குபேரா படத்தின் ஆடியோ லாஞ்சில் தனுஷ் பேசியதுதான் சமூக வலைதளங்களில் பேசும்பொருளாக மாறியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான தனுஷ், தன்னைச் சுற்றி பரவி வரும் பல்வேறு வதந்திகள் மற்றும் எதிர்மறை கருத்துக்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற 'குபேரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ், தனது ரசிகர்கள் வெறும் ரசிகர்கள் அல்ல, அவர்கள் தனது வாழ்க்கை துணைகள் என்றும், எந்த ஒரு வதந்தியாலும் தன்னை அசைக்க முடியாது என்றும் ஆவேசமாக தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக தனுஷின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு செய்திகளும், வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. குறிப்பாக, முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடனான விவாகரத்துக்குப் பிறகு, அவரது திருமணம் மற்றும் பிற உறவுகள் குறித்து பல யூகங்கள் கிளம்பின. இதற்கு இடையே நடிகை நயன்தாரா மற்றும் தனுஷ் இடையே ஒரு பிரச்னை வெடித்தது.
அவர் என்ன பேசினார் என்று பார்ப்போமா? "இருட்டில் ஒரு பாதை தேடி நடக்கும்போது, மேலிருந்து ஒரு கை என் கையைப் பிடித்து வழிநடத்துகிறது. அந்த தருணத்தில், எனது ஒவ்வொரு ரசிகரும் ஒரு டார்ச் லைட்டாக மாறி எனக்கு வழிகாட்டுகிறார்கள். என் பற்றி எவ்வளவு வதந்திகள் வேண்டுமானாலும் பரப்புங்கள். எவ்வளவு எதிர்மறைப் பிரச்சாரங்கள் வேண்டுமானாலும் செய்யுங்கள். ஒவ்வொரு முறையும், என் படம் வெளியாவதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, எதிர்மறைப் பிரச்சாரத்தைத் தொடங்கி அதை பரப்புங்கள்.
சில வதந்திகளைப் பரப்பி என்னை முடித்துவிடலாம் என்று நினைத்தால், அதைவிட முட்டாள்தனமான ஒன்று இருக்க முடியாது. நீங்கள் ஒரு செங்கல்லை கூட அசைக்க முடியாது. உங்கள் எண்ணங்கள் தான் நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதை தீர்மானிக்கும்" என்று தனுஷ் கர்ஜித்தார்.
இவர் இப்படி யாரை தாக்கி பேசுகிறார் என்பது ரசிகர்களுக்கு குழப்பமாகவே இருந்தது. ஆகையால், சமூக வலைதளங்கில் சிலர் நயன்தாராவிற்காக பேசியிருப்பார் என்றும், சிலர் தனுஷ் சிவகார்த்திகேயனை தாக்கியிருப்பார் என்றும், சிலர் அனிருத்திற்கு என்றும், சிலர் சிம்புவுக்கு என்றும் கூறுகின்றனர்.
இதுகுறித்து ப்ளு சட்டை மாறன் பேசியதுதான் தற்போது பேசும்பொருளாக மாறியுள்ளது. “தனுஷ் யாரை எதுக்காக சொல்கிறார் என்று யாருக்குமே புரியலை. தனுஷுக்கு வெளிப்படையா பேச தைரியமும் இல்ல, பேசாம இருக்கவும் முடியல, ஒரே தமாசு தான் போங்க. ஆடியோ லான்ச் விழாவை ஒரு ரசிகர் மன்றமா மாத்துறதே வேலையா போச்சு. படத்துல பொழுதுபோக்கு இல்லைனாலும் நடிகர்கள் இது மாதிரி மேடைப்பேச்சு செம என்டர்டெயின்மெண்டா இருக்கு. ரஜினி பாடி லேங்குவேஜை காபி அடித்து பேசுகிறார்.” என்று சக்கப்போடு போட்டு பேசியிருக்கிறார்.