏதாவது சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவோ ஒரு பெண்ணோ அல்லது ஆணோ வேறு ஒரு துணையை திருமணம் செய்துகொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகிறார்கள். ஒரு சில பேர் சின்ன சின்ன மனக் கசப்பாலும் வேறொரு துணையை நாடுகிறார்கள்.
அதற்காக பாதிக்கப்பட்டவர்கள் அவள்/அவன் தனக்கு துரோகம் செய்ததாக தானாகவே நினைத்துக்கொண்டு வாழ்க்கையை வீணடிப்பது மிகவும் தவறு. அதையே நினைத்து கொண்டு மன அழுத்தத்திற்கு ஆளாகி பைத்தியம் பிடித்தவர்போல இருக்கிறார்கள்.
எதற்கு இவ்வாறு நீங்கள் தன்னையே அழித்துக்கொள்ள வேண்டும்? ஆத்திரத்தையும் வஞ்சகத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்? நம்முடைய நெருங்கிய உறவுக்காரர்கள் யாரோ நம்மை விட்டு பிரிந்தாலோ அல்லது இறந்தாலோ, நாம் என்ன செய்வோம். சிறிது நாட்களுக்கு அவர்களை பற்றி நினைப்போம், பிறகு மெது மெதுவாக அவர்களுடைய எண்ணமே வராதபடிக்கு மறந்துவிடுவோம், இல்லையா? அதைப் போலத் தானே இதுவும்.
இரண்டு பேரும் சேர்ந்து, ஒன்றாக பீச், பார்க், சினிமா என்று சுற்றித்திரிந்து, சில சமயங்களில், ஒன்றாக லாங் டிராவல் சென்று, ஒருவருக்கொருவரா சுகதுக்கங்களை பகிர்ந்துகொண்ட பிறகு அவனோ/அவளோ வேற ஒருவரை கரம் பிடித்தால் அதிலிருந்து வெளிவருவது சுலபமான காரியமாக இருக்க முடியாது. ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அதிலிருந்து வெளியே வந்தால்தான் உங்களுடைய எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
காதல் தோல்வியிலிருந்து விடுபட உதவும் சில குறிப்புகளை இப் பதிவில் பார்க்கலாம்:
மனதிற்கு பிடித்தமான விஷயத்தை செய்யவும்: சொல்வது எளிது தான் ஆனால் செய்வது மிகவும் கடினம். ஆனால் வேறு வழியில்லை, உங்களுக்கு பழைய நினைவை அகற்ற வேண்டும் என்றால் சில பிடித்த விஷயங்களில் உங்கள் மனதை செலுத்தியே ஆகவேண்டும்.
தொலைக்காட்சி பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது, வெளியே செல்வது என ஏதாவது ஒன்றில் கவனத்தை திசை திருப்ப வேண்டும்.உங்களுக்கு பிடித்தமான விஷயங்களை கண்டறிந்து அதில் கவனம் செலுத்தினால் பழைய மேட்டரை எளிதில் மறந்துவிடலாம்.
தனிமையை தவிர்க்கவும்: காதல் தோல்வி ஏற்பட்ட சில மாதங்களோ அல்லது சில வருடங்களோ தனியாக இருக்காதீர்கள். இந்த சமயத்தில் தனிமையை தவிர்ப்பது நல்லது.
முடிந்தவரை நண்பர்களுடனோ, உறவினர்களுடனோ அல்லது அலுவலகத்தில் பணிபுரிபவருடனோ இருக்க முயற்சி செய்யுங்கள். நண்பர்களை சந்திக்கும்போது, முக்கியமாக அவர்களிடம் உங்களுடைய முன்னாள் காதலன்/காதலியை பற்றி பேசுவதை தவிர்க்கவேண்டும்.
புதிய செயல்களை தொடங்கவும்: பழைய நினைவுகளில் இருந்து வெளியே வருவதற்கு இந்த புதிய செயல்கள் உங்களுக்கு உதவும் வகையில் ஒரு நல்ல ஆறுதலையும் புத்துணர்ச்சியையும் தரும். புதிய விஷயங்கள் எதையேனும் செய்ய தொடங்குங்கள். ஓவியமோ அல்லது இசையிலோ எதாவது ஒன்றில் சேர்ந்து கொள்ளுங்கள். புதியதாக எதாவது ஒரு கல்வியை பயில தொடங்குங்கள். இப்படி செய்யும்போது அது உங்கள் மனதையும் உடலையும் ஒருநிலைப்படுத்தி சீராக வைக்கும்.
பயணத்தை/இட மாற்றத்தை மேற்கொள்ளவும்: உங்களுக்கு திரும்ப திரும்ப அதே நினைவு வரும்போது அதை தவிர்க்க சற்று தூரமான இடத்திற்கு பயணத்தை மேள்கொள்ளவும். நண்பர்களோடும் உறவினர்களோடும் சேர்ந்து கொண்டு பயணத்தை மேற்கொள்ளவும். இல்லை என்றால் சிறிது நாட்களுக்கு அலுவலகத்தில் இடமாற்றம் வாங்கி கொண்டு வேறு எதாவது ஊரில் பணி புரியலாம்.
காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு இவற்றையெல்லாம் கடைபிடிப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கலாம், ஆனால் கடைபிடித்தீர்களேயானால் உங்களின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.