

நடிகர் தனுஷின் ரசிகர்கள் தங்களது ரசிகர் மன்ற கொடியை அறிமுகப்படுத்தியது, சமூக வலைதளங்களில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. இது வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவல் கிடைத்ததை போல் ஆகிவிட்டது. தனுஷ் ரசிகர்களின் இந்த செயல், அவர் அரசியலுக்கு வரத் தயாராகி விட்டாரா? என்பதைப் போன்ற பல்வேறு கேள்விகளையும் யூகங்களையும் ஏற்படுத்தி வருகிறது.
துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான தனுஷ் , 24 ஆண்டுகளையும் கடந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கோலோச்சி வருகிறார். தமிழ் திரையுலகம் மட்டுமின்றி ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலும் அவர் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள படங்கள் அனைத்தும் இவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது.
தனது திரைப்படங்களின் வெற்றி விழாவில் பேசும் தனுஷ், எப்போதும் அரசியல் ரீதியாக பேசுவதில்லை. மேலும் அவர் அரசியல் ரீதியாக எந்த ஒரு அமைப்புடனும் நெருக்கம் காட்டியதும் இல்லை. தற்போது தனுஷ் நடிப்பில் மட்டுமல்லாமல் பாடகர் ஆகவும் , பாடலாசிரியராகவும் இயக்குனராகவும் பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளார்.
எப்போதும் பட வாய்ப்புகளைக் கொண்ட நடிகராக இருந்த பொழுதிலும் , அவ்வப்போது திரைப்படங்களையும் இயக்கி வருகிறார். சமீபத்தில் அவரது இயக்கத்தில் இட்லி கடை என்ற திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. நீண்ட காலமாக தமிழ் சினிமாவின் ரசிகர்கள் தங்களது நடிகர்களின் பெயரில் ரசிகர் மன்றங்களை முதலில் ஆரம்பிப்பதும் , பிற்காலங்களில் ரசிகர் மன்றங்கள் நற்பணி மன்றமாக மாறுவதும் இயல்பான ஒரு விஷயம் தான். எம்ஜிஆரை தவிர மற்ற நடிகர்கள் அரசியல் கட்சிகளை ஆரம்பித்து , பெரிய அளவு தோல்விகளையும் சினிமா வாய்ப்பையும் இழந்த காரணத்தினால் பெரும்பாலான நடிகர்கள் அரசியல் பக்கம் ஒதுங்காமல் இருந்தனர்.
தற்போது நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்று இருப்பதால் , அவர் பல நடிகர்களுக்கு உந்துதலாக இருக்கிறார். அதனால் இப்போது பல நடிகர்களுக்கும் அரசியல் ஆர்வம் ஏற்பட்டு வருகிறது. விஜய்க்கு முன்பே நடிகர் விஷால் அரசியலில் ஆர்வம் கட்டி வந்தார் , முன்பு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் அவர் போட்டியிடுவதற்கு முயற்சி செய்தார். அதன் பின்னர் அவர் அரசியல் ரீதியாக எந்த ஒரு முயற்சியும் தொடங்காமல் தற்போது சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
சமீபத்திய காலத்தில் நடிகர் சூர்யா அரசியலுக்கு வருவதாக அவரது ரசிகர் கூறிய நிலையில் பின்னர் அது மறுக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் ரசிகர்கள் இணைந்து புதிய ரசிகர் நற்பணி மன்ற கொடியினை அறிமுகப்படுத்தினர். x தளத்தில் இந்த செய்தி அதிவேகமாக பரவியது. அதை தொடர்ந்து பலரும் பல்வேறு விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தனுஷ் விரைவில் அரசியலில் இறங்க உள்ளாரா? என்பது போன்ற கருத்துக்கள் பரவ தொடங்கின. விஜய் தேர்தல் அரசியல் தொடர்பாக சர்க்கார் திரைப்படத்தில் நடித்த பின்னர் அரசியலில் களம் இறங்கினார் . அது போல தனுஷும் கொடி என்ற அரசியல் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தனுஷ் ரசிகர்கள் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்துடன் , அதன் நடுவில் நட்சத்திரம் பொறிக்கப்பட்டு கொடியினை வடிவமைத்துள்ளனர். நட்சத்திரம் நடுவில் தனுஷ் கும்பிடுவதைப் போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதன் மேல் "எண்ணம் போல் வாழ்க்கை" என்று தனுஷின் பிரபலமான வசனம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து நடிகர் தனுஷ் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்பட வில்லை.