

தமிழக முதல்வர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன், கடந்த ஜனவரி 9-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடத் திட்டமிடப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் சென்சார் சான்றிதழ் பிரச்சனை காரணத்தால் இப்படம் இன்று வரை ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.
இதற்கு நடுவே தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலும் வந்துத விட்டதால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் திரைப்படத்தை வெளியிடுவது சரியாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் படத்தை தேர்தல் ஆணையம் பார்க்க வேண்டும் என சென்சார் போர்டு வலியுறுத்தியது.
தற்போது தேர்தல் முடிந்து, தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் ஜனநாயகன் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. ஜனநாயகன் திரைப்படத்தை ஜூலை 23-ல் வெளியிட படக்குழுவினர் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றனர்.
தற்போது சென்சார் ஆணையம் ஜனநாயகன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து படத்தை ஜூலை 23 அல்லது ஜூலை 29 ஆகிய இரண்டு தேதிகளில் ஏதேனும் ஒரு தேதியில் வெளியிடப்பட குழு தீவிரமாக செயல்பட்டு வருவதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ஜனநாயகன் படத்தை ஜூலை 23ஆம் தேதியே வெளியிட படக்குழு மும்முரமாக செயல்பட்டு வருவதாக சற்று முன் தகவல்கள் கிடைத்துள்ளன. சென்சார் ஆணையம் ஜனநாயகன் படத்தில் மியுட் மற்றும் கட் செய்ய வேண்டிய இடங்களை படக்குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதன்படி தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்சார் ஆணையத்தின் பரிந்துரைப்படி படத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் திருத்தங்கள் செய்யப்பட்ட படத்தை மீண்டும் தணிக்கைக் குழுவிற்கு படக்குழு அனுப்ப உள்ளது. அதன்பிறகே அதிகாரப்பூர்வமாக சென்சார் சான்றிதழ் கிடைக்கும். ஜனநாயகன் திரைப்படத்திற்கு இம்முறை எப்படியும் சென்சார் சான்றிதழ் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில், ஜூலை 23-ம் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.
ஜனநாயகன் திரைப்படத்தில் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகே மியூட் மற்றும் கட் செய்யப்பட்ட படக் காட்சிகள் தணிக்கைக் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கும் மேலாக ஜனநாயகன திரைப்படம் எப்போது திரைக்கு வரும் எனக் காத்திருந்த தளபதி ரசிகர்களுக்கு, தற்போது இந்த செய்தி நற்செய்தியாக அமைந்துள்ளது. இருப்பினும் படத்தின் வெளியிட்ட தேதி அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்படவில்லை.
தற்போதைய நிலவரப்படி படக்குழு திட்டமிட்ட தேதிக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் ரிலீசுக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முழுமையாக அரசியலில் இறங்கிய முதல்வர் விஜய்க்கு, இது கடைசித் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் ஓர் உணர்வுப்பூர்வமான பிணைப்பு உள்ளது. 'ஜனநாயகன்' திரைப்படம் ரிலீஸ் குறித்த தகவல்கள், கடந்த 6 மாதங்களாக தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது சென்சார் சிக்கல் தீர்ந்திருப்பதால், படக்குழு அடுத்தகட்ட வேலைகளில் இறங்கியுள்ளது. இதன்மூலம் ஜூலை மாத இறுதியில் தமிழகத்தின் தியேட்டர்களை முதல்வர் விஜய் ஆக்கிரமிக்கப் போவது மட்டும் உறுதி.